நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 15

கூவம் நதி ஆங்கிலேய ஆட்சியில் விவசாயத்திற்குப் பயன்படும் நதியாக இருந்தது. ஆனால் இப்போதோ சாக்கடை நிறைந்த பாழ் நதியாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதையும் மனிதன் தன் இஷ்டத்திற்கு இயற்கையை வளைப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளையும் நம்மாழ்வார் இங்கே அலசுகிறார்.

நம்மாழ்வார்:

ஒரு நண்பர் இப்படிச் சொன்னார். முட்டையை இரண்டு வகையில் உடைக்கலாம். முட்டைக்கு வெளியில் இருந்து நாம் உடைக்கும்போது ஆம்லெட் போட்டுத் தின்னுகிறோம். மாறாக முட்டைக்கு உள்ளிருந்து குஞ்சு ஓட்டை உடைக்கும்போது குஞ்சு வெளியேறி கோழியாக வளர்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பு கூவம் நதி குளிக்கத் தகுந்ததாகத்தான் உள்ளது. 1935-க்கு முன்பு உள்ள படங்களில் கூவம் நதி நீர் பாய்ந்து வயல்களில் உழவர்கள் நெற்பயிர் விளைவித்ததைப் பார்க்கிறோம்.

ஆம்லெட் அந்த நேரத்து ஆனந்தம். ஆனால், குஞ்சு வெளியேறி கோழியாக வளரும்போது தொடர்ந்து ஏராளமான பறவைகள் கிடைக்கின்றன. பறவைகள் பூச்சி, புழுக்களைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகளின் எச்சங்களில் நுண்ணுயிர்கள் மலிந்து செடி, கொடி, மரங்கள் வளர்ந்து, கனி, காய், நிழல், மழை, காற்றை வழங்குகின்றன. முட்டையில் இருந்து இப்படி அளப்பரிய பயன் வர வேண்டுமானால், தாய்க் கோழி, முட்டை மேல் அமர்ந்து 21 நாட்களுக்குச் சீராகச் சூடு தர வேண்டும். அதற்குப் பொறுமையும் பொறுப்பு உணர்வும் தேவைப்படுகிறது. இவை இல்லாமையால் இன்று பூமித்தாய் வழங்கும் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. நாம் விரும்பி வரும் மாற்றங்கள் நம் வளர்ச்சிக்குத் துணை செல்கின்றன. நம்மீது திணிக்கப்படுகின்ற மாற்றங்கள் நமக்குத் துன்பம் இழைக்கின்றன.

நாம் விரும்பும் மாற்றங்கள் அனைத்துமே நமது வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ உதவ முடியும் என்று சொல்ல முடியாது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு நமது உணவுப் பழக்கவழக்கங்கள். உடல் வளர்ச்சிக்கும் உடலின் பராமரிப்புக்கும், மாவுப்பொருள், பருப்பு, எண்ணெய், காய்கறி, பழம், கீரைகள் உட்கொள்ள வேண்டும் என்று படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்.

ஆனால் உடலுக்குத் தீங்கு பயக்கக்கூடிய இனிப்பூட்டிய பனிக்கட்டி, ரசாயன பானங்கள், காபி, தேநீர், மது, புகை இவற்றுக்கே ஏராளமான ஆதாரங்களையும் நிதியையும் செலவிடுகிறோம். தேயிலையும் காபிச் செடியும் பயிர் செய்யவே நமது மலைப்பகுதிகளை மொட்டையடிக்கிறோம். பருவ மழையை இழக்கிறோம். வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிக்கிறோம். யானையும், புலியும், சிறுத்தையும் ஊருக்குள் வந்து கலாட்டா செய்வதாகக் கவலைப்படுகிறோம்.

“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” என்று தொல்காப்பியம் சொல்கிறது. உணவு உற்பத்திக்கான நிலமும், நீரும் உணவு அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. பட்டணத்துத் தெருக்களிலே, வயிற்றுப் பாட்டுக்காக, விலங்குகளாய்த் திரிவதுவே வாழ்க்கை என்று கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தின் தலைநகரம், சென்னை. சென்னையின் குறுக்கே பாயும் ஆறு கூவம். இந்தக் கூவம் ஆற்றைக் குறுக்கே வாகனத்தில் கடக்கும்போதே மூக்கை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. கூவம் நதியைச் சுத்தம் செய்வதற்காகக் கோடி கோடியாகச் செலவழித்த பணம் எல்லாம் சாக்கடையில் கொட்டிய ‘புதையல்’ ஆகிப்போனது. சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பு கூவம் நதி குளிக்கத் தகுந்ததாகத்தான் உள்ளது. 1935-க்கு முன்பு உள்ள படங்களில் கூவம் நதி நீர் பாய்ந்து வயல்களில் உழவர்கள் நெற்பயிர் விளைவித்ததைப் பார்க்கிறோம். இன்று என்ன நடக்கிறது?

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி, நொய்யல், பவானி, அமராவதி எல்லா நதிகளுமே கூவமாக ஆகிக் கொண்டு இருக்கின்றன. பட்டணங்களை விரிவுபடுத்துவதால் வளர்ச்சி காண முடியாது. நாடெங்கும் பசுமை ஆக்குவதால் மட்டுமே அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

mojosaurus@flickr