டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

பாரதி தன் அகக்கண்களுக்கு அன்று புலர்ந்ததை “எங்கெங்கு காணினும் சக்தியடா!” என்கிறார். இன்றைய தேதியில் நம் நாடு முழுதும் பீதியை ஏற்படுத்தி வரும் பன்றிக் காய்ச்சலால், “எங்கெங்கு காணினும் H1N1 வைரஸடா!” என மருத்துவர்களும், மக்களும் புலம்பும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அது ஏன் பன்றிக் காய்ச்சல்?

இவ்வைரஸ் பன்றிகளிடம் இருந்து பரவும் கட்டத்தை தாண்டிவிட்டது. பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் வேகம் அதிகரித்துவிட்டது.

இந்த வைரசின் ஒரிஜினல் எதிரி பன்றிகள்தான். பன்றிகளைத்தான் இவை தாக்குகின்றன. பின்னர் ஏன் மனிதர்களுக்கு குடைச்சல் ஏற்படுகிறது? பின்வரும் விளக்கம் எளிமையாய் விளக்கும் என எண்ணுகிறேன். விட்டலாச்சார்யா படங்களில் பொதுவாக ஒரு மந்திரவாதி கதாபாத்திரம் வரும். அம்மந்திரவாதி, கதாநாயகன் தன்னை அழிக்க முயற்சி செய்யும்போது தனது உருவத்தை புதிது புதிதாக மாற்றி தப்பித்துவிட்டு, வாயை பிளந்து கொண்டு கணீரென சிரிப்பதை பார்த்திருப்போம். அதேபோல் இந்த வைரஸும் புதுப்புது உருவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது (Antigenic Shift). இவ்வாறு பன்றிகளை மட்டுமே தாக்கும் ஒரு வகை Influenza வைரஸ் உருமாறி மனிதனையும் தாக்கும் வலிமையைப் பெற்றுவிட்டது.

எவ்வாறு பரவும்?

பன்றிகளின் எண்ணிக்கை அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் அதிகம். சென்னை சிட்டியின் இதயப்பகுதியில் குறைவு. இதனால், காய்ச்சல் பாதிப்பு அரியலூரில் அதிகம், சென்னையில் குறைவாக இருக்குமோ? என எண்ணுவது தவறு. ஏனெனில், இவ்வைரஸ் பன்றிகளிடம் இருந்து பரவும் கட்டத்தை தாண்டிவிட்டது. பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் வேகம் அதிகரித்துவிட்டது. அவர் இருமினாலோ, தும்மினாலோ வெளிப்படும் சளி, எச்சில் மூலம் பரவுகிறது. மேலும், நோயாளியின் சளி, எச்சில்பட்ட கைக்குட்டை போன்ற துணிகள் மற்றும் பிற பொருட்கள் மூலமும் வைரஸ் கடத்தப்படுகிறது. அறிகுறிகள் உள்ளவரிடம் கைகுலுக்குவதும் கூட நோயைப் பரப்பும். காற்றோட்டம் இல்லாத அறைகள், குறைந்த இடவசதியில் அதிக மக்கள் வசிப்பது, சினிமா தியேட்டர்கள், கோவில் விழாக்கள், பேருந்து, இரயில் நிலையங்கள், பள்ளிகள் என மக்கள் அதிகமாய் கூடும் இடங்களில் வைரஸ் வேகமாய் பரவும் வாய்ப்பு அதிகம்.

இந்த அத்தனை தகுதிகளும் நம் தாய்த் திருநாட்டிற்கு உண்டல்லவா!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவான அறிகுறிகள்

காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல், தலைவலி, உடல்சோர்வு, மூக்கில் நீர்வடிதல், இருமல்.

இதில் மிக முக்கியமாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில்:

99 சதவீதம் பேருக்கு இந்த சாதாரண அறிகுறிகளுடன் பன்றிக் காய்ச்சல் வைரஸ் தன் வாலை சுருட்டிக்கொள்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்கும் பட்சத்தில் நோய்க்கிருமியால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது. நோய் எதிர்ப்பு திறன் குறைந்த குழந்தைகள், முதியவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், கேன்சர் நோயாளிகளுக்குத்தான் இவை பெரும்பாலும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. நுரையீரலில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

பாதுகாப்பு மந்திரங்கள் ஆறு!

  1. அடிக்கடி கைகள் இரண்டையும் சுத்தமான முறையில் சோப்பினால் கழுவ வேண்டும். குறிப்பாக இருமிய பின்னர். மேலும், நோய் அறிகுறிகளுடன் இருப்பவருடன் கைகுலுக்குதல் போன்ற உடல் தொடர்பு ஏற்பட்ட பின்னர் கை கழுவுதல் அவசியம்.
  2. நோய் அறிகுறி தென்படுபவரிடம் இருந்து 3 அடி தொலைவை கடைபிடிக்க வேண்டும்.
  3. இருமலோ, தும்மலோ வரும் பட்சத்தில் மூக்கு வாய் பகுதியை மூடுவதற்கு கைக்குட்டையையோ, சட்டையின் கைப்பகுதியியையோ பயன்படுத்த வேண்டும்.
  4. கைகளை சுத்தமாய் கழுவிய பின்னரே நேரடியாக கண், மூக்கு, வாயை தொடுவது வேண்டும்.
  5. உங்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் 5 நாட்கள் வரை வீட்டிலேயே ஓய்வெடுப்பது பிறருக்கு நல்லது. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்“ தத்துவத்தை பயன்படுத்திவிடாதீர்கள்.
  6. காய்ச்சல், சளி இரு நாட்களில் குறையவில்லை எனில் உங்கள் மருத்துவரை அணுகவும். இவற்றைக் கடைபிடிப்பதுதான் தேவையே தவிர, பீதியடைய வேண்டியதில்லை.

தடுப்பூசி சர்ச்சை

தடுப்பூசி 6 மாத குழந்தையிலிருந்து முதியவர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

வருடாந்திர தடுப்பூசி அதுவும் குளிர் காலம் தொடங்கும் முன்னரே (செப்-அக்டோபர்) போட்டுக்கொள்ள வேண்டும். அதிவேகமாய் சமூகத்தில் பரவிய பின் போடுவதில் பலன் இல்லை. அதேபோல், இந்த வைரஸ் தனது உருவத்தை பருவத்திற்கு பருவம் மாற்றிக்கொண்டே இருப்பதால், தடுப்பூசி முழு பலன் அளிக்காமலும் போகலாம். ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தாக வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

தேசிய அளவில் ஆராய்ச்சிக்கான நிதி பற்றாக்குறையால், பன்றிக் காய்ச்சலுக்கான சரியான தடுப்பூசி கொள்கை மேற்குலகைப்போல் நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை.

“டமி ஃப்ளு” என்கிற வைரஸ் எதிரி, மாத்திரை வடிவில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும் பன்றிக் காய்ச்சல் தாக்கிய 48 மணி நேரத்திற்குள் எடுத்துக்கொண்டால் மட்டுமே பலன் அளிக்கிறது.

ஒரு புறம் நோயின் சுமை; மறுபுறம் வணிகம் மற்றும் இலாப நோக்கம் கொண்டு மருத்துவக் கொள்கைகள் உந்தப்படுகிறதோ என்கிற கேள்விகள் உங்களுக்கு இருக்குமாயின் உபாயம் ஒன்றே! நல்ல உணவு முறையிலும், யோகப் பயிற்சி, முறையான சுவாசப் பயிற்சி, உடற்பயிற்சியினாலும், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்து ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதே சிறந்தது.

கபசுரக் குடிநீர்

(கபம் = சளி; சுரம் = காய்ச்சல்; குடிநீர் = கசாயம்)

சித்த மருத்துவத்தில் காய்ச்சல், 64 வகைப்படுத்தப்பட்டுள்ளது. கபத்துடன் சேர்ந்த காய்ச்சலாக இருப்பதால் பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக்குடி நீர் எனும் கசாய மருந்து உதவும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கப்பட்டது போல், இந்த மருந்தை தமிழக அரசாங்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்க செய்திருக்கிறது. 35 கிராம் கபசுரக்குடிநீரை 2.4 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து 300 மில்லி அளவு சுண்ட வைக்க வேண்டும்.

பெரியவர்கள் வேளைக்கு 60 மில்லி அளவு ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து வேளை பருகவேண்டும். குழந்தைகளுக்கு 30 மில்லி அளவு அளிக்கலாம்.

நன்றி - கபசுரக் குடிநீர் குறிப்பு: சித்த மருத்துவர். ராஜேஷ், ஈஷா ஆரோக்யா மருத்துவமனை, சென்னை.