‘பெரிய விவசாயிகளுக்குதான் இயற்கை விவசாயம் ஒத்துவரும். நான்கைந்து ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கெல்லாம் அது ஒத்துவராது’ என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. இந்த கருத்தை தவிடு பொடியாக்கும் வகையில் 4 ஏக்கர் நிலத்தில் பல் வேறு வகையான காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகிறார் தாராபுரம் இயற்கை விவசாயி ஜெகதீஷ்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்துக்கு மதிய வேளை நேரத்தில் சென்றோம். தோட்டத்தை சுற்றிக்காட்டியவாறே பேச ஆரம்பித்தார் விவசாயி ஜெகதீஷ்.

 

“எங்க அப்பாவும் அம்மாவும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் 10 வருஷமா பால் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தேன். 2007-ல் இந்த நாலு ஏக்கர் நிலத்த வாங்கினேன். முதல் 3 வருஷம் ரசாயன விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அடுத்த 2 வருஷம் ரசாயன உரத்துக்கு பதிலா இயற்கை உரம் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஆனா, பூச்சிக்கொல்லி மருந்தை மட்டும் தொடர்ந்து அடிச்சுக்கிட்டு இருந்தேன்.

கைகொடுத்த 8 நாள் பயிற்சி

2013-ல் என்னோட சம்சாரத்த பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிலே சேர்த்திருந்தேன். அந்த சமயத்துல விவசாயம் சம்பந்தமான பத்திரிக்கைகளை வாங்கி படிக்க ஆரம்பிச்சேன். அதை நடைமுறைப்படுத்திப் பார்த்தேன். முழுபலன் கிடைக்கலை. 2015-ல் ஈஷா நடத்துன 8 நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகிட்ட பிறகுதான் முறையா இயற்கை விவசாயம் பண்றது எப்படினு கத்துக்கிட்டேன். இப்போ மத்த விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், ஜெகதீஷ்.

சுழற்சி முறையில் சாகுபடி

சதுர வடிவில் உள்ள தனது தோட்டத்தை தலா ஒரு ஏக்கர் என்ற அடிப்படையில் 4 பகுதிகளாக அவர் பிரித்துள்ளார். முதல் ஏக்கர் வெங்காயம் மற்றும் காய்கறிகளுக்காக, 2-வது ஏக்கர் வெங்காயம் மற்றும் இனிப்பு சோளத்துக்காக, 3-வது ஏக்கர் செடி முருங்கை மற்றும் பழ மரங்களுக்காக, 4-வது ஏக்கர் அடுத்த சாகுபடிக்காக (உழுது காலியாக போட்டுள்ளார்) என சுழற்சி முறையில் விவசாயம் செய்கிறார். கத்தரி, வெண்டை, செடி அவரை, கொத்தமல்லி, வெந்தய கீரை, மிளகாய், தக்காளி போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்கிறார்.

சில்லரை விற்பனை

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “ஒரே பயிரை நம்பி இருந்தால் நஷ்டம் வர்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு. ஆனா, என்னோட சாகுபடி முறையில் அந்த ரிஸ்க் இல்லை. நான் உற்பத்தி பண்ற காய்கறிகளை பெரும்பாலும் உழவர் சந்தைக்கு கொண்டு போயி நேரடியா விற்பனை பண்றேன். மொத்த வியாபாரிகளிடம் கொண்டு போனால் அடிமாட்டு விலைக்கே கேக்குறாங்க. அதனாலதான் நான் இப்படி பண்றேன்” என்றார்.

எதிர்காலத்துக்காக

“லட்சம் லட்சமா பணம் சம்பாதிக்கிற ஆசையில் நான் இயற்கை விவசாயம் பண்ணல. நாம் சாப்பிடுகிற சாப்பாட்டுல விஷம் இருக்கக்கூடாது. நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கும் விஷமில்லாத காய்கறிகளை கொடுக்கணும். அதுல கிடைக்கிற மன திருப்திக்காகத்தான் இதை செய்யுறேன்” என்றார்.

அவரது தோட்டத்தில் விளைந்த பப்பாளிப் பழம் அதிக தித்திப்பாக இருந்தது. இயற்கையில் விளைந்த பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் அலாதி சுவை இருக்கும் என்பது உண்மைதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

பயிரிடும் முறை:

“ஒரு ஏக்கரில் வைகாசி பட்டத்துல அடி உரத்தோட சேர்த்து கொத்தமல்லி, வெந்தய கீரை விதைகளை போட்டு நிலத்த உழுதுருவேன். அதுல 4 அங்குல இடைவெளிவிட்டு முதலில் சின்ன வெங்காயம் நடுவேன். 40-வது நாளில் ஊடுபயிராக ஒரு வரிசையில் வெண்டை விதையையும் அதற்கடுத்த வரிசையில் செடி அவரை விதையையும் நடுவேன். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் ஒன்றரை அடி இடைவெளி விடுவேன். அந்த இடைவெளியில் இனிப்பு சோள விதைகளை அடிக்கு ஒன்றாக நடுவேன். இதுக்கு இடையில் 25-30 நாட்களுக்குள் வெந்தய கீரையை அறுவடை பண்ணிடுவேன். 35-40 நாட்களில் கொத்தமல்லியையும் அறுவடை பண்ணிடுவேன்.

60-வது நாளில் வெங்காயமும், 80-வது நாளில் இனிப்பு சோளமும் முழுமையாக பலன்தரும். அப்பதான் வெண்டையும், அவரையும் காய்க்கத் தொடங்கும். 80-130 நாட்கள் வரை வெண்டை அறுவடை நடக்கும். 100- 180 நாட்கள் வரை செடி அவரையை அறுவடை பண்ணிடுவேன்.

இதுக்கு இடையில் 130-வது நாளில் வெண்டை செடிகளுக்கு இடையில் 3 அடி இடைவெளிவிட்டு கத்தரி நாத்து நட்டுருவேன். அதுக்கு இடையில் இனிப்பு சோள விதைகளை 2-வது வாட்டி போட்டுருவேன். 190-வது நாள்ல இருந்து 340 நாள் வரை கத்தரியை பறிப்பேன். 210 நாளில் இனிப்பு சோளம் அறுவடை பண்ணிடுவேன்.

இப்படியே ஒரு வருஷத்துக்கு மாத்தி மாத்தி நட்டு தொடர்ச்சியா அறுவடை பண்ணுவேன். அதனால என் நிலத்தை வருஷத்துக்கு ஒருவாட்டி உழுதா போதும்” என விளக்கமாக கூறினார், ஜெகதீஷ்.

இதேபோன்று, மீதமுள்ள 3 ஏக்கரிலும் வெங்காயம், கத்தரி, செடி முருங்கை, வெண்டை, அவரை, இனிப்பு சோளம், மிளகாய் என தேவைகேற்ப மாற்றி மாற்றி விளைவித்து வருகிறார்.

விதை விதைப்போம்…

நன்றி: தினத்தந்தி

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியர் குறிப்பு: இந்தக் கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது.

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!