தலை முடி பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம்! பகுதி 2 

“ஏம்ப்பா நம்ம கௌரிக்கு தலையெல்லாம் ஒரே பொடுகா இருக்கு. தலையில் பேன் கூட அதிகமா இருக்கு. நானும் டிவி பார்த்துட்டு ஏதேதோ ஷாம்பு எல்லாம் ட்ரை பண்ணி பாத்துட்டேன். சரியான மாதிரி தெரியல. இதுக்கு ஏதவாது தீர்வு இருந்தா கொஞ்சம் சொல்லேன்.” பக்கத்து வீட்டு அக்கா தனது எட்டு வயது குழந்தை கௌரியின் பொடுகு பிரச்சினை பற்றி என்னிடம் கேட்க, நான் கூகுல் பணிப்பெண்ணை கேட்டேன்.

ஏராளமான தீர்வுகள் கூகுலில் சொல்லப் பட்டிருந்தாலும், நம்பகத்தன்மை மிக்க இயற்கை வழியிலான தீர்வு வேண்டுமென்பதால், நான் வழக்கம்போல உமையாள் பாட்டியின் வீட்டுக்கதவை தட்டினேன்.

பாட்டி வீட்டில் இல்லை என்பது தெரிந்ததும் பிறகு வரலாமென கிளம்பியபோது, தூரத்தில் தெருமுனையில் பாட்டி நடந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“என்ன பாட்டி எங்க போனீங்க? ஷாப்பிங்கா?”

“ரெண்டு நாள் ஸ்கூல் லீவு. அதனால பேரன் பேத்திகள கூட்டிகிட்டு டவுன் வரைக்கும் போய், அவங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு சாமான்கள் எல்லாம் கொஞ்சம் வாங்கிக்கொடுத்தேன். அப்படியே இரண்டாவது பேரன் குமாருக்கு பொடுகு பிரச்சனை இருக்கறதால, நாட்டு மருந்து கடையில் போய் சில தைலமெல்லாம் வாங்கிட்டு வந்தேன்.” பாட்டி வீட்டின் கதவை திறந்துகொண்டே பதில் கூறினார்.

“கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி இருக்குது பாட்டி” என்றேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“அதுக்குள்ள என்னை தெய்வமாக்கிடாதப்பா…நான் சாதாரண மனுஷிதான்! என்ன விஷயம் சொல்லு.” பாட்டி சிரித்துக்கொண்டே கேட்டார்; நானும் விவரத்தை சொன்னேன்.

அதைத்தொடர்ந்து பொடுகுத் தொல்லையை தீர்ப்பதற்கான சில இயற்கை மூலிகைகள் அடங்கிய தைலங்களைப் பரிந்துரைத்தார்.

பொடுதலை செடியை வேரோடு அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும் என்பதைப் பாட்டி சொல்ல தெரிந்து கொண்டேன். பொடுதலை தைலத்தையும் இதுபோல் தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வரலாம் என்றார்.

மேலும் அவர் சொல்லும்போது…

அருகன் தைலம் இரவில் தடவி காலையில் தலைக்குக் குளிப்பது மற்றும் வெட்பாலை தைலம் தடவி 1 மணிநேரம் கழித்து குளிப்பது மற்றும் வால்மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து தலையில் தடவி ஊறவிட்டு குளிப்பது ஆகியவற்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை கூறினார். அதிமதுரத்தை அரைத்து, கரிசாலைச் சாறு, வேப்பிலைச் சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலைக்குளித்து வந்தால் பொடுகு தீரும் என்பதையும் பாட்டி குறிப்பிட்டார்.

“சரி பாட்டி… பொடுகுத் தொல்லைக்கு தீர்வு சொல்லிட்டீங்க! அப்படியே கொஞ்சம் பேன் தொல்லைக்கும் சொல்லுங்களேன்!” பாட்டியிடம் தொடர்ந்து விண்ணப்பம் வைத்தேன்.

“தலை இருக்கிறவரைக்கும் பேன் இருக்கும்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க. தலைய சுத்தமா வெச்சுக்கிட்டாலே பேன் வராதுப்பா! இருந்தாலும் பேன் தொல்லைக்கும் இயற்கை மருந்து இருக்கு சொல்றேன் கேட்டுக்கோ!

சீதாப் பழக்கொட்டைய தண்ணியில அரைச்சு, தலையில தடவி ½ -1 மணி நேரம் கழிச்சு இளம் வெந்நீர்ல குளித்து வந்தா, பேன் தொல்லை தீரும்.

அதேமாதிரியே வசம்பை நீர்விட்டு அரைச்சு தலையில் தடவி, ½ மணிநேரம் கழிச்சு இளம் வெந்நீர்ல குளித்து வரலாம்.

இல்லைன்னா காட்டுச் சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைச்சு தலையில தடவி,15 நிமிடம் கழிச்சு இளம் வெந்நீரில் குளித்து வரலாம்.”

பாட்டி பேன் தொல்லைக்கு மேற்கண்ட தீர்வுகளை கச்சிதமாக சொல்லி முடித்தார். கூடவே புழுவெட்டு என்ற ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் சேர்த்து கூறினார் பாட்டி.

புழுவெட்டு என்பது தலையில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு ஆங்காங்கே தலைமுடி முழுவதுமாக கொட்டிவிடும் பிரச்சனையாகும். தலையின் மேற்புற தோலில் சில வகையான கிருமிகளால் உண்டாவதாக கூறப்படுகிறது. வெங்காயத்தை இரண்டாக வெட்டி பாதிக்கப்பட்ட பகுதியில் நன்கு தேய்த்து வர வேண்டும். 1 வெங்காயம், 3மிளகு, கல் உப்பு சிறிதளவு சேர்த்து அரைத்துப் பூசி வரலாம். பூசும்போது எரிச்சல் இருந்தால் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம். அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவையெல்லாம் புழுவெட்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகள்.

பாட்டியிடம் விவரங்களையெல்லாம் கேட்டுவிட்டு, பக்கத்து வீட்டு அக்காவிடம் நானே தீர்வு கண்டுபிடித்தது போன்ற ஒரு தொனியில் தைலங்களை வாங்கிக்கொண்டு போய் கொடுத்தேன். பக்கத்து வீட்டுக்காரர்களின் நன்மதிப்பை பெறுவது எதிர்காலத்தில் நமக்கு பல வகைகளில் துணைநிற்கும். பக்கத்து வீட்டு அக்காவின் ரசம் நமக்கு அவ்வப்போது விருந்தாகும்.

குறிப்பு: பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம், அருகன் தைலம், கந்தகம் கலப்பில்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆகியவை ஈஷா ஆரோக்யா மருத்துவமனைகளில் கிடைக்கப் பெறுகிறது.

மருத்துவ குறிப்புகள்: மரு.பா.சக்தி புவனாம்பிகை, ஈஷா ஆரோக்யா மருத்துவமனை சேலம்.