திரு. சிதம்பரம் ஒரு பள்ளித்தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியர் என்றால் நரைத்த முடியையும் கடுமையான முகத்தையும் கற்பனை செய்திட வேண்டாம். இளமையும் துடிப்பும் கல்வித்துறையின் மீது நீங்கா காதலும் கொண்ட இளம் தலைமை ஆசிரியர். கடந்த வருடம் இளம் தலைமை ஆசிரியர் விருதினைப் பெற்றவர்.

சமுதாயத்தில் பெரும் மாற்றத்தையும் தேசத்தின் வளர்ச்சியையும் கல்வியின் மூலம் நிச்சயம் ஏற்படுத்த இயலும் என்ற நம்பிக்கை கொண்டவர். ஈஷா வித்யா பள்ளிகளைப் பற்றி கேள்விப்பட்ட அவர் தன் வாழ்வின் நோக்கத்திற்கும், சமுதாயத்தில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தவும் இங்கு வேலை செய்வதுதான் சிறப்பாக இருக்கும் என்று முடிவுசெய்தார். தான் வேலைப் பார்த்து வந்த பள்ளியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு ஈஷா வித்யாவில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

வீதி வீதியாக சென்று கிராமோத்சவத்தை பற்றி விளக்கினார். பிரசுரங்களை அச்சடித்து விநியோகம் செய்தனர். வாட்ஸப்பில் (whatsapp) மின்னல் வேகத்தில் நண்பர்கள் குழு மூலம் செய்தி பரவியது. ஒரே வாரத்தில் 36 குழுக்கள் உருவாக்கப்பட்டது.

 

தர்மபுரியில் ஈஷா வித்யா பள்ளியில் இவர் இணைந்து வெறும் 8 மாதங்கள் மட்டுமே ஆகிறது. பள்ளியில் மட்டுமல்ல. சமுதாயத்திலும் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தார். தர்மபுரியில் இதுவரை கிராமோத்சவ விளையாட்டுக் குழுக்கள் எதுவும் இல்லை. தர்மபுரியில் ஏன் கிராமோத்சவ விளையாட்டினை கொண்டுவரக் கூடாது என நினைத்தார்.

சாதாரணமாக இதற்கான ஏற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கிவிடும். தர்மபுரியில் இதற்கான குழுக்கள் ஏற்கனவே இல்லாததால் இன்னும் அதிக நேரம் தேவைப்படும். ஆனால், இறுதி நேரத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்களால், “உங்களுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. உங்களால் எத்தனைக் குழுக்களை உருவாக்க இயலுமோ அதனை முயற்சி செய்யுங்கள்,” என்று ஈஷா யோக மையத்திலிருந்து கூறப்பட்டது.

அனுபவம் இல்லை, ஆனால் ஆர்வம் இருந்தது! நேரம் இல்லை, ஆனால் தொழில்நுட்பம் கை கொடுத்தது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விளம்பரம் செய்திட நிதியும் குறைவு! அதனால் வீதி வீதியாய் அலைந்து திரிந்து குழுக்களை உருவாக்கினார். ஒரே ஒரு வாரம் மட்டும்தான் இருக்கிறது. பல குழுக்களை உருவாக்கி அவர்களுக்குள் போட்டி நடத்தவேண்டும். காலிறுதி, அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

அதெல்லாம் சரி! போட்டி எங்கே நடத்த வேண்டும்? போட்டி நடத்த முதலில் மைதானமே இல்லையே. தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியில் விளையாட்டு மைதானம் அவசர அவசரமாக தயாரானது.

குழுக்களை உருவாக்கியது மட்டுமல்ல. அவர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்திட வேண்டும். பயிற்சியில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உணவு ஏற்பாடு செய்திட வேண்டும். உணவு ஏற்பாடு செய்திட நிதி வேண்டும். இத்தனையும் ஏற்பாடு செய்தது வெறும் 6 பேர் கொண்ட தர்மபுரி ஈஷா வித்யா ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மட்டுமே! அந்த ஏழு நாட்களில் இவர்களுக்கு இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

oru manithar

 

oru manithar 2

 

oru manithar 3

 

oru manithar4

 

 

மிகுந்த உழைப்பிற்குப் பிறகு அன்று இறுதிப்போட்டி நிகழ்ந்தது. இறுதிப்போட்டிக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க அதனை இன்னும் வண்ணமயமாக்கிட, பிற பெண்களையும் ஈடுபடுத்திட ரங்கோலிப் போட்டி நடத்தப்பட்டது.

மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளான நிலையிலும், இறுதிப்போட்டி தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வத்தினாலும் உழைப்பினாலும் மட்டுமே வெற்றிகரமாக நிகழ்ந்தது.

இறுதிபோட்டியில் நல்லம்பள்ளி குழு வெற்றிபெற்றது. “அவர்களது உற்சாகமும் ஆனந்தமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் நான் எதையோ சாதித்துவிட்டேன் என்ற திருப்தி இல்லை. இது போதாது. இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரவேண்டும். கல்வித்துறையிலும் கிராம மக்கள் வாழ்விலும் இன்னும் நிறைய பணி செய்திட வேண்டும்,” என்கிறார் திரு. சிதம்பரம் அவர்கள்.

இவரைப் போன்ற இன்னும் பல இளைஞர்கள் பல கிராமங்களில் விளையாட்டின் மூலம் புத்துணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காளியூர், கோபிசெட்டிபாளையம் போன்ற கிராமங்களில் ஒரு சிறிய தன்னார்வத்தொண்டர் குழு மிகப்பெரிய மாற்றத்தை அந்த பகுதியில் கொண்டு வந்திருக்கிறது.

இதுபோன்ற இளைஞர்களின் கையில் இந்த தேசம் இருக்கிறது என்று எண்ணும்போது நம் எதிர்காலம் ஒளிமயமாகவே தெரிகிறது.

பிரம்மாண்டமான ஈஷா சோழா இறுதிப்போட்டி இம்மாதம் 21 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. வெற்றிக் கோப்பையை ஏந்தியது நஞ்சுண்டாபுரம், பீளமேடு அணிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு நிலையிலும் விளையாடிய 5,000த்திற்கும் மேற்பட்ட வீரர்கள்தான். அவர்களது வாழ்வு புத்துணர்வு பெற்றது. கிராம மக்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிக்கொணரப்பட்டது. கிராம மக்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அளித்து வரும் இந்த திட்டம் மெல்ல ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.