பறவைகளைப் பார்க்கும்கலை… மாணவர்களுக்கான பயிற்சி!

பள்ளி மாணவர்களுக்கு பறவைகள் பற்றிய அறிவையூட்டும் ஈஷா பசுமைப்பள்ளி இயக்கத்தின் பணிகள் பற்றியும், பறவைகளை கவனிக்கும் வழக்கத்தை வளர்ப்பதனால் மாணவர்களிடத்தில் ஏற்படும் மகத்தான மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து படித்தறியுங்கள்!
 

பறவை என்றதும் இன்றைய யுவன் யுவதிகளின் கண்முன் தோன்றுவதெல்லாம் பிராய்லர் கோழிகள்தான் என்பதில் சந்தோஷப்பட ஏதுமில்லை! ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!’ என்ற வரிகள் பறவைகள் நமக்கு வாழ்வியல், அறிவியல் போன்ற பல்வேறு விஷயங்களை தங்கள் இருப்பினால் சொல்லித்தருகின்றன என்பதை உணர்த்துகின்றன.

சமீபத்தில் ஒரு காணொளி பதிவில் ஒரு அறிவியலாளர் நீண்ட தூரம் பறக்கும் பறவைகளின் பறக்கும் நுட்பம் பற்றி விஞ்ஞானப் பூர்வமாக விவரித்துக்கொண்டிருந்தார். முதலில் செல்லும் பறவையைத் தொடர்ந்துசெல்லும் அடுத்தடுத்த பறவைகள் ஒரு V வடிவத்தில் பறப்பதற்கான அறிவியல் பின்னணியை அவர் கூறும்போது வியப்பாக இருந்தது. பறவைகளின் இறக்கை வடிவமைப்பினை ஒத்த தொழிற்நுட்பத்தில்தான் விமானத்தின் இறக்கைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்!

ஆம்… பறவைகள் நமக்கு கற்றுத்தருவது ஏராளம்! ஏராளம்! இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் இயற்கை உயிர்ச்சங்கிலியில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்! இயற்கையை கவனிக்கும் நிலையில் இன்று நம்மில் பலர் இல்லை! இயற்கையை கவனிப்பது, பறவைகள் மற்றும் விலங்குகளை கவனிப்பது நமது வாழ்வை செழுமைப்படுத்தி ஒரு ஆரோக்கியமான தலைமுறையாக மாற துணை நிற்கின்றன. இந்த பழக்கத்தை பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்கு கற்றுத்தந்து அவர்களின் புரிதலை மேம்படுத்தும் பணியை நாம் செய்வது அவசியமாகும்.

மாணவர்களுக்கு பறவைகள் பற்றிய விழிப்புணர்வு!
ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் பள்ளிகளுக்குச் சென்று, பறவைகள் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை மாணவர்களுக்கு வழங்கி, பறவைகளை கவனிப்பது குறித்த விழிப்புணர்வை உண்டாக்குகின்றனர். மரங்களில் வாழ்வன, புதர்களில் வாழ்வன, நீர்நிலைகளில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, மனிதர்களோடு வீட்டுச்சூழலில் வாழ்வன மற்றும் இரவு நேர பறவைகள் என தமிழ்நாட்டிலுள்ள சுமார் 125க்கும் மேற்பட்ட வகையிலான பறவைகளை அதன் வசிப்பிடங்களின் அடிப்படையிலும் அதன் தோற்றம் மற்றும் ஒலி எழுப்புதலின் அடிப்படையிலும் புகைப்படங்களுடன் பிரித்துக்காட்டி, அவற்றின் வாழ்க்கைமுறையையும் விளக்குகின்றனர்.

இதற்கென பிரத்யேகமாக விளக்கப்படங்கள் கொண்ட பவர் பாயிண்ட் காட்சிப் பதிவை ஒளிபரப்புகின்றனர். மேலும், புகைப்படங்களோடு கூடிய குறிப்பேடு ஒன்றையும் தயாரித்துள்ள ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அவற்றை பள்ளிதோறும் இலவசமாக வழங்கவும் செய்கின்றனர்.

பறவைகள் குறித்த அதுவரை அறிந்திராத பல்வேறு தகவல்களை மாணவர்கள் ஆர்வத்துடன் அறிந்துகொள்ளும்போது, இயல்பாகவே பறவைகளை கவனிக்கும் வழக்கமும் இயற்கையை கவனிக்கும் வழக்கமும் அவர்களிடத்தில் வளர்கிறது. இதன்மூலம் இயற்கையை சீர்கெடுக்கும் செயல்களில் இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் ஒருபோதும் இறங்கமாட்டார்கள் என்பதோடு, சுற்றுச்சூழலிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திடமும் இணக்கமாக செல்லும் மனநிலையை மாணவர்கள் பெறுகிறார்கள்! ஒரு அழகான சமூகப் பொறுப்புள்ள தலைமுறையினராக இவர்கள் உருவாவதற்கு ஈஷாவின் இந்த முயற்சி ஒரு தூண்டுகோலாய் அமைகிறது!

ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம்
பள்ளிப்பருவம் என்பது எதையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் பருவமாகும். குழந்தைகளின் மனங்கள் தூய்மையான வெள்ளைக் காகிதம்போல் இருப்பதால், நாம் அதில் நல்ல எண்ணங்களையும் நோக்கங்களையும் பதியச்செய்யும்போது அது என்றென்றைக்கும் அழியாமல் அவர்களையும் இந்த சுற்றுச்சூழலையும் சிறக்கச் செய்யும்! நாம் பள்ளிப் பருவத்தில் கற்றுக்கொண்ட பழக்கம் பசுமரத்தாணி போல பதிந்து, இன்றளவு நம்முடன் இருந்து வருவதை நாம் கவனித்துப் பார்க்கையில் புரியும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் மூலம் 2,200 பள்ளிகளின் சுமார் 1லட்சம் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கமானது குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பிலிருக்கும் வாய்ப்பினை நல்குவதோடு, அவர்களை சிறப்புமிக்க தலைமுறையாய் உருவாக்கி, இன்று 35 லட்சம் மரக்கன்றுகளை நடச்செய்துள்ளது.

பசுமைப்பள்ளி இயக்கத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவர்கள் தாங்களாகவே நாற்றுப் பண்ணைகளை உருவாக்குகின்றனர். புத்தகப் பாடமாக கற்பிக்கப்படாமல், விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுகின்றன. இதனால் அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது.

இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ.பே எண்: 94425 90062

 

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1