ஒற்றை நாற்று நடவு! ஒப்பில்லா மகசூல்!! வழிகாட்டும் தெலுங்கானா விவசாயி!!

பலனளிக்கும் பலபயிர் சாகுபடியை பற்றி கடந்த பதிவில் விளக்கிய தெலுங்கானா விவசாயி, இந்த பதிவில் ஒற்றைநாற்று நடவுமுறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்து ஒரு சாதனை விவசாயியாக மாறிய அனுபவங்களையும், சாகுபடி நுட்பங்களையும் நம்முடன் பகிர்கிறார்.
ஒற்றை நாற்று நடவு! ஒப்பில்லா மகசூல்!! வழிகாட்டும் தெலுங்கானா விவசாயி!!
 

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 31

பலனளிக்கும் பலபயிர் சாகுபடியை பற்றி கடந்த பதிவில் விளக்கிய தெலுங்கானா விவசாயி, இந்த பதிவில் ஒற்றைநாற்று நடவுமுறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்து ஒரு சாதனை விவசாயியாக மாறிய அனுபவங்களையும், சாகுபடி நுட்பங்களையும் நம்முடன் பகிர்கிறார்.

பூக்கள், பழங்கள், காய்கறிகள் என பல பயிர்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டிவரும் திரு. நாகரத்தின நாயுடு நெல் சாகுபடியில் இரண்டு மடங்கு வரை மகசூல் எடுக்கிறார். பெரும்பாலான விவசாயிகள் 45 மூட்டை மகசூல் எடுப்பதற்கே கஷ்டப்படும் போது, இவர் 92 மூட்டை வரை மகசூல் எடுத்திருக்கிறார், அதுவும் 75 கிலோ கொண்ட நெல் மூட்டை! எப்படி சாத்தியமானது என்று அவரே விளக்குகிறார்.

நெல் சாகுபடியில் புதிய நுட்பங்கள்

"அடிப்படையா நான் ஒற்றை நாற்று நடவு முறையை பின்பற்றினாலும் சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவேன், அதனால் எனக்கு சராசரியா 70 முதல் 80 மூட்டை வரை மகசூல் கிடைக்கிறது. 9 நாளுடைய இளம் நாற்று, நாற்று பறிக்கும் முறை, நாற்று நடும் முறை, சரியான இடைவெளி, நீர் நிறுத்தும் அளவு இந்த விஷயங்களை சரியா கவனிச்சா நல்ல மகசூல் நிச்சம் வரும்." என்று விளக்கமளிக்கத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்யும்போது 42 மூட்டை நெல் மகசூல் வந்தது. ஒற்றை நாற்று நடவு முறைக்கு மாறிய பின் ஆரம்பத்தில் ஒரு ஏக்கரில் சராசரியாக 65 மூட்டை நெல் மகசூல் எடுத்தேன், அதிகபட்சமாக 2004ம் வருடம் PPT ரகம் பயிர் செய்து 92 மூட்டை (75kg) அறுவடை செய்திருக்கிறேன்.

"பெரும்பாலான நெல் விவசாயிகள் டிராக்டர் ஓட்டவும், நாற்று நடவும், அறுவடை செய்யவும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். பயிரை குழந்தையைப்போல் கவனிப்பதில்லை, இதனால் அவர்களுக்கு வருமானமும் குறைவாகத்தான் வரும். Paddy is a lazy man crop என்ற நிலை தற்போது இருக்கிறது, இந்த நிலை மாறவேண்டும்.”

“அட நம்மூர்ல சொல்லுவாங்க இல்லீங்கோ... ஆடு மேய்க்காம கெட்டது, பயிரு பாக்காம கெட்டதுன்னு! அதைய தானுங்க தெலுங்கானா கார அண்ணா சொல்றாப்டி! சரி வாங்க அவர் சொல்றத வெகரமா கேட்டுப்போட்டு வருவோம்!”

திருந்திய நெல் சாகுபடி

"திருந்திய நெல் சாகுபடி முறையில் (SRI-The System of Rice Intensification) அனைத்து ரக நெல்லையும் பயிர் செய்ய முடியும். இது பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளுடன், சில நுட்பங்களை கவனித்து செய்வதாகும், இதற்கு எளிமையான கருவிகளே போதுமானது. இந்த முறையில் PPT 5204, PPT 145 போன்ற ரகங்களை நான் பயிர் செய்து வருகிறேன்."

"திருந்திய நெல் சாகுபடி முறையை பலரும் செய்து வருகிறார்கள் எனினும் குறைந்த விதைகள், இளம் நாற்றுகள், நாற்று பறிக்கும் முறை, நாற்று நடும் முறை, தேவையான இடைவெளி, குறைந்த தண்ணீர் போன்ற நுட்பங்களை கவனித்துச் செய்தால் ஒற்றை நாற்று நடவு மூலம் அதிக மகசூல் தரக்கூடியதாக இருக்கும்."

"இந்த தொழில்நுட்பத்தில் சின்னசின்ன விஷயங்களை கவனித்துச் செய்ய வேண்டும், மற்றபடி உழவு மட்டும் டிராக்டர் வைத்து ஓட்டிக் கொண்டு, பரம்படித்தல், செங்கல் சூத்திரம், மார்க்கர், கோனாவீடர், பறவை தாங்கி போன்ற எளிமையான கருவிகளுடன் இயற்கை விவசாய வழிமுறைகளையும் கடைபிடித்தால் நிச்சயம் நல்ல மகசூல் எடுக்க முடியும்." என்று அறிமுகம் கொடுத்துவிட்டு விளக்கமாகப் பேசத் தொடங்கினார்.

நாற்றங்கால் (Raised beds)

"நடவு வயலிலேயே ஒரு ஓரத்தில் நாற்றங்கால் அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 1 மீட்டர் அகலமும் 25 மீட்டர் நீளமும் உடைய நாற்றங்காலை வயலின் மட்டத்தைவிட ஒன்று அல்லது இரண்டு அங்குல உயரம் அதிகமாக இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த நாற்றங்கால் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது, பள்ளமாக இருந்தால் தண்ணீர் தேங்கும் அங்கு விதைகள் முளைக்காமல் அழுகிவிடும். மேடான இடத்தில் விதைகள் முளைப்பது தாமதமாகும். இவ்விதம் நடவு வயலிலேயே நாற்றங்கால் அமைப்பதினால் ஏக்கருக்கு ரூ. 3000 வரை மிச்சம் செய்ய முடியும்."

விதை நேர்த்தி, விதைப்பு

"ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை நெல்லே போதுமானது. எனக்கு ஒன்றேகால் கிலோ விதைதான் தேவைப்படுகிறது. விதை நேர்த்தி செய்தபின் 24 மணி நேரம் ஊறவைத்து 10 மணி நேரம் சணல் சாக்கில் மூட்டை கட்டி வைத்தால் நெல் முளைவிடத் தொடங்கும். நெல்லின் முளை வெண்மையாகத் தெரியும் போது விதைப்பதற்கு சரியான நேரம்." (விதை நேர்த்தி பற்றி ஆலங்குடி பெருமாள் ஐயா அவர்களின் கட்டுரையில் விவரித்துள்ளோம்.)

"ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றங்காலுக்கு நன்கு தூள் செய்யப்பட்ட கனஜீவாமிர்தம் 40 கிலோ போதுமானது. நாற்றங்காலில் 20 கிலோ கனஜீவாமிர்தம் தூவிவிட்டு பின் விதை நெல்லை தூவி, விதைகளுக்கு மேல் 20 கிலோ கனஜீவாமிர்தத்தை தூவிவிடவேண்டும். இங்கு கவனிக்க வேண்டியது கனஜீவாமிர்தம் நன்கு தூள் செய்திருக்க வேண்டும், தூளாக இருந்தால்தான் சத்துக்கள் தண்ணீர்ல் கரைந்திருக்கும், நாற்றுகளும் சத்துக்களை கிரகித்துக்கொண்டு வாளிப்பாக வளரும்."

"நாற்றங்காலுக்கு தேவையான தண்ணீரை பூவாளியால் விடவேண்டும். வெய்யிலின் அளவைப் பொறுத்து அவ்வப்போது தேவைக்கேற்ப பூவாளியால் தண்ணீர் விடவேண்டும். பறவைகள் தொல்லை இருப்பின் விதை நீக்கிய வைக்கோலை பரப்பி வைக்க வேண்டும், இந்த வைக்கோலை மூன்றாவது நாள் காலையில் நீக்கி விட வேண்டும், இல்லையேல் முளைப்பு பாதிக்கப்படும்.”

“அட சாமி... நகத்தால கிள்ளுறத கோடாரியால வெட்டுற மாதிரி நம்ம விவசாயிங்க சின்ன சின்ன நுட்பங்கள்லாம் தெரியாம ரொம்ப மெனக்கெட்டு வேலை பாப்பாங்க இல்லீங்கோ! ஆனா... இங்க பாருங்க இந்த நாகரத்தினம் அண்ணா சின்ன சின்ன தொழிற்நுட்பத்தால எம்புட்டு நேர்த்தியா செய்யுறாப்டி?!”

நாற்றின் வயது

"இளம் நாற்றுகள் நடுவதற்கு உகந்தது, 9 நாள் நாற்று சரியான வயதுடையது, இந்த நாற்று 3 அங்குல உயரம் வரை இருக்கும். இதை இளம் நாற்று என்று சொல்வது கூட தவறு. இந்த வயதுடைய நாற்று சரியான வயதுடைய நாற்றாகும். இந்த கருத்தை ஒவ்வொரு நெல் விவசாயிகளும் புரிந்து கொள்வது அவசியம். 30 நாள் வளர்ந்து முற்றிப்போன நாற்றில், நாற்றுக்கான வீரியத் தன்மையே இருக்காது."

"சாதாரணமாக ஒரு நெற்பயிரின் வயது 125 நாட்கள் என்று வைத்துக் கொண்டால், 30 நாள் முதல் 40 நாள் வயதுடைய நாற்று அதன் வயதில் மூன்றில் ஒரு பங்காகும். சரியான பருவத்தில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும், வயது முதிர்ந்தவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? அவ்வாறே முற்றிப்போன நாற்றால் நல்ல மகசூலை தரமுடியுமா? இளம் நாற்றுகள் வீரியத்தோடு வளர்ந்து நல்ல மகசூலைத் தருகின்றன."

நாற்றுகளுக்கு ஏற்படும் பாதிப்பு

"பொதுவாக நாற்றை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். நாற்றைப் பிடுங்கி, கட்டுக்கட்டி, தட்டி, தூக்கி வீசி, வெய்யிலில் போட்டு, பல மணி நேரம் வைத்திருந்து அதன் பின் நடுவது அந்த நாற்றுகளுக்கு ஒரு விபத்தை போன்றது. இதனால் தண்டுப்பகுதி பாதிக்கப்படுவதோடு வேர்களிலும் அதிர்ச்சி ஏற்படுவதினால் நாற்றின் வளர்ச்சியும் வீரியமும் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட நாற்றுகள் 5 நாட்கள் கழித்துதான் உயிர் பிடிக்கின்றன. அந்த நாற்றால் நல்ல மகசூலை தர முடியுமா?" என்று ஒரு கேள்வியைத் தொடுத்தார், தொடர்ந்து அதற்கான தீர்வையும் கூறினார்.

நாற்று பறிக்கும் முறை

"நாற்றுகளை கைகளால் பிடுங்காமல் கரண்டி வைத்து எடுக்கவேண்டும். எனது பண்ணையில் 9 நாள் வளர்ந்த நாற்றுக்களை தட்டையான கரண்டியை வைத்து அடி மண்ணோடு பெயர்த்தெடுத்து அப்படியே பிளாஸ்டிக் டிரேயில் வைக்கிறோம்."

"இதனால் வேர்களின் நுனிகள் அறுந்து விடாமல் இருக்கும் மேலும் வேருடன் தாய் மண்ணும் விதை நெல்லும் சேர்ந்திருக்கும். நாற்றுகள் ட்ரையில் வைப்பதால் கட்டும் வேலையும் இல்லை. ட்ரேயில் உள்ள நாற்றுக்களை ஒவ்வொன்றாக எடுத்து நடவேண்டும். வேரோடு தாய் மண் சேர்ந்திருப்பதால் நாற்றுகள் அன்றே உயிர்பிடித்து விடும். முக்கியமாக கவனிக்க வேண்டியது எடுத்த நாற்றை உடனடியாக நடவு செய்துவிடவேண்டும்."

வேர்த் தூவிகள் (Root hairs)

otrai-natru-nadavu-oppilla-magasool-vazhikattum-telengana-vivasayi-5

மேற்கண்ட விஷயத்தை நாம் பின்வருமாறு விளங்கிக் கொள்ளலாம். வளர்ந்த நாற்றுக்களில் வேர் நன்றாக வளர்ந்திருக்கும். அந்த நாற்றை பிடுங்கும்போது வேர்களின் நுனி அறுந்து விடும். அந்த வேர் நுனியில் தான் வேர்த் துவிகள் உள்ளன.

ஒரு செடியின் தண்டுப் பகுதியில் இலைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வேர் பகுதியில் வேர் தூவிகள் மிக முக்கியமானது. இலைகள் சூரிய ஒளியையும் காற்றையும் கிரகித்துக் கொள்கிறது. அவ்வாறே வேர்த்தூவிகள் நுண்ணூட்டங்களையும் தண்ணீரையும் உட்கிரகித்துக் கொள்கிறது.

வளர்ந்த நாற்றைப் பிடுங்கி நடும்போது என்ன நிகழ்கிறது?

வளர்ந்த நாற்றில் நிறைய வேர்கள் வளர்ந்திருக்கும். அதற்கேற்ப இலைகளும் வளர்ந்திருக்கும். வளர்ந்த செடியை பிடுங்கி நடும் போது வேர் நுனிகள் அறுந்திருக்கும், இதனால் நாற்றுகளால் தண்ணீரை உட்கிரகிக்க முடியாமல் சோர்வடைகிறது. வேர்களில் வேர்த்தூவிகள் வளரும் வரை நாற்றுகள் வாடியே காணப்படும். இரண்டு மூன்று நாட்களில் வேர்த்தூவிகள் வளரத்துவங்கிய பின் 5 நாட்கள் கழித்தே நாற்றுகளில் பச்சை பிடிக்கிறது. இந்த இடர்பாடு பயிரின் வீரியத்தைக் குறைத்து விடுகிறது.

“வேர் பிடிச்சு நின்னுட்டா வேளம் மிதிச்சாலும் பயிர் சாயாதுன்னு சொல்லுவாங்க என்ற ஊர்ல! வேர் நல்லா பிடிக்கோணும்னா வேர நல்லா கவனிச்சு பிடுங்கி நடுறது முக்கியமுங்க. அதைய எவ்வளவு வெகரமா செய்யுறாப்டி இந்த அண்ணா... வேர் இருந்தாதானுங்களே விளைச்சல் இருக்கும்?!”

நிலம் தயாரிப்பு

"நிலத்தை மூன்று முறை உழுதபின் விவசாயிக்கு எந்த இயற்கை இடுபொருள் சவுகரியமோ அதை அடியுரமா போட்டுக்கலாம், இடுபொருட்களை காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. அவரது சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கிற எந்த இயற்கை இடுபொருளையும் பயன்படுத்தலாம்.

எனது வயலில் அடியுரமா தொழு உரம் போடுவேன். கூடவே வேப்பிலையையும் போடுவேன். வேப்பிலை 20 நாளில் மட்கும். வேப்பிலை ஈர்க்கில் உள்ள தோலும் குச்சியும் தொடர்ந்து மக்கி பயிர்களுக்கு தேவையான ஊட்டத்தையும் எதிர்ப்பு சக்தியையும் இரண்டு மாதம் வரைக்கும் தரும்."

பரம்படித்தல்

"நாற்றின் உயரம் 3 அங்குலம் மட்டுமே இருப்பதால் நிலத்தை சமமாக பரம்படிக்க வேண்டும். கொஞ்சம் மேடு பள்ளமாகவோ அல்லது ஒரு திசை உயர்ந்தும் ஒரு திசை தாழ்ந்தும் இருக்கக் கூடாது. நவீனமாக எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும் பழைய முறையில் மாடு கட்டித்தான் பரப்படிக்கப் படுகிறது. 24 மணிநேரம் தண்ணீர் நிறுத்தி 12 மணி நேரம் வடியவிட்டால் நிலம் தயிர் பதத்திற்கு வந்துவிடும். தயிர் பதம் இருந்தால் தான் குறிபோடும் கருவியை (Marker) உருட்ட முடியும்."

சதுர நடவு

otrai-natru-nadavu-oppilla-magasool-vazhikattum-telengana-vivasayi-4

"தயிர் பதத்தில் உள்ள நிலத்தை 2 மீட்டர் அளவில் இடைவெளி விட்டு கிழக்கு மேற்காக செங்கற்களை வைத்து இழுத்து 50 செ.மீட்டர் அளவில் வாய்க்கால் அமைத்துக் கொள்ள வேண்டும். வயல் முழுக்க 2 மீட்டர் இடைவெளியில் 50 செ.மீ வாய்க்கால் எடுத்து தொடர்ச்சியாக பிரித்துக் கொள்ளவேண்டும். நடவு செய்யும் போது இந்த வாய்க்காலில் நின்று நடவு செய்ய வேண்டும், பாத்தியில் நடக்கக் கூடாது, தண்ணீரும் இந்த வாய்க்கால் வழியாகத்தான் பாயும். நிலம் எந்த திசைநோக்கி இருந்தாலும் அதற்கேற்ப கயிறு கட்டி சதுர நடவு செய்ய முடியும்."

குறியிடும் கருவி (Marker)

"இந்த 2 மீட்டர் அளவுள்ள பாத்தியில் 25 செ.மீ இடைவெளியில் 8 வரிசையில் நாற்று நடவு செய்ய முடியும். நாற்றுகள் நேர்கோட்டில் இருந்தால்தான் களையெடுக்கும் போது கோனாவீடர் ஓட்ட ஏதுவாக இருக்கும். நாற்றுக்களை நேர்க்கோட்டில் நடுவதற்காக சேற்றில் கோடு போட மார்க்கர் என்ற கருவி பயன்படுகிறது. 2 மீட்டர் அகலமுள்ள இக்கருவியை உருட்டும் போது நீளவாக்கிலும் அகலவாக்கிலும் 25 செ.மீ இடைவெளியில் சதுரக் கோடு சேற்றில் பதியும்."

நடவு செய்தல்

"இந்த சதுரக் குறியீடுகளின் மூலைகளில் மட்டும் நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். இதனால் நாற்றுகள் கிழக்கு மேற்கு, வடக்கு தெற்கு என இரண்டு திசைகளிலும் நேர்கோட்டில் இருக்கும். எனவே இரண்டு திசைகளிலும் கோனாவீடர் ஓட்டி களையெடுப்பதும் எளிது. மேலும் எல்லா நாற்றுக்களுக்கும் நல்ல சூரிய ஒளி கிடைப்பதினால் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) அதிகரித்து மகசூலும் கூடுகிறது. நடவு முடித்தபின் பேப்பர் கனத்துக்கு தண்ணீர் விட்டால் போதுமானது, இரண்டு நாள் கழித்து லேசாக நிலம் வெடிக்கும்போது தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக நிலத்தை வெடிக்க விடாமல் தண்ணீர் விட்டு வரவேண்டும்.

இவ்வாறு நடும்பொழுது 8 பெண் தொழிலாளர்களால் ஒரு ஏக்கர் நடவு செய்ய முடியும். நாற்றை தட்டில் எடுத்துவைக்க கூடுதலாக ஒருவர் தேவை. எங்கள் பண்ணையில் எங்கள் அம்மாவே நாற்று எடுத்து தருவார்கள். பாத்தியில் ஏறி நடவு செய்யக்கூடாது, வாய்காலில் நின்றுகொண்டுதான் நடவு செய்யவேண்டும், இதனால் பாத்தியில் பள்ளங்கள் ஏற்படுவதை குறைக்க முடியும்.

"மேலும் நாற்றை ஆழமாக நடவு செய்யக்கூடாது. நான்றின் விதை மற்றும் தாய்மண் மட்டும் சேற்றில் பதியுமாறு மேலோட்டமாகவே நடவு செய்யவேண்டும். அப்பொழுதுதான் நிறைய தூர்கள் வளரும். நாற்றை ஆழமாக நட்டால் தூர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இவ்விதம் நடும் போது 100 சதவீத நாற்றுகள் நிச்சயம் பிழைக்கும்."

“தாளம் பாத்து பாட்டுப்படி ஆழம் பாத்து நாத்தப் புடின்னு என்ற அப்பாரு அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! அதையதானுங்க இங்க நெல் நடவு செய்யுறதுலயும் கவனிக்க வேண்டியிருக்கு!”

நீர் மேலாண்மை மற்றும் வடிகால் வசதி

"இளம் நாற்றுக்களை நடுவதால் நாற்று நட்டு உடனடியாக மழை பெய்தால் நாற்றுக்கள் அழுகி போக வாய்ப்புள்ளது, அதனால் கண்டிப்பாக வடிகால் வசதி செய்திருக்க வேண்டும். அதற்கேற்ப நிலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்."

"இந்த முறையில் வாய்க்கால்கள் அடுத்தடுத்து இருப்பதால் எல்லா பயிர்களுக்கும் தண்ணீர் சமமான அளவில் கிடைக்கிறது, மேலும் தண்ணீர் செலவும் குறைகிறது. நெற்பயிர், தாமரையை போன்ற ஒரு நீர்த்தாவரம் அல்ல, காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் விட்டால் போதுமானது. களைகளை கட்டுப்படுத்துவதற்காக நீர் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் குறைவான தண்ணீரை விடும் போதுதான் வேர்கள் நீரை நோக்கி நீண்டு வளர்ந்து, சத்துக்களையும் நன்றாக கிரகித்துக் கொள்கிறது. அதிகமாக தண்ணீர் விடும் போது வேர்களின் எண்ணிக்கை மற்றும் நீளம் குறைந்து விடுகிறது."

"செடியின் வேர்கள் நீர் உறிஞ்சும் செயலை மட்டும் செய்வதில்லை. பயிர் சாய்ந்து விடாமல் உறுதியாக நிற்கவும் உதவுகிறது. அதிகமாக நீர் நிறுத்தி வளரும் பயிர்கள் காற்றடிக்கும் போது சாய்ந்து விடுகிறது. தண்ணீர் குறைவாக நிறுத்தி வளரும் பயிர்கள் புயல் காற்றைக்கூட தாங்குமளவிற்கு உறுதியாக வளர்கிறது. அதனால் தண்ணீரைக் குறைவாக நிறுத்த வேண்டும், எனினும் நிலம் காய்ந்து வெடிப்பு ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

தூர்களின் எண்ணிக்கை

otrai-natru-nadavu-oppilla-magasool-vazhikattum-telengana-vivasayi-1

otrai-natru-nadavu-oppilla-magasool-vazhikattum-telengana-vivasayi-2

"ஏற்கனவே நான் சொன்னது போல் 9 நாள் வயதுடைய நாற்று நட்ட உடனே உயிர்பிடித்து விடும். 12 வது நாளில் 2 தூர்கள், 14 வது நாளில் 4 தூர்கள், 16 வது நாளில் 8 தூர்கள் என இரண்டு நாட்களில் இரண்டு மடங்காக தூர்களின் எண்ணிக்கை கிளைக்கும்." என விளக்கங்களை கூறிவிட்டு ஒரு நாற்றை எங்களுக்கு பிடுங்கிக் காண்பித்தார்.

"இந்த நாற்றை 9 வது நாள் பிடுங்கி நட்டேன், நட்டு 18 நாள் ஆயிருக்கு, மொத்த வயது 27 நாள்தான், இதில் 22 தூர்கள் வந்திருக்கு, நீங்களே பாருங்க" என்று அந்த நாற்றின் தூர்களை எண்ணிக் காண்பித்தார். இன்னும் சில நாட்களில் தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 40 நாட்களில் 100 தூர்கள் கூட வரும், அதிகபட்சமாக 120 தூர்கள் வந்துள்ளது. குறைந்தபட்சம் 35 தூர்கள் இருந்தாலும் 75 மூட்டை மகசூல் கிடைக்கும்."

இடுபொருள்கள்

"ஆர்வம் உள்ள விவசாயிகள் எனது பண்ணையை வந்து பார்க்கலாம், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தயாராக இருக்கிறேன்" என்று கூறி விவசாயிகளின் நல் வாழ்வில் அவரது அக்கறையையும் வெளிப்படுத்தினார்.

"விவசாயிகளுக்கு எந்த இடுபொருள் கிடைக்குமோ அந்த இடுபொருட்களை போட்டுக் கொள்ளலாம். மாடு உள்ளவர்கள் மாட்டு சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி இடுபொருட்கள் செய்துகொள்ளலாம், இல்லாதவர்கள் இலைதழைகளை கூட அடியுரமாகப் பயன்படுத்தலாம். மொத்தத்தில் இயற்கை இடுபொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும், அவ்வளவுதான்."

உரமாகும் களை

"விவசாயிகள் களைகளை கட்டுப்படுத்தவதற்காக அதிகமாக தண்ணீர் நிறுத்துகிறார்கள், பயிரையும் நெருக்கமாக நடுகிறார்கள். அது மட்டுமல்லாது இரசாயன விவசாயிகள் களைக்கொல்லியையும் தெளித்து நிலத்தை பாழ்படுத்துகிறார்கள். களைகள் நல்ல பசுந்தாள் உரம் என்பதை மறந்து விடுகிறார்கள். கோனா வீடர் மூலம் களைகளை மடக்கி உழும் போது களைகள் மக்கி நல்ல உரமாக மாறுகிறது. எனவே ஒரு முறை களையெடுப்பதினால் ஒரு டன் வரை மகசூல் அதிகரிக்கிறது.

அதிகபட்சமாக நான்கு களை எடுக்கலாம். நட்ட பத்தாவது நாளில், முதல் களையெடுத்த பின் அடுத்தடுத்து 10 நாள் இடைவெளியில் களையெடுக்க வேண்டும். மொத்தம் நான்கு களை வரை எடுக்கலாம். நான்காவது களை எடுக்கும் போது பயிர்கள் உயரமாக வளர்ந்திருக்கும், இருந்தாலும் களை எடுப்பது நல்லது. களைகளே உரமாகி விடுவதால் தேவைப்படும் போது மட்டும் இயற்கை உரங்களை கொடுக்கிறேன்."

கோனாவீடர்

otrai-natru-nadavu-oppilla-magasool-vazhikattum-telengana-vivasayi-3

"களைகளை எடுக்க கோனாவீடர் பயன்படுத்த வேண்டும், கோனாவீடர் ஓட்டும் போது நாற்றுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு வேர்களும் நன்கு கிளைவிட்டு வளர்கிறது. களைகள் இல்லை என்றாலும் கோனாவீடர் ஓட்ட வேண்டும், நெற்பயிரின் வேர்கள் 10 அங்குல விட்டத்திற்கு வளரக்கூடியது. கோனா வீடர் ஓட்டும் போது மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. இதனால் வேர்கள் நன்றாக வளர்ச்சியடைகிறது."

"கோனாவீடர் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். தரமானதாகவும் எடை குறைந்ததாகவும் இருக்க வேண்டும். அதிக எடை இருந்தால் ஓட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். தொடர்ந்து பயன் படுத்தினாலும் தகடுகள் வளையாத அளவுக்கு உறுதியாகவும் இருக்க வேண்டும். இதை கவனத்தில் வைத்து கோனாவீடர் வாங்க வேண்டும்.

கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் அவசியம் களையெடுக்க வேண்டும். சதுர நடவு என்பதால் இரண்டு பக்கங்களிலும் கோனாவீடர் ஓட்ட முடியும், ஒரு பணியாளர் ஒரு நாளில் அரை ஏக்கர் வரை ஓட்ட முடியும்." தொடர்ந்து கோனாவீடரை ஓட்டி காண்பித்தார். ஈஷா விவசாயக் குழுவினரும் ஓட்டிப் பார்த்தனர், 25 செ.மீ இடைவெளியில் நட்ட பயிர்களுக்குகிடையே கோனாவீடர் நன்றாக ஓட்ட முடிகிறது.

பறவை தாங்கிகள் மூலம் பூச்சி நிர்வாகம்

"ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடைவெளி போதுமான அளவு இருப்பதால் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கிறது. இதனால் இலைகள் திடமாக வளர்வதால் பூச்சிகளால் இலையைத் தாக்க முடிவதில்லை."

"இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த பறவைகள் பெரும் பாங்காற்றுகின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பறவைகள் வந்து அமர்வதற்கு ஏற்ப T வடிவக்குச்சிகள் அல்லது மரத்தின் கிளைகளை வயலில் ஆங்காங்கே நட்டு வைப்பதுதான், வேலிகளிலும் பறவைகள் கூடுகட்டுவதற்கேற்ப மரங்களை வளர்க்கும் போது அதில் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பெரும்பாலான பறவைகள் பூச்சி புழுக்களை உண்பவையே, இதனால் பெருமளவு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது."

மகசூல்

"ஆரம்பத்தில் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்யும்போது 42 மூட்டை நெல் மகசூல் வந்தது. ஒற்றை நாற்று நடவு முறைக்கு மாறிய பின் ஆரம்பத்தில் ஒரு ஏக்கரில் சராசரியாக 65 மூட்டை நெல் மகசூல் எடுத்தேன், அதிகபட்சமாக 2004ம் வருடம் PPT ரகம் பயிர் செய்து 92 மூட்டை (75kg) அறுவடை செய்திருக்கிறேன். அதாவது ஒரு ஏக்கருக்கு 6900 கிலோ நெல் மகசூல் கிடைத்தது, இதை வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு சான்றிதழும் கொடுத்தனர். சராசரியா 75 மூட்டை நெல் கிடைக்கும், அதாவது ஏக்கருக்கு 5625 கிலோ நெல்" என்று சொல்லி ஆச்சரியப் படுத்திவிட்டு, நெல்லில் மறுதாம்பு வரும் என்று மற்றொரு ஆச்சரியத்தை அளித்தார்.

நெல் மறுதாம்பிலும் மகசூல்

"நெல்லில் மறுதாம்பு வருமா என்று நினைக்க வேண்டாம், நெல்லில் மறுதாம்பு விட்டு 35 முதல் 45 மூட்டை வரை மகசூலும் எடுத்திருக்கிறேன். மறுதாம்பு பயிர் 115 நாட்களில் அறுவடைக்கு வரும். நெல்லை அறுவடை செய்தபின், தண்ணீர் பாய்ச்சி கோனாவீடர் ஓட்டிவிட்டால் வேர்கள் நன்றாக கிளைத்து மறுதாம்பு வேகமாக வளரத்தொடங்கும். மீண்டும் 10 நாட்களுக்கு ஒருமுறை கோனாவீடர் ஓட்டி களையெடுத்து வந்தால் மகசூல் கிடைப்பது நிச்சயம்." என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இறுதியாக "பாரம்பரிய விவசாயத்துடன் தொழில் நுட்ப விஷயங்களையும் விவசாயிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். விவசாய அறிவு இருப்பதினால் தொழில்நுட்ப விஷயங்களை வீடியோவில் விளக்கிக் காட்டினால் விவசாயிகள் புரிந்து கொள்வார்கள். ஆர்வம் உள்ள விவசாயிகள் எனது பண்ணையை வந்து பார்க்கலாம், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தயாராக இருக்கிறேன்" என்று கூறி விவசாயிகளின் நல் வாழ்வில் அவரது அக்கறையையும் வெளிப்படுத்தினார்.

விருதுகள்

மறைந்த ஆந்திர முதல்வர் திரு. ராஜசேகர ரெட்டி மற்றும் தற்போதைய ஆந்திரா முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களும் இவரது பண்ணைக்கு சென்றுள்ளார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு. ஜார்ஜ் புஷ் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது ஆந்திராவிற்கு ஒரு முறை வந்திருக்கிறார், அப்போது நாகரத்தின நாயுடுவை அழைத்து பாராட்டியுள்ளார்.

மேலும் அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக இயக்குனர்கள், தொண்டு நிறுவன தலைவர்கள் என பலரும் பண்ணையை பார்வையிட்டுள்ளனர். மாநில அளவு, தேசிய அளவு மற்றும் உலக அளவில் பெற்ற 392 விருதுகள் அலமாரியை அலங்கரித்துக் கொண்டிருந்தன, அவைகளை காண்பித்துக்கொண்டே நம்மாழ்வார் ஐயா அவர்களை நினைவு கூர்ந்தார்.

"இதற்கெல்லாம் காரணம் நம்மாழ்வார் ஐயா தான், அவர் தான் எனக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். ஐயா என் தோட்டத்திற்கு வந்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவர் காட்டிய வழியில் இன்றுவரை சென்று கொண்டிருக்கிறேன்." என்று நன்றியை வெளிப்படுத்தினார்.

ஈஷா விவசாயக் குழுவினர் நம்மாழ்வார் ஐயா அவர்களை நினைவு கூர்ந்து திரு.நாகரத்தின நாயுடு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றனர். தமிழ் நாட்டிலும் இந்த நுட்பம் பரவட்டும் என்று நெல் நாற்றுகள் தலையசைத்து வழியனுப்பி வைத்தன.

குறிப்பு: இவரது பண்ணை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா செல்லும் சாலையில் 30 கி.மீ. பயணம் செய்தால் தரமாதிபேட்டை கிராமத்தில் உள்ளது.

தொடர்புக்கு:
திரு. நாகரத்தின நாயுடு: 9440424463

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம் : 8300093777

 

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1