கொல்லைப்புற இரகசியம் - பகுதி 33

ஈஷா மஹாசிவராத்திரி திருவிழாவை வழக்கமாக உள்ளூர் மையத்திலேயே கொண்டாடும் உமையாள் பாட்டி கடந்த பிப்ரவரி 24ல் நடைபெற்ற மஹாசிவராத்திரியை ஈஷா ஆசிரமத்திற்கு நேரில் வந்து கொண்டாடி மகிழ்ந்தார். விழாவிற்கு எங்கள் ஊரிலிருந்து புறப்பட்ட பேருந்தில் உமையாள் பாட்டியின் அருகிலேயே ஒரு சீட் போட்டு வைத்துவிட்டேன்.

“நீ வாய்கொப்பளிச்சயே தாளிசபத்திரி பட்டை குடிநீர், அது தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும்! தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும்.”

“என்னப்பா பஸ்ல துண்டு போட்டு சீட் போடுற பழக்கத்த விடலயா?” பாட்டி நகைச்சுவையாக கேட்க,

“சீட் எங்க வேண்ணா கிடைக்கும் பாட்டி, ஆனா உமையாள் பாட்டி பக்கத்துல கிடைக்குமா?” எனச் சொல்லி ஒரு பெரிய ஐஸ் கட்டியை பாட்டியின் தலையில் வைத்தேன்.

ஆனால், பாட்டிக்கு என்னைப்பற்றி நன்றாகவே தெரியும் என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பாட்டியின் அருகில் அமர்ந்துகொண்டு பயணிக்கும்போது நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்!

சில நாட்களாக என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்த இருமலை பொருட்படுத்தாமல், 112 அடி உயர ஆதியோகியைக் காண நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன்.

மந்திர உச்சாடனை சிறிது நேரமும், உற்சாக ஆட்டம் சிறிது நேரமுமாக, பேருந்து நகரத் துவங்கியது முதலே உற்சாகம் தொற்றிக்கொண்டது!

“பத்து நிமிஷம் நிக்கும், டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிடலாம்!” என்று நடத்துனர் அண்ணா சொன்னபோது, இரவு மணி 1. மதுரையைத் தாண்டி ஒரு இடத்தில் நின்ற பேருந்திலிருந்து இறங்கிய நான், டீ சாப்பிட்டுவிட்டு பேருந்திலேயே அமர்ந்திருந்த பாட்டிக்கும் ஒரு டீ வாங்கிக்கொண்டு வந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால், பாட்டி எனக்கு குடிப்பதற்கு வேறொன்றை தான் கொண்டுவந்திருந்த பாத்திரத்திலிருந்து எடுத்து வழங்கினாள்.

பாட்டி பேரனுக்காக பிரத்யேகமாக பூஸ்ட் போன்ற பானத்தை கொண்டுவந்திருக்கிறாள் என நினைத்தபோது, பாட்டி சொன்னாள், “இது குடிக்கறதுக்காக இல்லப்பா... அவரசரப்பட்டு குடிச்சிடாத! வாய் கொப்பளிக்கிறதுக்காக.”

நான் வியப்புடன் பார்த்துவிட்டு, உடனே வாய் கொப்பளித்தேன்.

“நீ பக்கதுல உக்காந்துட்டு இருமிகிட்டே வந்தேல்ல, அதான் உனக்காக இந்த தாளிசபத்திரி பட்டை குடிநீர்! நான் தற்செயலா கொண்டு வந்திருந்தேன் உனக்கு உபயோகமாயிடுச்சு!”

வாய் கொப்பளித்த சிறிது நேரத்தில் வித்தியாசம் தெரிந்தது. மஹாசிவராத்திரியை சிறப்பாக கொண்டாடிவிட்டு வீடு திரும்பும்போது, பாட்டியிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது! எப்படியும் இந்த தாளிசபத்திரி பற்றி முழுசா தெரிஞ்சக்கணும் இல்லையா?!

“நீ வாய்கொப்பளிச்சயே தாளிசபத்திரி பட்டை குடிநீர், அது தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும்! தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும். அப்புறம் குழந்தைகளுக்கு ஜுரம்கூட இதுனால சரியாகும். அதுக்கு என்ன பண்ணனும்னா, இந்த இலைச்சாறு 5-10 சொட்டு தண்ணியிலயோ அல்லது தாய்ப் பால்லயோ கலந்து கொடுக்கணும். குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது வர்ற இருமல், பேதி, ஜுரம் போன்றதுக்கும் இதக்குடுக்கலாம்.”

பாட்டி தாளிசபத்திரி சொல்லும்போது ‘தாளிசபத்திரி சூரணம்’ ஈஷா ஆரோக்கியா மையங்களில் கிடைப்பதாகவும், மேலும் அவை மாத்திரைகளாக கிடைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அப்படி அந்த சூரணத்தில் என்ன சிறப்பு?

ஆச்சரியத்துடன் பாட்டியிடம் கேட்க... பாட்டி தொடர்ந்தாள்.

“தாளிசபத்திரி 8 பங்கு, மிளகு 4 பங்கு, சுக்கு 2 பங்கு, வால்மிளகு 1 பங்கு அப்புறம்... கூடவே நாட்டு சர்க்கரை 15 பங்கு... இப்படி அளவெடுத்து எல்லாத்தையும் பொடிசெஞ்சா அதுதான் தாளிசபத்திரி சூரணம். இத 1-3 கிராம் அளவுக்கு எடுத்துவந்தா பசியின்மை நீங்கும், அதோட செரியாமையும் சரியாகும்.”

பாட்டி சொன்னதைக் கேட்டதும் உடனே ஈஷா ஆரோக்கியாவிற்கு சென்று தாளிசபத்திரி சூரணத்தை வாங்கிவந்தேன்.

அடுத்த வாரம் பாட்டியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது!

“ஏம்ப்பா இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திரும்பவும் ஈஷாவுக்கு போறேன். என் பக்கத்துல சீட் இருக்கு. நீ வர்றயா?” என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்ட பாட்டியிடம், முடியாது என்று என்று எப்படிச் சொல்வது!

ஆதியோகியை தரிசிக்கவும் பாட்டியுடன் பயணிக்கவும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்கமுடியுமா என்ன?! இம்முறை இருமல் இல்லாமல்!

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்