ஒரு பள்ளி, ஒரு டீச்சர், நிறைய அனுபவங்கள்!

திருமதி.சாவித்திரி அவர்கள் ஈஷா வித்யாவில் முதன்முதலில் பணியில் சேர்ந்த மிகச்சிலரில் ஒருவர். ஈஷா வித்யாவில் கடந்த 8 வருடங்களாக ஆசிரியப் பணியாற்றி வரும் அவர் தனது அனுபவங்கள் குறித்து இங்கு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்!
 

திருமதி.சாவித்திரி அவர்கள் ஈஷா வித்யாவில் முதன்முதலில் பணியில் சேர்ந்த மிகச்சிலரில் ஒருவர். ஈஷா வித்யாவில் கடந்த 8 வருடங்களாக ஆசிரியப் பணியாற்றி வரும் அவர் தனது அனுபவங்கள் குறித்து இங்கு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்!

திருமதி.சாவித்திரி,
உதவி முதல்வர்,
கோவை ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளி

பெரும்பாலான இந்திய மாணவர்களைப் போல நான் பள்ளி மற்றும் பட்டப்படிப்பை அரசுக் கல்வி நிறுவனங்களில்தான் படித்தேன். நான் தமிழ் மீடியத்தில் படித்ததினால், ஆங்கிலத்தில் அப்போது எனது திறமை போதுமானதாக இல்லை.

எனக்கு கற்றுத் தருவதில் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆனால் ஒரு சிறந்த ஆசிரியைக்கான திறன் எனக்கு இருக்கிறதா என்னும் சந்தேகம் என்னிடம் இருந்தது.

பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, 1997ல் ஈஷா யோகா வகுப்பு கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இன்னும் அந்த நாள் எனக்கு நினைவில் உள்ளது. 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி சத்குருவை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றேன். அவர் எனக்கு எதிரிலேயே இருந்தார். அவர் என்னைப் பார்த்து சிரித்தார். அந்த ஷணத்தில் எனது இதயத்தில் ஒரு பொறி தோன்றி உடலெங்கும் பரவியது. இன்றைக்கும் நான் அதை நினைத்துப் பார்க்கும்போது, அதே உணர்வைப் பெற முடிகிறது. அதுதான் எனது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த நாளிலிருந்து எனது அனைத்து விருப்பங்களும் கனவுகளும் நனவாகத் தொடங்கின. இன்று வரை சத்குருதான் எனது வாழ்வில் அதிசயங்களை நடத்திவருவதாக நினைக்கிறேன்.

2006ம் ஆண்டில், என் இருப்பிடத்திற்கு அருகிலேயே, ஒரு கிராமத்தில் ஈஷா ஒரு பள்ளி ஆரம்பிக்க இருப்பதாக என் தந்தை மூலம் அறிந்தேன். எனது தந்தையின் உதவியுடன் நான் அங்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வு நடந்த அந்த நாளிலேயே, ஆசிரியைக்கு தேர்வான செய்தியும் கிடைத்தது. அப்படித்தான் 2006லிருந்து எனது ஆசிரியர் பணி துவங்கியது.

எனக்கு கற்றுத் தருவதில் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆனால் ஒரு சிறந்த ஆசிரியைக்கான திறன் எனக்கு இருக்கிறதா என்னும் சந்தேகம் என்னிடம் இருந்தது. நான் குழந்தைகளை மிகவும் விரும்புபவள், அவர்களுடனேயே எப்போதும் இருக்க ஆசைப்படுபவள். நான் ஆசிரியை பணியைத் தேர்வு செய்ய அதுவும் ஒரு காரணம். ஆசிரியர் பணி எனக்கு புதியது. ஈஷா வித்யாவின் பயிற்றுநர் குழு பல பயிற்சி முறைகள் மூலம் எங்களுக்கு பயிற்சியளித்தது. அந்த பயிற்சிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஸ்' வகுப்புகளும் அடங்கும். ஆசிரியையாக வேண்டும் என்னும் கனவு இப்படித்தான் நனவாக ஆரம்பித்தது, நானும் குழந்தைகளுடன் சந்தோஷமாக பணிபுரிய ஆரம்பித்தேன்.

எனது மாணவர்களோடு எனது ஆசிரிய வாழ்க்கையும் தொடர்ந்து வளர்ந்து கொண்டுள்ளது.

முதல் வருடம் யு.கே.ஜி குழந்தைகளுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் படித்த குழந்தைகள் இப்போது வளர்ந்து 7ம் வகுப்பில் படிப்பதைப் பார்க்கும்போது, மனம் நிறைவாக இருக்கிறது. இப்போது அவர்களுக்கு நான் சமூக அறிவியல் வகுப்பு எடுக்கிறேன். அவர்களுடனான எனது பந்தம் மிகவும் உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் முடிவுற்ற பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அவர்களின் பங்களிப்பைப் பார்த்த போது எனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே என்னிடம் இல்லை. இதை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும், ஆனால் எனது மகன் வளர்ந்தபோது கூட நான் அந்த அளவு மகிழ்ச்சியை உணரவில்லை.

எனது மாணவர்களோடு எனது ஆசிரிய வாழ்க்கையும் தொடர்ந்து வளர்ந்து கொண்டுள்ளது. ஈஷாவித்யாவில் ஆசிரியர்களுக்கு அளித்து வரும் தொடர்ந்த பயிற்சிகளாலும் மற்ற நிறைவான சூழ்நிலைகளாலும் இது சாத்தியமாகியிருக்கிறது. எனது தகவல் தொடர்பு திறமையை நான் மிகவும் வளர்த்துக் கொண்டுள்ளேன். என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடுபவர்கள், நான் பட்டப்படிப்பு வரை தமிழ் மீடியத்தில்தான் படித்தேன் என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.

ஈஷா வித்யாவில் 8 வருடங்களை நான் கடந்துவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய நாள்தான். இங்கு கற்றல் என்பது ஒரு தொடர் செயல்முறையாக இருக்கிறது. புதிய புதிய கற்பிக்கும் முறைகளை, எங்களது பயிற்றுனர் குழு, எங்களுக்கு எப்போதும் கற்றுக்கொடுத்து வருகிறது. எனது பணியில் எனக்கு எப்போதும் போர் அடித்ததே இல்லை. சத்குருவின் கனவுப்படி, கிராம மாணவர்களுக்கு கற்பித்து உயர்வடையச் செய்வதுதான் இப்போது எனது ஒரே நோக்கமாக இருக்கிறது. எனது மாணவர்களுக்கு நான் இன்னமும் நிறைய வழங்கவேண்டும். இன்னமும் கூட எனது ஆங்கிலத்தை நான் மெருகேற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மிக சிறந்த ஆங்கிலத்தை என்னால் கற்றுத்தர முடியும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் ஈஷா வித்யாவில் ஒவ்வொரு நிமிஷமும் நான் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நன்றி சத்குரு, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக.