பள்ளிப்பருவம் என்பது எதையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் பருவமாகும். குழந்தைகளின் மனங்கள் தூய்மையான வெள்ளைக் காகிதம்போல் இருப்பதால், நாம் அதில் நல்ல எண்ணங்களையும் நோக்கங்களையும் பதியச்செய்யும்போது அது என்றென்றைக்கும் அழியாமல் அவர்களையும் இந்த சுற்றுச்சூழலையும் சிறக்கச் செய்யும்! நாம் பள்ளிப் பருவத்தில் கற்றுக்கொண்ட பழக்கம் பசுமரத்தாணி போல பதிந்து, இன்றளவு நம்முடன் இருந்து வருவதை நாம் கவனித்துப் பார்க்கையில் புரியும்.

அந்த வகையில், ஈஷா பசுமைக் கரங்களின் பசுமைப் பள்ளி இயக்கம் பள்ளி மாணவர்களிடையே சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏட்டுப் படிப்பாக இல்லாமல், களப்பணியாக கொண்டு சேர்க்கிறது! நாம் என்னதான் புரியும் படியாக வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் சொல்லிப் புரியவைத்தாலும், களத்தில் செயல்முறையாக ஒன்றைக் கற்கும்போது அதன் தாக்கம் முற்றிலும் ஆழமானதாக இருக்கும்.

ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் பள்ளிப் பருவத்தில் மாணவர்களின் மனங்களில் மரங்களை விதைக்கிறது. அந்த எண்ணங்கள் அவர்களின் பள்ளி வளாகங்களிலும் சுற்றுப்புறங்களிலும் வளர்ந்து மரங்களாகின்றன.

தமிழ்நாடு அரசின் கல்வித்துறையுடன் இணைந்து செயல்படும் இத்திட்டம் மூலம் 2,200 பள்ளிகளின் சுமார் 1லட்சம் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 35 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இம்மாணவர்கள் காரணமாகியுள்ளனர் என்பது நம்ப இயலாததாக இருக்கலாம்! இந்த இயக்கமானது குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பிலிருக்கும் வாய்ப்பினை நல்குவதோடு, அவர்களை சிறப்புமிக்க தலைமுறையாய் உருவாக்குகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் "தேசிய பசுமைப் படை"யில் (National Green Corps) உள்ள 50 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வருடமும் 2000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள மாணவர்கள் தாங்களாகவே தங்கள் பள்ளிகளில் நாற்றுப் பண்ணைகளை உருவாக்கி மரக்கன்றுகளை நடுவார்கள். விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுவதோடு, அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது. மேலும், தாங்கள் உருவாக்கிய மரக்கன்றுகளை தங்கள் ஊர்களில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நடுவதற்காக கொடுக்கும்போது, அந்தச் சின்னஞ்சிறு உள்ளங்களின் மகிழ்ச்சியை சொல்லிட வார்த்தைகள் இல்லை!

இதுகுறித்து ஒரு பள்ளி மாணவன் பரிந்துகொண்டபோது...

“எங்களது NGC ஆசிரியர் தனசேகரன் சார் ஒரு விதையிலிருந்து மரக்கன்று எப்படி முளைபெற்று வெளிவருகிறது என்பது முதல், அது முழுமையான மரமாவது எத்தைகைய ஒரு நுட்பமான செயல்முறை என்பது வரை விளக்கினார். எங்கள் ஒவ்வொருவருக்கும் மண்ணை நிரப்புவதற்கான கவரும், எங்களுக்கான விதையும் கொடுக்கப்பட்டது. எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. நான் ஏற்கனவே கனவுலகிற்கு சென்று நான் விதைத்த விதை முளைத்து வெளிவருவதை பார்க்கத் துவங்கியிருந்தேன். முதல் இலை துளிர்விடுவதைக் காண பெரும் ஆர்வம் கொண்டிருந்தேன். அந்த மரக்கன்று முளைத்து வெளிவந்த முதல் நாளை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்!" - இளவரசன், வயது 12, கோவை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி.

கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 2011 முதல் 2012ல் முதன்முதலில் பசுமை பள்ளி இயக்கம் துவங்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மற்றும் பாண்டிச்சேரி, திருச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஈஷா பசுமைக் கரங்களுக்கு, தன்னார்வத் தொண்டர்கள் பற்றாக்குறைதான் இப்போது பிரச்சனை. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இந்தப் பசுமைப் பழக்கத்தை நீங்களே உருவாக்கலாம். ஒரு செடி விதையிலிருந்து வெளிப்பட்டு முளைவிட்டு வளருவதைக் கவனித்து வளர்க்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் மரங்களை நேசிக்கும் மனிதராக மட்டுமல்லாமல் சக உயிர்களை நேசிக்கும் மனிதநேயமிக்கவராகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமேதுமில்லை!

உங்களுக்கு விருப்பமும் நேரமும் இருந்தால் ஈஷா அன்பர்களுடன் இணைந்து நாற்றுப் பண்ணைகளில் தன்னார்வத் தொண்டு புரிந்திட முடியும். பசுமைப் பள்ளி இயக்கம் பற்றி மேலும் தகவல் பெறவும், ஈஷா நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளைக் குறைந்த விலையில் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தொ. பே. 94425 90062

ஈஷா விவசாய இயக்கம் முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

ஈஷா பசுமை கரங்களின் பல்வேறு பசுமை திட்டங்கள் பற்றி தகவல் அறிய இணையதளத்தை பார்க்கலாம்