பிரபல குழந்தைகள் மருத்துவரான டாக்டர் கமலா செல்வராஜ், தன்னுடைய உணவு அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

“நானும், என்னுடைய தோழியும் அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய சகோதரி வீட்டுக்குப் போனோம். நீண்ட விமானப் பயணத்தால் நான் ரொம்பவுமே களைத்துப் போயிருந்தேன். அதனால் பாதி விழிப்பில் இருந்தபோது என் சகோதரி, “அக்கா, உனக்கு உப்புமா பண்ணித் தர்றேன்” என்றாள். “ஏதோ ஒண்ணு பண்ணு...” என்று சேரில் சாய்ந்துவிட்டேன்.

உப்புமா என்ற ஒன்றை அவள் கொண்டு வந்து வைத்தபோது, அது என்னைப் பார்த்துப் பரிதாபமாக விழித்தது. அது கஞ்சியா, கூழா என்னவென்றே தெரியவில்லை. கொஞ்சூண்டு எடுத்து வாயில் வைத்தால் விசித்திரமாக இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டேன். “இரு, ஒரு நாளைக்கு உப்புமா எப்படிப் பண்றதுன்னு செய்து காட்டுறேன்” என்று சொல்லி விட்டேன்.

ஒரு வாரம் ஆயிற்று. அன்றைக்கு செம ஷாப்பிங். முடித்துவிட்டு வீடு திரும்பினோம். எளிதாகச் செய்யக் கூடிய டிபன் என்பதால் உப்புமா எனத் தீர்மானித்தேன். அவளிடம் நான், “நீ எல்லாவற்றையும் நறுக்கி வை, போதும், நான் வந்து பண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டேன். உடை மாற்றிக் கொண்டு வருவதற்குள் இந்தியாவிலிருந்து போன். வீட்டிலிருந்து அம்மா ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். முடித்து விட்டு வந்து பார்த்தால் அதே பழைய வடிவில் உப்புமா. “ஏண்டி, நான் வர்றதுக்குள்ளே பண்ணினே?” என்று கேட்டால், “ஐயோ, பாவம், நீ பசியா இருப்பியே, போன் பேசிக்கிட்டு இருக்கே! வர்றதுக்குள்ளே நாமதான் பண்ணுவோமேன்னு பண்ணினேன்...” என்றாள். அவளைத் திட்டுவதா என்ன செய்வது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“நீதான் இதை இவ்வளவு தப்பு சொல்றே... என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு சந்தோஷமா சாப்பிடுவார்கள் தெரியுமா?” என்று வேறு சொன்னாள்!

அப்போதுதான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். ‘இருப்பதிலேயே எளிய ரெசிபி உப்புமா. ஆனால் அதைக்கூட சரியான பக்குவத்தில் செய்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் இந்த உப்புமாவைக் கூட ஆர்வமாகச் சாப்பிடுகிறார்கள் என்றால் எந்த அளவு இங்கிருப்பவர்கள் பாவம், ருசி தெரியாமல் இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஒரு நல்ல சாப்பாடு கூட இவர்கள் அறியாததாக ஆகிவிட்ட நிலைமை! என்ன வாழ்க்கை இது?’ என்று பரிதாபப்படத்தான் தோன்றியது.

உணவு என்றாலே என் அம்மாவின் ஞாபகம்தான் வரும். அம்மா அத்தனை அன்பாக வருபவர்களை எல்லாம் உபசரிப்பார்கள். அவர் ஒரு கொள்கையையும் வைத்திருந்தார். “குழந்தைகளுக்கு ஒரு உணவு பிடிக்கிறது என்றால் அவர்களுக்கு மட்டும் அதைச் செய்துவிட்டு, பெரியவர்கள் வேறு சாப்பிடுவது தவறு என்பார். ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது குழந்தைகள் விரும்பும் உணவை நாமும் சாப்பிட்டால்தான் அவர்களுக்கு நம்மோடு ஒரு பிணைப்பு வரும்” என்பார். அதைப் பலமுறை எங்கள் குடும்பத்தில் அமல்படுத்தி இருக்கிறார்.

சாவித்ரியின் மகனுக்கு உருளைக் கிழங்குக் கறி ரொம்பப் பிடிக்கும். அவன் எங்களோடு இருந்தபோது அவனுக்கும் அந்தப் பொரியல் செய்து போட்டு, தானும் அதையே அவனோடு அமர்ந்து சாப்பிடுவார். தனக்கு உருளைக் கிழங்கு உடம்புக்கு ஆகாது என்பதைப் பொருட்படுத்தவே மாட்டார். “அவனோடு சந்தோஷமாக சாப்பிடுவதுதான் தனக்கு மகிழ்ச்சி” என்றார். சொல்லப் போனால் அவருக்குப் பெரிதாக எந்த உணவின் மீதும் ஆசை இருப்பதில்லை. ரொம்ப நன்றாகச் சமைப்பார். குழந்தைகளுக்குப் பார்த்து பார்த்துச் செய்வார்.

உணவு என்பது சாப்பிடுவது மட்டுமே இல்லை. குழந்தைகளையும், பெரியவர்களையும் இணைக்கும் பந்தம் என்பதை அம்மாவிடம் இருந்துதான் நான் கற்றுக் கொண்டேன்.

எள் உருண்டை

தேவையான பொருட்கள்:

  • வெள்ளை எள் : 4 கப்
  • தண்ணீர்: ½ கப்
  • பொடித்த வெல்லம்: 1½ கப்
  • பொடிதாக நறுக்கிய தேங்காய்: 1 கப்

செய்முறை:

  • எள்ளை, பொன்னிறமாக வறுக்கவும்.
  • வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கெட்டிப் பாகாக செய்யவும்.
  • தேங்காய் துண்டுகளை இதில் சேர்த்துக் கலக்கி, எள்ளில் கொட்டவும்.
  • சேர்த்து கலந்து, மிதமான சூடாக உள்ளபோது உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பப்பாளிக்காய் பால் கூட்டு

தேவையான பொருட்கள்:

  • பப்பாளிக்காய்: ½ கிலோ
  • பால்: 1 கப்
  • துருவிய தேங்காய்: ½ கப்
  • வெல்லம் (துருவியது): 1 கப்
  • சீரகம்: 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி: 1 ஸ்பூன்
  • உப்பு: தேவைக்கேற்ப
  • மிளகாய் வற்றல்: 2
  • அரிசி மாவு: 1 மேஜைகரண்டி
  • சீரகம்: 1 ஸ்பூன்

தாளிக்க:

  • தேங்காய் எண்ணெய்: 2 ஸ்பூன்
  • கடுகு: 1 ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு: 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை: 1 கொத்து

செய்முறை:

  • பப்பாளிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  • சீரகம், தேங்காய், மிளகாய் வற்றல் மூன்றையும் அரைத்து இதில் சேர்க்கவும்.
  • வெல்லத்தையும் பொடித்துப் போட்டு, இந்தக் கலவையைக் கொதிக்க விடவும்.
  • பாலுடன் அரிசி மாவு சேர்த்து இதில் விட்டு, நுரைத்ததும் இறக்கவும்.
  • தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து இதோடு கலக்கவும்.