அரசியல் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என உலக அரங்கில் தனித்துவத்துடன் திகழும் ரஷ்யாவில், பாரதத்தின் கலாச்சாரத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற மாபெரும் "இந்தியா தினம்" (India day) கொண்டாட்டத்தில், நமது ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் கலைப் படைப்புகளை வழங்கினார்கள். நம் இந்திய திருநாட்டின் சார்பில் நம் பாரம்பரிய கலைகளை அந்தப் பெருமைமிகு மேடையில் அரங்கேற்றும் வகையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் கலந்துகொண்டது ஈஷாவிற்கு மட்டுமல்ல, சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு மட்டுமல்ல, நம் நாட்டு மக்கள் அனைவருக்குமே பெருமை தரக்கூடிய நிகழ்வாகும்.

கடந்த ஆகஸ்ட் 10, 11 & 12 ஆகிய நாட்களில் மாஸ்கோவில் சொக்கோல்நிக்கி பூங்காவில் நடைபெற்ற "இந்தியா தின" கொண்டாட்டங்களில் சம்ஸ்கிருதி மாணவர்கள் நம் தேசத்தின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அரங்கேற்றம்செய்து பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றனர்.

ரஷ்யாவில் மினி இந்தியா

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, ரஷ்யா தலைநகரமான மாஸ்கோவிலுள்ள இந்திய சமூகத்தினர் ரஷ்யாவின் கலாச்சாரத் துறை மற்றும் இந்திய தூதரகத்தின் ஜவஹர்லால் நேரு கலாச்சார மையத்தின் உதவியுடன் "இந்தியா தினம்" எனும் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்திய கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் 3 நாட்கள், நாள்முழுக்க நடைபெறும் திருவிழாவில், பாரதத்தின் பாரம்பரிய கலைகளையும் கலாச்சார தன்மைகளையும் வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலைக்குழுக்கள் சார்பாகவும் பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்கள் சார்பாகவும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆகஸ்ட் 10-12 வரை சொக்கோல்நிக்கி பூங்கா இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஓர் இடமாக இருந்தது. ஆடை அலங்கார நிகழ்ச்சி, ரஷ்யர்கள் மற்றும் இந்தியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகப் பயிற்சி வகுப்புகள் என இந்திய கலாச்சார நிகழ்வுகள் அரங்கேறின.

பார்வையாளர்கள் தாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்று எண்ணும் அளவிற்கு அங்கு இந்தியாவின் பாரம்பரிய உணவுகளும் ஆடை ரகங்களும், பாரம்பரிய உடைகளும், பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களும் காட்சிக்கு விருந்தாயின.

ரஷ்யர்களைக் கவர்ந்த சம்ஸ்கிருதி கலைநிகழ்ச்சி

சம்ஸ்கிருதி மாணவர்களின் களரிப்பயட்டு நிகழ்ச்சியோடு, ‘பக்தி’ எனும் தலைப்பில் தொடர்ச்சியாக மூன்று நாட்களும் மூன்று விதமான பக்தியை வெளிப்படுத்தும் விதமாக பரதநாட்டிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் மாணவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இந்த பக்தி எனும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியில், தெய்வீகத்தை குருவாக பார்க்கக்கூட பக்தியை குறிக்கும் "தாஸ்ய பக்தி," தெய்வீகத்தை நண்பராக பக்தி கொள்வதைக் குறிக்கும் "சாக்ய பக்தி," தெய்வீகத்தை காதலராக பக்தி கொள்ளும் "மாதுர்ய பக்தி," ஆகியவை நாட்டியத்தின் மூலம் நுட்பமான அபிநயங்களாலும் பாவனைகளாலும் சம்ஸ்கிருதி மாணவர்களால் வெளிப்படுத்தப்பட்டன.

மாணவர்களின் ஒவ்வொரு தனிநபர் நாட்டிய நிகழ்ச்சியும் துளசிதாசரின் கீர்த்தனங்கள், ராமதேவரின் கானக் கவிதைகள், அக்கா மகாதேவியின் பாடல்கள், சதாசிவ பிரம்மேந்திரர் பாடல்கள் மற்றும் பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் கவிகள் என பல்வேறு ஒப்பற்ற மனிதர்களின் வார்த்தைகள் இணைந்தபடி வழங்கப்பட்டன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ரஷ்யாவில் நடந்த இந்திய தின கொண்டாட்டத்தில் சம்ஸ்க்ருதியின் ஒரு அர்ப்பணிப்பாக கவிதை, பாடல் மற்றும் நடனத்தின் மூலம் பக்தியை கொண்டாடும் தன்மை அமைந்தது.

மாணவர்களின் ரஷ்ய பயணம் குறித்து சத்குரு…

சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி இது. இதில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழு மற்றும் நம் யோகா ஆசிரியர்களும் கலந்துகொண்டுள்ளது பற்றிய தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சத்குரு. ஈஷா யோகா ஆசிரியர்கள் ரஷ்யாவில் பலவிதமான யோக வகுப்புகளை மேற்கொள்ள உள்ளனர் என்பதையும் அவர் தெரிவித்தார்.

இந்திய நாள் கொண்டாட்டத்தில் ரஷ்ய மக்களை வாழ்த்தி தமது செய்தியை பகிர்ந்துள்ள சத்குரு,

“ரஷ்யாவிலுள்ள எல்லோரும் இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறீர்கள் என எதிர்பார்க்கிறேன். இந்தியாவின் பல வகையான, ஆழமும் துடிப்பும் மிகுந்த வண்ணமயமான கலாச்சாரத்தை கொண்டாடுவீர்கள் என்று நினைக்கிறேன். இங்குள்ள உணவு வகைகள் ஒன்று போதுமே எங்களைப் பற்றி கட்டியம் கூற!”

என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உணவு வகைகள் மட்டுமல்ல, இந்த கலாச்சாரம் பல்வேறுபட்ட சிறப்புமிக்க அம்சங்களை உலகுக்கு அளித்திருக்கிறது என்றும் அவைகளில் மிக மிக முக்கியமாக கருதுவது, மனிதன் தன் அடிப்படையான உடல் மற்றும் உயிரை எப்படி கையாளுவது என்பதையும், அதனை உணர்ந்து படிப்படியாக ஒரு உன்னத செயல்நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த நாடு இந்தியா என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய தினக் கொண்டாட்டத்தை வாழ்த்தி மேலும் அவர் கூறியபோது, இந்தியாவும் ரஷ்யாவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், இவர்கள் ஒன்றாக சேர்ந்து, இரண்டர கலந்து இரு கலாச்சாரங்களையும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு இந்த இந்தியா தினம் போன்ற நிகழ்சிகள் வாய்ப்பாக அமையும் என்பதையும் தெரிவித்தார்.

ரஷ்ய பயணம் எப்படியிருந்தது? மாணவர்கள் சொல்கிறார்கள்...

"ரஷ்யாவில் நடக்கும் இந்த விழாவைப் பற்றி எனக்கு தெரிந்தபோது மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனென்றால் இதுதான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம். விழாவிற்கு ஒரு நாள் முன்புதான் மூன்று நாட்களும் நாங்கள் களரி நிகழ்ச்சியை நிகழ்த்த வேண்டுமென்று சொன்னார்கள். முதல்நாள் நிகழ்ச்சி நடக்கவிருந்த பூங்காவிற்கு சென்றபோது, அந்த இடம் முழுதும் இந்தியா மாதிரியே இருந்தது. முதலில் மூன்று நாட்களிலும் 30 நிமிடங்கள் மட்டுமே எங்கள் நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

முதல்நாள் நாங்கள் 30 நிமிடங்களுக்கு நிகழ்ச்சியை வழங்கினோம். இரண்டாவது நாள் எங்களுக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. கடைசிநாள் 45 நிமிட நிகழ்ச்சி முடிந்தபின், எங்களை இன்னுமொருமுறை நாட்டிய நிகழ்ச்சி வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். மிக மகிழ்ச்சியுடன் ஆடினோம். நாங்கள் "வந்தே மாதரம்" பாடலுக்கு நடனமாடியபோது, அங்கிருந்த ரஷ்ய பார்வையாளர்களும் சேர்ந்து உரத்த குரலில் வந்தே மாதரம் எனப் பாடினார்கள். சிலர் கண்ணீரில் கரைந்தார்கள்."- லோகேஷ், சம்ஸ்கிருதி மாணவர்

"ரஷ்ய மக்கள் மிகவும் கருணையுள்ளம் கொண்டவர்கள், நட்புணர்வுடன் இந்திய கலாச்சாரத்தை மதிப்பவர்கள். நமது நடனத்தை மிகவும் ரசித்தார்கள். எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். நாங்கள் எங்கெல்லாம் சென்றோமோ, மக்களுடன் தெருவில் நின்று புகைப்படத்திற்காக புன்னகை புரிந்தோம். ரஷ்ய தன்னார்வத் தொண்டர்களை மறக்கவே முடியாது. இவ்வளவு பெரிய தேசத்தில் எங்களுக்கு சிறப்பாக உதவினார்கள். எனக்கு அளித்த இந்த வாய்ப்பிற்கு நான் சத்குருவிற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."-- க்ஷீரஜா மானஸ்வினி, சம்ஸ்கிருதி மாணவி

"ரஷ்யாவில் இந்திய தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. எங்களுக்கு மூன்று நாட்களிலும் நாட்டிய நிகழ்ச்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ரஷ்யர்களுக்கு எங்களது நாட்டியம் மிகவும் பிடித்துப்போனதால், மறுநாள் நிகழ்ச்சியின் நேரத்தைக் கேட்டு தெரிந்துகொண்டார்கள். ஒரு சிலரோ எங்களிடம் விலாசத்தை வாங்கிக் கொண்டு கோவையிலுள்ள ஈஷா ஆசிரமத்திற்கு வருவதாக சொன்னார்கள்.-  ராஜேஸ்வரி, சம்ஸ்கிருதி மாணவி

எங்கள் நாட்டியத்தைப் பார்த்த சில ரஷ்யர்களின் கண்ணில் நீர் கசிந்தபடி "வந்தே மாதரம்" என்று உரக்கச் சொன்னார்கள். இவ்வளவு ஆழமாக அவர்களை எங்கள் நடனத்தின் மூலமாக தொடுவோமென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒருசில ரஷ்ய மக்கள் நமது இந்திய நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடினார்கள். ரஷ்யக் குழு ஒன்று சமஸ்கிருதத்தில் ருத்ரம் என்ற ஸ்லோகத்தை தெளிவாக உச்சரித்ததைப் பார்த்து நாங்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. நமது தெய்வீகமான கலைகளின் ஆழ்ந்த அறிவை உணர்ந்து, அதை அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மகிழ்சியடைந்தோம்." - ரஷ்வந்த், சம்ஸ்கிருதி மாணவர்

"முதல் முறையாக எனக்குக் கிடைத்த வெளிநாடு செல்லும் வாய்ப்பு இது. மாஸ்கோ மிகச் சுத்தமாக இருந்தது. அங்குள்ள மக்கள் எங்களுடன் மிகுந்த நட்புடனும், இயல்பாகவும் பழகினார்கள். தன்னார்வத் தொண்டர்களின் உதவியில்லாமல் அங்கு இருப்பது கடினமாக இருந்திருக்கும். அவர்களுடைய உதவியையும் நேரத்தையும் அளித்ததற்கு எங்கள் நன்றிகள். இந்த வாய்ப்பை அளித்த சத்குருவிற்கு மனமார்ந்த நன்றி." - சந்தோஷியா, மாணவி சம்ஸ்கிருதி

"மாஸ்கோ மிக அழகான இடம். பாரம்பரியமும் புதுமையும் கலந்த ஓர் இடம். நிகழ்ச்சி முடிந்தவுடன் நகரத்தை சுற்றிப் பார்த்தோம். வரலாற்று பெருமை வாய்ந்த இடம், அதை அவர்கள் நன்றாக பேணிப் பாதுகாக்கிறார்கள்."- ஸ்வாதி, மாணவி சம்ஸ்கிருதி

"இந்திய கலாச்சாரத்தின்பால் ரஷ்ய மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், மதிப்பையும் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது." - சாயுஜ்யா, மாணவி சம்ஸ்கிருதி

ரஷ்யாவில் உள்ள தனியார் அமைப்பான SITA நமது ஈஷா குழுவினரை சிறப்பாக வரவேற்று உபசரித்தது. இந்த அமைப்பின் தலைமை இயக்குனர் திரு.கோத்வானி மனோஜ் அவர்கள் ஈஷாவிலிருந்து சென்றவர்களுக்கான விசா அனுமதி முதல், மற்ற சட்டப்பூர்வமான அனுமதிகள், இந்த பயணத்திற்கான மற்ற பொருளாதார ரீதியான மற்றும் மருத்துவ ரீதியான முன்னேற்பாடுகளுக்கு பொறுப்பேற்றிருந்தார். அவருக்கும் SITA நிறுவனத்துக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்!