பள்ளிநாட்களை நினைவூட்டிய ஹரித்துவார் சண்டிதேவி கோயில் அனுபவம்!
ஹரித்துவாரில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சண்டிதேவி கோயிலுக்கு சென்ற அந்த சுவாரஸ்ய அனுபவத்தை விவரிக்கும் எழுத்தாளர், மனதில் குதூகலம் பொங்கும்விதமாக ஈஷாவில் யோகப் பயிற்சிகளோடு ஒருங்கிணைக்கப்படும் விளையாட்டுகள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்!
 
 

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 4

ஹரித்துவாரில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சண்டிதேவி கோயிலுக்கு சென்ற அந்த சுவாரஸ்ய அனுபவத்தை விவரிக்கும் எழுத்தாளர், மனதில் குதூகலம் பொங்கும்விதமாக ஈஷாவில் யோகப் பயிற்சிகளோடு ஒருங்கிணைக்கப்படும் விளையாட்டுகள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்!

திரு. அஜயன் பாலா:

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan bala‘ஹோ!’ என்ற ராட்சத அலையின் சப்தம் என்னை படுக்கையிலிருந்து திடுக்கிட்டு எழுந்திருக்க வைத்தது. அது ஹரித்துவாரின் மூன்றாம் மாடியிலிருக்கும் என் விடுதியின் அறை, கடிகாரத்தில் மணி 5.45 காண்பித்துக்கொண்டிருந்தது.

ஒரு மூலையில் என் அறை சகவாசி போஸ் அண்ணா சூரிய வணக்கம் செய்து கொண்டிருந்தார். அது உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தும் முக்கிய ஆசனங்களில் ஒன்று. அவர் ஈஷா ஆசிரமத்திலேயே வசிப்பவர். அனைத்து யோகாவும் அத்துப்படி.

மலங்க மலங்க விழித்தப்படி அவரையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, வாங்க அண்ணே ஒரு செட் போடுங்க என உற்சாகமாக அழைத்தார்.

ஆனால் நம் உடம்போ தூக்கத்திற்கு ஏங்கியது.

அவரிடம் ஒரு சிரிப்பை காட்டி சமாளித்து போர்வையை மூடி படுக்க போக, மீண்டும் அந்த பெரும் இரைச்சல் சத்தம். என்ன சத்தம் என எழுந்து போய் பால்கனியிலிருந்து எட்டி பார்த்தேன். கீழே இரண்டு அணிகளாக எதிரெதிரே வரிசையாக நின்றவர்களின் நடுவில் வரையப்பட்ட கோட்டில் ஒரு கர்ச்சீப் இருக்க, நடுவராக இருந்த ஒரு தன்னார்வலர் வாயில் விசிலுடன் ஐந்து என குரல் கொடுக்க, இரண்டு பக்கமிருந்தும் வரிசையில் ஐந்தாவதாக நின்று கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். இருவரும் ஒரு கையை பின்னுக்கு கட்டியபடி கர்சீப்பை சுற்றி வளையவந்தனர். யார் முதலில் எடுத்துக்கொண்டு தன் பக்கம் ஓடுவது என்பதில் குறியாக இருந்தனர். இருவரும் பெண்கள் ஒருவருக்கு வயது இருபத்தைந்து, இன்னொருவருக்கு வயது அறுபதுக்கு மேலுமிருக்கும்.

சட்டென மூத்தவர் கர்சீப்பை எடுத்துக்கொண்டு ஓட, இளம்பெண் துரத்த, ஆனால் அவருக்கு போக்கு காட்டிவிட்டு வேகமாய் தன் வரிசையில் அந்த மூத்த பெண்மணி இணைந்ததும் கட்டடமே மீண்டும் அதிரும்வகையில் முன்பு நான் கேட்ட ஹோ இரைச்சல்.

சட்டென மூத்தவர் கர்சீப்பை எடுத்துக்கொண்டு ஓட, இளம்பெண் துரத்த, ஆனால் அவருக்கு போக்கு காட்டிவிட்டு வேகமாய் தன் வரிசையில் அந்த மூத்த பெண்மணி இணைந்ததும் கட்டடமே மீண்டும் அதிரும்வகையில் முன்பு நான் கேட்ட ஹோ இரைச்சல். அனைவர் முகத்திலும் உற்சாகம் பொங்கி வழிந்தது. வயதுகள் காணாமல் போய் தங்களது பள்ளி காலத்துக்கு அனைவரும் மாறியிருந்தனர். இமயமலை பயணத்தில் இதுவரை யோக பயற்சி பெறாதவர்களுக்கான ஸ்பெஷல் ஒரு நாள் யோக வகுப்பு ஷாம்பவி மகாமுத்ரா சிக்ஸ்பேக் சிகிச்சை பற்றியும் அதற்காக ஒருநாள் இங்கே தங்கப்போவது பற்றியும் சொல்லியிருந்தேன் அல்லவா, அந்த வகுப்பின் ஒருபகுதியாகத்தான் கீழே இந்த விளையாட்டு.

முதல்நிலையில் மனதை சுத்தப்படுத்தியபின் அடுத்த நிலை வகுப்பில் உடலை ரீ ஸ்டார்ட் செய்யும் நிலையில் இந்த விளையாட்டு முக்கிய பங்களிக்கிறது. நான் சென்னையில் முதன்முதலாக இந்த ஷாம்பவி வகுப்பில் கலந்துகொண்டபோது இந்த வகுப்புக்காக எலியட் பீச்சில் கூடினோம். அன்று எனக்கு தெரியாமல் என் உடம்பு பெரும் அற்புதத்தை சந்தித்தது. நம்மை மறந்து ஓடியாடி விளையாடும்போது அதுவரை நம் உடலில் அக்கடா என செயல்படாமல் உறங்கிக்கிடந்த அத்தனை அணுக்களும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து உடலில் இளமையை நுரைக்க செய்யும். அன்று முழுக்க என் மனம் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. கீழே சத்தம் கேட்டபோது நேற்று இரவு என்னுடன் அறிமுகமான திலீப்ஷா ஒரு வயதான பெண்மணியை பிடிக்க குழந்தை போல ஓடிக்கொண்டிருந்தார். ஈஷாவின் அற்புதங்களில் இது முக்கியமான ஒன்று. மனதையும் உடலையும் உயர்ந்த சமநிலைக்கு அவர்கள் அழைத்து செல்கிறபோது வாழ்வின் புதிய பக்கங்கள் தானாக திறந்துகொள்ளும் அதிசயத்தை இந்த வகுப்பின்போது நாம் உணர முடியும்.

கீழே விளையாடிக்கொண்டிருந்தவர்களின் முகங்களில் அதை கண்ணார கண்டு கொண்டிருந்தேன்.

எங்களது பேருந்து வளையும் ஒவ்வொரு இடங்களிலும் ஜன்னல் வழியாக கங்கையும் ஏதாவது ஒரு இடத்தில் வளைந்து திரும்பி புன்னகைத்தப்படி ஓடிக்கொண்டிருந்தாள். சிறுமியின் துள்ளல், இளம்பெண்ணின் வேகம், தாயின் கருணை, பெருந்தாயின் பொறுமை இவையனைத்தையும் அவளிடம் வெவ்வேறு இடங்களில் தரிசிக்க முடிந்தது. கங்கையின் முழு அழகையும் பார்ப்பதானால் நிச்சம் ஹரித்துவாரில் மட்டுமே பார்க்க முடியும். அந்த அளவுக்கு எங்கெங்கும் நதியின் ஆட்சி. இப்போது எங்கள் பேருந்து ஹரித்துவாரின் புகழ்பெற்ற சண்டிதேவி கோயில் அமைந்து இருக்கும் நீலபர்வதமலைநோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஒன்றன்பின் ஒன்றாக ஏழு வெள்ளை நிற பேருந்துகள். நான் எப்போதும் போல எனக்கு மிகவும் பிடித்த ஜன்னலோரம் அமர்ந்தபடி குளிர் காற்றை உடல் முழுக்க வாங்கிக்கொண்டு இயற்கையின் பேரழகை கண்கள் வழியாக உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு பயணிக்கிறேன். உள்ளே பேருந்தில் உற்சாகம் களை கட்ட துவங்கிவிட்டது. சிலர் பாட பலரும் கைத்தட்டி அதனை ரசித்துக்கொண்டிருந்தனர். பேருந்து நின்றதும் புற்றீசல் போல அனைவரும் கீழிறங்கி ஒரு மலையின் கீழே இருக்கும் இழுவை பெட்டியின் (ரோப் கார்) அனுமதி சீட்டு பெற நான் முந்தி நீ முந்தி என கைப்பையை திறந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அனைவரையும் ஒரு குரல் தடுத்து திரும்ப செய்தது. வாங்க வாங்க அதுக்குதான் நாங்க இருக்கோம்ல. எல்லோருக்கும் மொத்தமாக சேத்து ஏற்கனவே எடுத்தாச்சு. எங்களுடன் வந்த ஈஷாவின் எட்டு ஆசிரியர்களில் ஒருவர்தான் அந்த அழகான குரலுக்கு சொந்தக்காரர்.

வரிசையாக அமர்ந்துகொண்டே காலிபெட்டிகள் வந்து நிற்க ஒவ்வொன்றிலும் நான்கு பேர் வீதம் ஏறிக்கொண்டோம். என்னுடைய கூண்டு பெட்டியில் புதுக்கோட்டையிலிருந்து வந்த ரத்னம், முத்து மாணிக்கம் மற்றும் பவானி சந்தானம் ஆகியோர் ஏறிக்கொண்டனர்.

சந்தானம் ஸ்தபதி தமிழ் நாட்டில் பல கோயில்களை கட்டிய பெருமை அவர் கைக்கு இருந்ததை பிற்பாடு தெரிந்துகொண்டேன். ஆனால் அந்த தருணத்தில் அவரும் ஒரு மனிதர் அவ்வளவுதான். ஒரு பக்கம் பயம் அடிவயிற்றை பிசைய பெட்டி எங்களை பெரும் உயரத்துக்கு அழைத்து சென்றது. வாழ்க்கையில் சில உயரங்களும் இதுபோல மிக சுலபமாக இருந்தால் எப்படி இருக்கும். கண்கள் முன் ஹரித்துவார் பிரம்மாண்டமாக கீழே விரிந்தபடி இருந்தது. கீழே இறங்கும் பெட்டிகளிலிருந்து பலர் கையசைத்தனர். பயம் காரணமாக நான் பேச்சு மூச்சில்லாமல் அமைதியாக இருந்தேன். சட்டென அறுந்துவிழுந்துவிட்டால், யோசிப்பதற்குள் சேருமிடம் வந்துவிட்டது. பெட்டியிலிருந்து இறங்கியபோது அப்பாடா என்றிருந்தது.

முன்பெல்லாம் இம்மலைப் பாதையில் நடந்து வந்து இந்த சண்டிதேவியை தரிசித்தனர். அப்போது எல்லோருக்குள்ளும் பக்தி இருந்தது. இப்போது ரோப்காரில் சுலபமாக வருவதால் தேவியின் மீதான கவனம் குறைந்து சுற்றுலா மனநிலை வந்துவிட்டது என ஒரு பக்தர் கூறிக்கொண்டே தேவியை தரிசிக்க வரிசையில் நின்றார்.

சண்டிதேவி சிறு கோயில். பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் விசாரித்தபோது அக்கோயில் பலவகைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தியாவின் புகழ்மிக்க சக்திபீடங்களில் அதுவும் ஒன்று. நம் ஊர் கோயில்கள் போல கொடிமரம் பீடம் போன்றவை எதுவும் இல்லை. 1929 ல் காஷ்மீர் மன்னரான சுசாந்த் எனும் அரசர் இப்போதிருக்கும் கோபுரத்துடன் கூடிய அக்கோயிலை கட்டியுள்ளார். 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில். முன்பெல்லாம் இம்மலைப் பாதையில் நடந்து வந்து இந்த சண்டிதேவியை தரிசித்தனர். அப்போது எல்லோருக்குள்ளும் பக்தி இருந்தது. இப்போது ரோப்காரில் சுலபமாக வருவதால் தேவியின் மீதான கவனம் குறைந்து சுற்றுலா மனநிலை வந்துவிட்டது என ஒரு பக்தர் கூறிக்கொண்டே தேவியை தரிசிக்க வரிசையில் நின்றார். அவர் சொன்னதிலும் ஒரு நியாயத்தை உணர முடிந்தது. சிறிய உருவத்துடன் முழுவதும் மஞ்சள் பூசி காணப்பட்ட தேவியை அனைவரும் தரிசித்துவிட்டு பிரகாரத்தின் வலப்பக்கம் திரும்பிக்கொண்டிருந்தனர். சட்டென என் பின்னால் ஒரு குரல். அக்குரலுக்கு சொந்தக்காரர் பிரபாகர் சேலத்திலிருந்து வந்திருப்பவர். என்ன எழுத்தாளரே உங்க முதுகு பத்திரமா இருக்கா?

எதுக்கு கேக்குறீங்க!

எதுக்கா? அங்க பாருங்க! ஒருவர், எல்லாருக்கும் முதுகுல டின் கட்டுறார்.

நானும் அங்கு பார்த்தபோது ஒரு சின்ன அதிர்ச்சி. வரிசையாக எல்லோரும் சென்று ஒருவரிடம் கையில் கயிறு கட்டிக்கொள்ள, கயிறு கட்டியதும் அவர் அவர்கள் தலையை பிடித்து குனிய வைத்து முதுகில் டம் என அடி கொடுத்துக்கொண்டிருந்தார்.

தெரிந்தவர்கள் அடிவாங்கும்போது இன்னும் கொஞ்சம் நல்லா அடிங்க என சிரித்தப்படி அருகிலிருந்து பரிந்துரை செய்ய கொஞ்ச நேரம் அங்கு கலகலப்பு களை கட்டியது. நானும் என் பங்கிற்கு அடி வாங்கிகொண்டேன். சட்டென என் பால்ய வயதில் வாங்கிய அடிகள். சடசடவென மனதில் காட்சிகளாய் சரிந்தன. அப்பா, மாமா, சித்தப்பா, ஐந்தாம் வகுப்பு பால்ராஜ் வாத்தியார், ஹெட்மாஸ்டர், பள்ளிவிட்டு வீடு திரும்பும்போது நண்பன் இதை மறந்துவிடாதே எனக்கொடுத்த அடி என வரிசையாக பலருடைய கைகள் தோன்றி மறைந்தன. ஆனால் அந்த அடிகள் அனைத்தும் என்னை வளர்க்க உதவின.

வாங்கிய கையோடு கோவிலின் பின்புற ஜன்னலருகே வந்தபோது, வாவ்!.. அப்படி ஒரு காற்று. மலை உச்சியின் பேரற்புதமான காற்று.. அப்படி ஒரு காற்றை என் உடம்பு இதுவரை அனுபவித்ததில்லை. உடம்பை தேனாக இனிக்க செய்யும் இந்த காற்றை வர்ணிக்க வார்த்தையில்லை. உடம்பின் வியர்வையோடு காற்று பேசும் மொழியை ரசித்தப்படி சற்று நேரம் ஜன்னல் வழியாக விரிந்த ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருந்தோம்.

வரும் பதிவில், இயற்கை எழில் மிகுந்த மலைகளில் பேருந்தில் பயணித்து குப்தகாசியை அடைந்த அனுபவித்தை சொல்லும் எழுத்தாளர், பேருந்து பயணத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை சுவைபட விவரிக்கிறார்.


குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org

 

'இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1