பொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை! - ஒரு பண்ணை விசிட்

ஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்களத்தில், இயற்கை விவசாயி திரு.சோமசுந்தரம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கூடவே கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்குதமிழ் இனிக்க, பண்ணையைப் பற்றி அறிவோம் வாருங்கள்!
 

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 11

ஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்களத்தில், இயற்கை விவசாயி திரு.சோமசுந்தரம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கூடவே கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்குதமிழ் இனிக்க, பண்ணையைப் பற்றி அறிவோம் வாருங்கள்!

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திரு.சோமசுந்தரம் அவர்கள், இளம் வயதில் விவசாயம் செய்த அனுபவமும் கைகொடுப்பதால் இயற்கை விவசாயத்தை கடந்த 3 வருட காலமாக சிறப்பாக செய்துவருகிறார்.

சுமார் 22 ஏக்கர் நிலத்தில் கரும்பு, நெல், வாழை போன்றவற்றை பயிர் செய்துள்ளார்.

தென்னையுடன் சேர்ந்த கரும்பு

பன்னாரி மலையடிவாரத்தில் பொக்கனக்கரையில் உள்ள அவரது பண்ணைக்கு சென்றபோது பாதை கரடு முரடாகவே இருந்தது; பார்த்த இடமெங்கும் பொட்டல் காடாகவே இருந்தது. அங்கே தூரத்தில் பாலைவனச்சோலை போல் ஒரு பசுமையான இடம் தெரிந்தது. அது சோமசுந்தரம் அவர்களின் கரும்பு பண்ணைதான்!

பொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை! - ஒரு பண்ணை விசிட், Pottal kattukku naduve oru pasunjolai - oru pannai visit

பொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை! - ஒரு பண்ணை விசிட், Pottal kattukku naduve oru pasunjolai - oru pannai visit

10 ஏக்கர் நிலத்தை புதிதாக வாங்கி, திருத்தி சீர் செய்துள்ள இவர், தண்ணீருக்காக அருகில் உள்ள தனது பண்ணையில் இருந்து 3 கி.மீ தூரத்திற்கு குழாய் பதித்து, கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளார். தென்னங்கன்றுகளுக்கு இடையில் ஊடுபயிராக கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு பயிர்தான் பிரதானமாகத் தெரிகிறது.

“ஏனுங்க நம்ம சோமசுந்தரம் அண்ணாவுக்கு அனுபவம் நல்லா கைகொடுக்குதுங்க. அறுக்கத் தெரியாதவன் கையில ஆயிரம் கதிரறுவாள் இருந்தமாறி ரொம்ப பேரு நெலத்த வச்சுகிட்டு எப்படி பக்குவமா விவசாயம் செய்யணும்னு தெரியாம முழிப்பாங்க. ஆனா... சோமசுந்தரம் அண்ணா ரொம்ப கெட்டிக்காரராக்கும். அட வாங்க பண்ணைய நருவசா பாத்துப்போட்டு வருவோம்!”

10 ஏக்கர் நிலத்தை புதிதாக வாங்கி, திருத்தி சீர் செய்துள்ள இவர், தண்ணீருக்காக அருகில் உள்ள தனது பண்ணையில் இருந்து 3 கி.மீ தூரத்திற்கு குழாய் பதித்து, கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளார்.

கரும்பை இரண்டு பருவமாக பிரித்து ஜனவரி மாதத்தில் 5 ஏக்கரும், மே மாதத்தில் 5 ஏக்கரும் பயிர் செய்துள்ளார் திரு.சோமசுந்தரம். இதனால் வருடத்தில் இரண்டு அறுவடை கிடைக்கிறது. கரும்பு 1110 ரகத்தை சிவகிரியில் இருந்து வாங்கி வந்திருக்கும் இவர், வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளி விட்டு, ஒரு பரு கரணையை இரண்டு அடிக்கு ஒன்று என நட்டுள்ளார். இதனால் நிறைய தூர்கள் வெடித்து நன்றாக வளர்ந்துள்ளது.

இடைவெளியில் பலதானிய விதைப்பு செய்து 60 நாள் கழித்து மடக்கி உழுதிருக்கிறார். ஊடுபயிராக உள்ள தக்காளி காய்ப்பில் உள்ளது.

மாதம் ஒரு முறை ஜீவாமிர்தமும் விடும் இவர், பரப்பளவு அதிகமாக உள்ளதால் சொட்டு நீரில் அடைப்பு ஏற்படாமல் இருக்க ஜீவாமிர்தத்தை பண்ணையாட்களை கொண்டு நேரடியாக கரும்பு தூர்களில் விடுவதாகவும் தெரிவித்தார்.

பாலேக்கர் கூறியபடி ஒரு பரு கரணை நடவு செய்யும்போது கரணைக்கான செலவு மற்றும் நடவுக்கூலி குறைவதாக சொல்கிறார் சோமசுந்தரம். 8 அடி இடைவெளி என்பதால் நல்ல காற்றோட்டமும், சூரிய ஒளியும் கிடைக்கப்பெற்று கரும்பு நல்ல உயரத்துடன் வளர்ந்துள்ளது.

கரும்பை அரைக்க பட்டரை போடவுள்ளதாகவும், நாட்டு வெல்லம் தயாரித்து அவரே விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

“அட கரும்பு திண்ணுபோட்டு அதுக்கு கூலி வாங்குன கதையா நம்ம அண்ணா கரும்ப விதைச்சுபோட்டு, பக்குவமா அறுவடையும் செஞ்சு, பொறவு அதைய நல்லா யாவாரமும் செஞ்சிர்றாப்டி! பெரிய கெட்டிக்காரருதாங்கண்ணோவ்! சோமசுந்தரம் அண்ணா பண்ணைய நருவசா பாத்தோமுன்னா அதுல பாலேக்கர் ஐயாவோட ஐடியாக்கள்தானுங்க ஏகத்துக்கும் தெரியுதுங்க! ஐயாவ நம்ம அண்ணா செரியா ஃபாலோ பண்றாப்டி!”

நெல் சாகுபடி

பொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை! - ஒரு பண்ணை விசிட், Pottal kattukku naduve oru pasunjolai - oru pannai visit

இவரது பண்ணையில் வேறொரு இடத்தில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் நெல் பயிர்செய்துள்ளார். கிச்சிலி சம்பா மற்றும் சீரக சம்பா ரகங்கள் பூக்கும் தருவாயில் உள்ளது. அடியுரமாக எதையும் இடவில்லை! நவதானியச் செடிகள் மற்றும் தக்கைப்பூண்டு போன்றவற்றை விதைத்து அதை மடக்கி உழுதிருக்கிறார்.

25 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை இரண்டிரண்டு நாற்றுக்களாக நட்டுள்ளார். நட்ட 25வது நாளில் ஜீவாமிர்தம் பாய்ச்சியுள்ளார். நெல் வயலைச் சுற்றி வரப்போரங்களில் தட்டை பயிர் (காராமணி) வளர்த்துள்ளார்.

பூச்சிகளை கட்டுப்படுத்த தட்டை பயிர் பேருதவியாக இருக்கிறது. அசுவினி பூச்சிகளுக்கு தட்டை செடியின் இலைகள் உணவாகிறது, அசுவினியால் கவரப்பட்டு பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன.

நெற்பயிருக்கு ஜீவாமிர்தம் மட்டுமே உரமாக கொடுக்கிறார், பஞ்சகவ்யாவை இலைதெளிப்பாக பயன் படுத்துகிறார்.

“பூவுன்னா வண்டு வரும் பொண்ணுன்னா வெக்கம் வரும்னு சொல்லிப்போட்டு என்ற அப்பாரு என்ற தலையில கொட்டுவச்சது இன்னும் யாவகம் இருக்குதுங்கோ. அட கெரகத்துக்கு... நம்ம நாட்டுல இப்ப ரொம்ப பேரு இதுதெரியாம பூவுக்கு வர்ற அல்லாப்பூச்சியையுமே ரசாயன மருந்தடிச்சு சாவடிச்சுபோடுறாங்கோ. எது நன்மை செய்யும் பூச்சி, எது தீமை செய்யும் பூச்சின்னு நம்ம சோமசுந்தரம் அண்ணா மாறி தெரிஞ்சிகிட்டா ரொம்ப சூப்பரா இருக்குங்ணா!”

வாழை சாகுபடி

pottal-kattukku-naduve-oru-pasunjolai-oru-pannai-visit-4

6 ஏக்கரில் ஆந்திரா ரஸ்தாளி பயிர் செய்துள் இவர், வாழைக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுகிறார். மாதம் 2 முறை ஜீவாமிர்தமும், ஒரு முறை பஞ்சகவ்யாவும் விடுகிறார். வாழைத்தார் சராசரியாக 10 கிலோ உள்ளது; அதிகபட்சமாக 15 கிலோ வரை காய்க்கிறது.

வேர் அழுகல் நோய்

ஓரிரு மரங்கள் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. வேர் அழுகல் நோய் ஏற்பட்டால் இலைகள் படிப்படியாக காய்ந்து இறுதியில் மரத்தின் அனைத்து இலைகளும் காய்ந்து மரம் இறந்து விடும்.

இயற்கை விவசாயம் செய்வதால் அவரது பண்ணையில் நோய் பாதிப்பு குறைவாக உள்ளது; அருகிலுள்ள பண்ணைகளில் அறுவடை செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து மரங்களை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

“வலுத்தவனுக்கு வாழைனு அந்தக்காலத்தில சும்மாவா சொல்லி வச்சாங்க?! நீரும் நெலமும் செழிப்பா இருந்தாதானுங்க வாழைய நடமுடியும். அதிலயும் இந்த மாதிரி நோய் தாக்குதல் சமயத்துலதான் இயற்கை விவசாயத்தோட அரும தெரியுமுங்க.”

புதிய உத்திகள்

“ஈஷா விவசாய இயக்கம், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல நல்ல செயல்களை செய்கிறது. முன்னோடி விவசாயிகள் தோள் கொடுத்தால் இந்த செயல் எளிமையாகும். நான் என்னால் இயன்றஅளவு இதில் பங்காற்றுவேன்”

இயற்கைமுறையில் பூச்சி விரட்டி தயாரிக்க கும்மட்டிக்காயை பயன்படுத்தும் திரு.சோமசுந்தரம், பூச்சிகள் இதை உண்ணும் போது மயங்கி விழுந்து பின்னர் இறந்து விடுகிறது என்று தெரிவித்தார்.

பயிரிடப்படாத புதிய மண்ணை வளப்படுத்த, கனிந்த வாழைப்பழம், புளித்த மோர், அழுகிய பப்பாளிப் பழங்கள், கனிந்த பிஞ்சு வாழைப்பழங்கள் இவைகளை ஊறவைத்து பிசைந்து ஜீவாமிர்தத்துடன் கலந்து விடுவதால் ஜீவாமிர்தத்தின் சத்து மேலும் அதிகரிப்பதாக சொல்கிறார்.

“அட சாமி... கீரை வச்ச சட்டியில ரசம் வச்சமாறி இவரு கும்மட்டிக்காய வச்சு பூச்சு விரட்டி செய்யுறாரு, வாழைப்பழத்த வச்சு ஜீவாமிர்தம் செய்யுறாரு பாருங்கண்ணா! இயற்கையில எல்லாத்துக்கும் தீர்வு இருக்கத்தானுங்க செய்யுது; அதைய நாமதானுங்க செரிய கவனிக்கணும்!”

“ஈஷா விவசாய இயக்கம், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல நல்ல செயல்களை செய்கிறது. முன்னோடி விவசாயிகள் தோள் கொடுத்தால் இந்த செயல் எளிமையாகும். நான் என்னால் இயன்றஅளவு இதில் பங்காற்றுவேன்” என்று கூறிய திரு. சோமசுந்தரம் விடைபெற்றார்.

 

maintitle="'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்"  subtitle="" bg="teal" color="black" opacity="on" space="30" link="http://isha.sadhguru.org/blog/ta/tag/bhumithayin-punnagai-iyarkai-vazhi-vivasayam/"