பேரூர் விவசாயி தரும் இயற்கை விவசாய நுட்பங்கள்!

ஈஷா விவசாயக்குழு கோவை மாவட்டம், பேரூரில் உள்ள இயற்கை விவசாயி திரு.தன்ராஜ் அவர்களை அவரது தோட்டத்தில் சந்தித்தது. கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்கு நடை வர்ணனை இடையிடையே சுவாரஸ்யம் கூட்ட, தன்ராஜ் அவர்களின் பண்ணைக்கு நாமும் ஒரு விசிட் செய்வோம் வாருங்கள்!
பேரூர் விவசாயி தரும் இயற்கை விவசாய நுட்பங்கள்!, Perur vivasayi tharum iyarkai vivasaya nutpangal!
 

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 7

ஈஷா விவசாயக்குழு கோவை மாவட்டம், பேரூரில் உள்ள இயற்கை விவசாயி திரு.தன்ராஜ் அவர்களை அவரது தோட்டத்தில் சந்தித்தது. கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்கு நடை வர்ணனை இடையிடையே சுவாரஸ்யம் கூட்ட, தன்ராஜ் அவர்களின் பண்ணைக்கு நாமும் ஒரு விசிட் செய்வோம் வாருங்கள்!

மூடாக்கு முறையினால் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே செலவாகிறதென சொல்லும் திரு.தன்ராஜ் அவர்கள், தென்னைக்கு மாதம் ஒரு முறைத் தண்ணீரும், வாழைக்கு 10 நாட்களுக்கு ஒரு முறைத் தண்ணீரும் விடுகிறார்.

அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மூன்று ஏக்கர் நிலத்தில் தென்னை பயிர் செய்துள்ளார், ஊடுபயிராக வாழை பயிர் செய்துள்ளார். இவரது பண்ணையில் வாழையின் பெரும்பாலான ரகங்களையும் வைத்துள்ளார். பூவன், தேன்வாழை, விருப்பாச்சி, செவ்வாழை, மொந்தன், கதளி, நாடன் போன்ற பல ரகங்கள் வைத்துள்ளார்.

மேலும், ஊடுபயிராக பப்பாளி, காபி, மரங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைச் செடிகளும் தன்ராஜ் அவர்கள் பயிரிட்டுள்ளார்.

“ஐயோ சாமி... கெவுருமெண்ட் உத்யோகத்தில இருந்தவராங்காட்டி இவ்வளவு வெகரமா ஊடு பயிரெல்லாம் போட்ருக்காப்டி நம்ம அண்ணா! நெல்லுக்கு நண்டோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்கு திருவாரூர்த் தேரோடன்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்கோ?! திருவாரூர் தேர் போற அளவுக்கு தென்னையில இடைவெளி விட்டுப்போட்டா பொறவு வாழைய ஊடுபயிரா போடுறதுல என்ன சிரமம் இருக்கப்போகுதுங்க... சரி வாங்க இன்னும் வெகரமா கேப்போம்!”

மூடாக்கு முறையினால் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே செலவாகிறதென சொல்லும் திரு.தன்ராஜ் அவர்கள், தென்னைக்கு மாதம் ஒரு முறைத் தண்ணீரும், வாழைக்கு 10 நாட்களுக்கு ஒரு முறைத் தண்ணீரும் விடுகிறார்.

30 வருட நாட்டு ரகத் தென்னை 25 x 25 இடைவெளியில் உள்ளது, தென்னை மரங்களின் வரிசைகளுக்கு இடையே இரண்டரை அடி ஆழம், மூன்று அடி அகலத்தில் நீளக்குழி (Trench) எடுத்துள்ளார். அதில் வாழை மற்றும் தென்னை கழிவுகளை இட்டு நிரப்பியுள்ளார். ஒரு ட்ரென்ச்சில் விடும் தண்ணீர், அந்த ட்ரென்ச்சில் நிரைந்தவுடன் அடுத்த ட்ரென்ச்சிற்கு தானாகவே செல்லும் படி அமைத்துள்ளார்.

நான்காவது கட்டை G9 வாழை

பேரூர் விவசாயி தரும் இயற்கை விவசாய நுட்பங்கள்!, Perur vivasayi tharum iyarkai vivasaya nutpangal!

ட்ரென்ச்சின் இரண்டு பக்கங்களிலும் வாழையை நட்டுள்ளார். G9 ரக வாழை நான்காவது கட்டையாக வளர்ந்துள்ளது. G9 வாழைத்தார்கள் சராசரியாக 35 கிலோ எடையுள்ளதாக இருக்கிறது.

அனைத்து ரகங்களிலும் சேர்த்து 900 வாழை மரங்கள் உள்ளன. இவைகளின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 60 முதல் 70 வாழைத் தார்கள் கிடைக்கின்றன.

தென்னைக்கும், வாழைக்கும் பெரிதாக எந்த பராமரிப்பும் செய்வதில்லை. பாரமரிப்பு செய்யும்போது தேவையற்ற செலவாகிறது. கிடைக்கும் வருமானம் மட்டுமே போதும் என்று அவரால் இயன்ற ஒரு சில பராமரிப்பு வேலைகளை அவரே செய்து கொள்கிறார்.

“அட... நம்மூர்ல விவசாயிக பராமரிப்பு செய்யிறேன், பக்குவம் பாக்குறேன்னு சொல்லி ரொம்ப செலவழிச்சுபோட்டு, பொறவு உக்காந்து ஒரே அழுவாச்சியா இருப்பாங்கோ! ஆனா... பேரூர் அண்ணாவ மாறி பராமாரிப்ப கொறச்சுகிட்டா வேலயும் கொறையுமுங்கோ!”

எலி, பாம்பு தொல்லைக்கு தீர்வு

பேரூர் விவசாயி தரும் இயற்கை விவசாய நுட்பங்கள்!, Perur vivasayi tharum iyarkai vivasaya nutpangal!

சில விவசாயிகள் மூடாக்கு செய்ய தயங்குகிறார்கள், இதற்கு காரணம் பாம்புத் தொல்லையேயாகும். அத்தகைய பிரச்சினைக்கு திரு. தன்ராஜ் அவர்கள் நமக்கு ஒரு தீர்வைக்கூறுகிறார்.

5 கிலோ வெங்காயத்தை வேகவைத்து 20 லிட்டர் தண்ணீரைக் கலந்து 10 நாட்கள் ஊறவைத்தால் ‘வெங்காயக் கரைசல்’ கிடைக்கும்.

அக்கரைசலுடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து பாசன நீருடன் கலந்து விட்டால் மூடாக்குக்கு இடையில் உயிர் வாழும் பாம்பு, எலி போன்றவை அதில் தங்குவதில்லை, நெடி அடிப்பதினால் பாம்புகள் தூரமாக ஓடிவிடும், சில நேரங்களில் எலிகள் இறந்து கிடப்பதும் உண்டு.

வெங்காய விலை குறைவாக இருக்கும் போது, வருடம் இரண்டு முறை வெங்காயக் கரைசல் பயன்படுத்துவதாகவும், ஓரளவு நன்மை இருப்பதாகவும் தெரிவித்தார்.

“அட சாமி... பாத்தீங்ளா?! சூப்பர் ஐடியாவா இருக்குதே இந்த வெங்காய கரைசல்! ரொம்ப பேரு வெகரம் தெரியாம மூடாக்கு போடுறதுக்கு பயப்படுறாங்கோ. இந்த கள்ளிப்பட்டி கலைவாணியெல்லாம் தோட்டத்துல பாம்பு வந்தா கையாலயெ புடிச்சுபோடுவோமுங்க. ஆனா... இந்த எலிக ரவுசுதான் தாங்க முடியாதுங்கண்ணா!”

அறுபது வயதைக் கடந்தும் தளராமல் ஆர்வத்துடன் இயற்கை விவசாயம் செய்யும் இளைஞரான திரு.தன்ராஜ் அவர்களுக்கு ஈஷா விவசாயக் குழு வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றது. (தொடர்புக்கு: 9443268438)

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1