பித்ரு தர்ப்பணம் நடந்த மஹாளய அமாவாசை
மஹாளய அமாவாசை நள்ளிரவில் மிக அமைதியாக நடந்து முடிந்த காலபைரவ சாந்தி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட "ஈஷா பிக்ஷா" திட்டம் ஆகியவற்றை இந்த வாரம் உங்கள் முன் கொண்டு வருகிறோம்.
 
 

மஹாளய அமாவாசை நள்ளிரவில் மிக அமைதியாக நடந்து முடிந்த காலபைரவ சாந்தி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட "ஈஷா பிக்ஷா" திட்டம் ஆகியவற்றை இந்த வாரம் உங்கள் முன் கொண்டு வருகிறோம்.

மஹாளய அமாவாசையில் காலபைரவ சாந்தி

செப்டம்பர் 23ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் மஹாளய அமாவாசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நமது பிறப்பிற்கும் நமது வாழ்க்கை முறைக்கும் பெருமளவு பங்களித்திருக்கும் நமது முன்னோர்களுக்கு நம் அளவிட முடியா நன்றியை, சிறு அர்ப்பணத்துடன் வெளிப்படுத்தும் விசேஷமான நாள் இது. மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை லிங்கபைரவியில் நடந்த “அக்னி அர்ப்பணத்தில்” பக்தர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு நள்ளிரவில், ஈஷா பிரம்மச்சாரிகளின் காலபைரவ மந்திர உச்சாடனையுடன் ஆரம்பித்த "காலபைரவ சாந்தி"யில் தமிழகம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்த 1500 அன்பர்கள் கலந்துகொண்டனர். இதில் 3837 பேருக்கு காலபைரவ சாந்தி செய்தது குறிப்பிடத்தக்கது.

உலக ஓசோன் தினக் கொண்டாட்டம்

உலக ஓசோன் தினக் கொண்டாட்டம், World ozone day celebration

உலக ஓசோன் தினத்தை ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமானது செப்டம்பர் 16ம் தேதியன்று கோவையில் கொண்டாடியது. இதை முன்னிட்டு மாவட்ட கல்வித் துறை வளாகத்தில் 15 பழ மரக் கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட தலைமை கல்வி இயக்குனர் திருமதி. A. ஞான கௌரி அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

தொடங்கப்பட்டது ஈஷா பிக்ஷா

தொடங்கப்பட்டது ஈஷா பிக்ஷா, Isha Biksha Launch

சத்குரு ஞானோதயமடைந்த நாளாகவும், மஹாளய அமாவாசையாகவும் அமைந்த செப்டம்பர் 23ம் தேதியன்று, ஈஷா பிக்ஷா திட்டம் துவங்கப்பட்டது. ஈஷாவின் தொடக்க காலத்திலிருந்து ஈஷாவில் வசித்துவரும் சரஸ்வதி பாட்டி அவர்களின் கரங்களால் இது துவக்கி வைக்கப்பட்டது. மஹாளய அமாவாசை நாள் நமது கலாச்சாரத்தில் அன்னதானம் வழங்க முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அன்னதானம் வழங்குவதற்கும் பித்ருக்களுக்கு ஈமக் காரியங்கள் செய்வதற்கும் இது உகந்த, சக்தி வாய்ந்த காலமாக உள்ளது. இத்தகைய மஹாளய அமாவாசை நாளில் துவங்கப்படும் ஈஷா பிக்ஷா அன்னதானத் திட்டத்திற்காக, நீங்கள் ஒருமுறை வழங்கும் நன்கொடை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் அடுத்த 20 வருடங்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதோடு, உங்களுக்கு ஈஷா மையம் சார்பில் அடுத்த 20 வருடங்களுக்கு, ஆண்டுதோறும் பிரசாதம் மற்றும் சத்குருவின் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்படும்! மேலும் விபரங்களுக்கு : 9442504672

இயற்கை விவசாயக் கருத்தரங்கம்

இயற்கை விவசாயக் கருத்தரங்கம், Project Green Hands conference

இயற்கை விவசாய அமைப்பானது (FOA), செப்டம்பர் 21ம் தேதியன்று, "இயற்கை விவசாயம்" பற்றிய கருத்தரங்கை நடத்தியது. இந்த அமைப்பின் நிறுவனரான திரு.சோலையப்பன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஈஷா பசுமைக் கரங்கள் திட்ட பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200 விவசாயப் பெருமக்களும் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் அவர்களுக்கு ஈஷாவின் சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கபட்டன.

மும்பை கண்காட்சியில் "ஈஷா வித்யா"

மும்பை கண்காட்சியில் "ஈஷா வித்யா", Isha Vidhya in Mumbai

இந்தியாவின் முக்கிய கார்ப்பரேட் நிறுவனமான UBM India சார்பில் நடத்தப்பட்ட ''Giving Back – NGO India 2014' என்ற வருடாந்திர கண்காட்சி மும்பையில் நடந்தது. செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் பல அரசு சாரா நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த கண்காட்சியின் நோக்கமே சமுதாயத்தில் மக்கள் இன்றைய சூழலில் சந்தித்து வரும் பிரச்சனைகளான குழந்தைக் கல்வி, மகளிர் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். அவ்விதத்தில் கிராமப்புற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக துவங்கப்பட்ட "ஈஷா வித்யா" பள்ளிகள் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1