284 பிள்ளைகளுக்கு ஒரு தாயா? ஆச்சரியப்படாதீர்கள்..! ஒரு மரம் நடுவதற்கே விழா எடுக்கும் காலத்தில், ஊர் முழுவதும் ஆழமாய் வேரூன்றிய ஆலமரங்களே இவரின் பிள்ளைகள், சுவாசிக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்த "மர"த்தாயை சந்திப்போமா?...

சாலு மரத திம்மக்கா என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்! 80 ஆண்டுகளுக்கு முன்புவரை பொட்டல் காடாக இருந்த பெங்களூருவின் கிராமப்புற மாவட்டமான மாகடி தாலுகாவில் உள்ள கூதூர் கிராமத்துக்குச் செல்லும் வழியெங்கும் சுமார் 4 கிலோமீட்டர் சாலை நெடுக இருபுறங்களிலும் 284 ஆலமரங்களை நட்டவர் இவர்.

முன்பு வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட கூதூர் கிராமம் செல்லும் வழி இப்போது குளிர்ச்சியாகக் காணப்படுகிறது என்றால் அதற்கு இவர் நட்ட மரங்கள்தான் காரணம். இவர் நட்ட 284 ஆலமரங்களும் அழகு மிளிர, சாலையின் இருபக்கங்களிலும் இருந்து மென்காற்றை வீசி நம்மை வரவேற்கின்றன. மரங்களில் உள்ள பலவிதப் பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி குதூகலிக்கின்றன.

இவர் ஏன் இத்தனை ஆலமரங்களை நட்டார், அவற்றை இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது எதனால்?

கூதூர் கிராமத்துக்கு அருகே உள்ள ஹுளிகல் கிராமத்தைச் சேர்ந்த சாதாரண கிராமத்துப் பெண்ணான திம்மக்கா, சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையானார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது. இதைக் காரணம் காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா நிறைய காயப்பட்டுவிட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை. மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஓடிப்போனது. இப்போது 101 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.

பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா? உயிரும், உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா? பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள் சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா, மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.

இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார். ஆனாலும் முன்வைத்த காலை பின்வைக்கப் போவது இல்லை என்ற முடிவுடன் தினமும் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.

ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரச் செடிகள் இலைகளும், தழைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவத் தொடங்கினார்.

வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக திம்மக்கா வளர்த்தார்.

மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கி வைத்து, வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றிப் பயன்படுத்தினார்.

அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாராமல் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்கப் புறப்பட்டு விடுவார்.

ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டு வந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை, கால்களில் ரத்தம் வழிய, ஒ...வென்று அழுகை. பதறி ஓடி வந்த சிக்கண்ணா, 'என்னம்மா ரொம்ப வலிக்குதா?’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க! கொண்டு வந்த தண்ணீர் கொட்டிப் போச்சு... அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.

இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் வார்த்தைகளின்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது.

விளையாட்டுப் போல வளர்த்த மரங்கள் இன்று அவ்வழியே செல்லும் மக்களை குளுகுளு என வைத்தபடி, நெடுநெடுவென வளர்ந்து நாட்டிற்கு பயன் தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றன.

இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய்கள். அதை அங்கீகரிக்கும் விதமாய் அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியுள்ளது.

1991ம் ஆண்டில் சிக்கண்ணா மறைந்தார். இருந்தாலும், 'என் கணவர் இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைகளை விட்டு நான் எங்கேயும் வரலை' என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா ஹுளிகல்லிலேயே 500 ரூபாய் ஓய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன்’ வாழ்ந்து வருகிறார்.

அவர் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.

100 வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை. ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார்.

இவர் பெற்ற விருதுகளில் சில..,

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓக்லாண்ட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு, இப்போது 'திம்மக்கா சுற்றுச்சூழல் கல்வி வளங்கள்' என்று அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

தேசிய குடியுரிமை விருது - 1995, இந்திரா பிரியதர்ஷணி வ்ரிக்க்ஷமித்ரா விருது - 1997, சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை, இவருடைய விருதுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

திருமதி. திம்மக்கா அவர்கள் எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும் அவருடைய செயலுக்கு ஈடுஇணையே இல்லை. அவருக்கு நம் நன்றிகள்.

நன்றி: SVS