பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 4

இந்த கள்ளிப்பட்டி கலைவாணி ஈஷா விவசாய குழுவோட சேந்து பல ஊர்களுக்கு போய் வாரேனுங்க! அதுல பாருங்க... ஒரு கல்லூரி விரிவுரையாளர் இயற்கை விவசாயியா இருப்பத பாத்தப்போ, எனக்கு நம்பிக்க வந்துருச்சுதுங்க! இனி அடுத்த தலைமுறை இயற்கை விவசாயத்துக்கு கண்டிப்பா திரும்பிப்புடுமுங்க! அட வாங்கண்ணா... அவரு என்ன சொல்றாருன்னு கேட்டுப்போட்டு வருவோம்!

ஈஷா விவசாயக்குழு அமராவதி கவுண்டன் புதூரில் இயற்கை விவசாயி திரு. கார்த்திகேயன் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் இவர் விவசாயத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, 2014 முதல் பணியில் இருந்துகொண்டே இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

பந்தலிலே பாவக்கா... இயற்கை விவசாயி சொல்லும் நுணுக்கங்கள்!, Panthalile pavakka iyarkai vivasayi sollum nunukkkangal

கொட்டார பந்தல் மூலம் காய்கறிகள்!

காய்கறிகள் நன்கு விளையும் பகுதி என்பதால், இவரது பண்ணையில் பந்தல் காய்கறிகளை பயிர் செய்துள்ளார் திரு.கார்த்திகேயன். தென்னை மரங்களும் அங்கே உள்ளன. கொட்டாரப் பந்தல் எனப்படும் முக்கோண மாதிரியில் மூங்கில் கம்புகளை ஊன்றி அதில் பெட் வையர் (Pet wire) மூலமாக வலை கட்டியுள்ளார்.

சாதாரண முறையில் பந்தல் அமைக்கும்போது கொடிகள் படர அதிக இடம் கிடைப்பதில்லை. கொட்டாரப் பந்தல் முறையில் பயிர் செய்யும் போது 40 சென்ட் நிலத்தில் அமைக்கும் பந்தல், ஒரு ஏக்கரில் சாதாரண பந்தல் அமைத்ததற்கு சமம், அதாவது குறைந்த நிலத்தில் நிறைய காய்கறிகளை பயிர் செய்ய இயலும்.

சாதாரண முறையில் பந்தல் அமைக்கும்போது கொடிகள் படர அதிக இடம் கிடைப்பதில்லை. கொட்டாரப் பந்தல் முறையில் பயிர் செய்யும் போது 40 சென்ட் நிலத்தில் அமைக்கும் பந்தல், ஒரு ஏக்கரில் சாதாரண பந்தல் அமைத்ததற்கு சமம், அதாவது குறைந்த நிலத்தில் நிறைய காய்கறிகளை பயிர் செய்ய இயலும்.

பந்தல் அமைக்க 15 அடி நீளமுள்ள மூங்கில்களை பயன்படுத்தியுள்ளார், 10 அடி இடைவெயில் மூங்கில்களை நட்டு நுனியில் மூங்கில்களை கட்டி பந்தல் உருவாக்கியுள்ளார். நீள வாக்கில் பத்து அடி இடைவெளிவிட்டு அடுத்த மூங்கிலை நட்டுள்ளார் (10 x 10) இவ்வாறு தொடர்ந்து நட்டுள்ளதால் கூரை போன்ற அமைப்பு உருவாகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அட சாமி... பாத்தீங்களா இந்த அண்ணா செஞ்சிருக்கிறத?! மனசிருந்தா மார்க்கமுண்டுனு எங்க அப்பாரு அடிக்கடி சொல்லுவாப்படி! அதுமாதிரி நாம விவசாயம் செய்ய விருப்பத்தோட இருந்தோமுன்னா, இப்படி பந்தல் போட்டுகூட செஞ்சுபுடலாம் போலருக்குதே!

பந்தலிலே பாவக்கா... இயற்கை விவசாயி சொல்லும் நுணுக்கங்கள்!, Panthalile pavakka iyarkai vivasayi sollum nunukkkangal

மூடாக்கின் பயன்கள்

இவ்வாறு ஒன்றேகால் ஏக்கரில் பந்தல் அமைத்திருக்கும் கார்த்திகேயன், மூங்கில் கால்களின் இடையில் நான்கு அடி அகலத்தில், ஒரு அடி உயரத்தில் மேட்டு பாத்தியமைத்துள்ளார். அதில் தென்னங் கீற்றுக்களைப் பரப்பி மூடாக்கு அமைத்துள்ளார். மூடாக்கினால் ஏற்படும் பலன் நாம் அறித்ததே, மூடாக்கு இடுவதினால் தண்ணீர் ஆவியாவது குறைகிறது; இதனால் குறைந்த தண்ணீர் விட்டாலே போதுமானதாக இருக்கும். மேலும், மூடாக்கு இருப்பதினால் களைகள் முளைப்பதில்லை.

மேட்டுபாத்திகளின் ஓரத்தில் பாகற்காய், பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளரிக்காய் போன்ற பயிர்களை நட்டுள்ளார், இவை பந்தலில் நன்றாகப் படர்ந்து வளர்ந்துள்ளன. ஊடு பயிராக வெண்டை, செடி அவரை, கொத்தவரை போன்றவற்றை மேட்டு பாத்தியின் நடுவே பயிர் செய்துள்ளார், வேலி ஓரங்களில் முலாம் பழம், வெண்டை, தக்காளி போன்றவைகளை பயிர் செய்துள்ளார்.

சும்மா சொல்லக்கூடாதுங்கண்ணா... அண்ணா வீட்டு சாம்பாருல அல்லாக்காய்கறியும் நல்ல ருசிங்க! பின்னா... அன்னைக்கு நாங்க போயி தோட்டத்த பாத்துப்புட்டு, மதிய உணவ அவத்தைக்கே முடிச்சுப்போட்டோமுல்லோ! அட அந்த காய்கறிகளா பாத்தா அப்பவே சாப்புடனுமுன்னு தோணுதுங்கண்ணா! இயற்கை விவசாய காய்கறிய சாப்பிடுறதுக்கு குடுத்து வச்சிருக்கணும் இல்லீங்ளா!

திரு கார்த்திகேயன் செடிகளுக்கு ஜீவாமிர்தமும், கனஜீவாமிர்தமும் பயன்படுத்துகிறார்; காய்கறி பயிர்களுக்கு வாரம் இரண்டுமுறை ஜீவாமிர்தம் விடுகிறார்; விதை நேர்த்திக்கு பீஜாமிர்தம் பயன்படுத்துகிறார்; தேவை ஏற்படும்போது பஞ்சகவ்யா, மீன் அமிலம், முட்டைக்கரைசல், அரப்புமோர் கரைசல் பயன்படுத்துகிறார்; பூச்சிகளை கட்டுப்படுத்த மூலிகை பூச்சிவிரட்டி செய்து பயன்படுத்துகிறார்.

விற்பனைக்கான வாய்ப்பு

தற்போது தினசரி 300 கிலோ வரை காய்கறிகள் கிடைப்பதாகவும், வரும் நாள்களில் படிபடியாக மகசூல் உயர்ந்து 500 கிலோ வரை கிடைக்கும் என்று கூறும் கார்த்திகேயன் அவர்கள், காய்கறிகளை இயற்கை அங்காடிகளுக்கு கொடுப்பதாகவும். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப பல ரக காய்கறிகளை 5 முதல் 10 கிலோ வரை தனித்தனியாக பைகளில் இட்டு பேருந்துமூலம் அவர்களின் இல்லங்களுக்கே அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

பொறவு யாவாரம் மிக்கியமில்லீங்களா?! என்னதான் இயற்கை விவசாயம் செஞ்சாலும், யாவாரத்துல கருத்தா இருந்தா தானுங்கே நெலச்சிருக்க முடியுமுங்க! அந்த விதத்தில நம்ம அண்ணா நல்ல கெட்டிக்காரராட்டம் தெரியுறாப்புடி!

கொடிகாய்கறிகளை முக்கியப் பயிராக செய்வதால் மற்ற காய்கறிகளை இவர் குறைவாகவே பயிர் செய்கிறார், இதனால் வடமலைப் பாளையத்தில் உள்ள இயற்கை விவசாயி திரு.பொன்முத்து அவர்களிடமிருந்து கத்தரி, வெண்டை, பீட்ரூட், தக்காளி போன்றவற்றை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக புடலை, வெள்ளரி, பீர்க்கன், பாகல் போன்றவற்றை அவருக்குக் கொடுத்து பறிமாறிக்கொள்கிறார். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எல்லாவிதமான காய்கறிகளையும் பெறுகிறார்கள்.

புத்தம்புதிய இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகளை கொடுப்பதால், வாடிக்கையாளர்களிடம் நல்ல ஆதரவு இருப்பதாக கூறுகிறார்.

என்றத நான் குடுக்குறேன், ஒன்றத நீ கொடுன்னு பண்டமாத்து செஞ்சு பழகிகிட்டோமுன்னா, பொறவு அல்லாருக்கும் அல்லாமே கிடைச்சிருமில்லீங்கோ, ஏனுங் நாஞ்சொல்றது சரிதானுங்க?

ஈஷா விவசாயக்குழு விவசாயிகளின் பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது, இவ்விதம் இயற்கை விவசாயத்தை ஈஷா மென்மேலும் முன்னெடுத்து செல்வது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று திரு.கார்த்திகேயன் தெரிவித்தார்.

விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக வேலையை விட்டுவிட இருப்பதாகவும், முழுநேர விவசாயம் செய்யவே விருப்பம் என்றும் கூறிய திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றோம்.

தொடர்புக்கு:

திரு.கார்த்திகேயன்
தொலைபேசி: 9994441414