கொல்லைப்புற இரகசியம் - பகுதி 18

கீரை சாப்பிடுவதால் விளையும் நன்மைகளை பரவலாக நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், உமையாள் பாட்டியின் வாயிலாக என்னென்ன கீரைகள் என்னென்ன பலன்களைத் தருகின்றன என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம்!

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஒரு வாரமாக மாலையில் மழை பிடித்துக்கொண்டது. மாலையில் உமையாள் பாட்டியை சென்று பார்த்து வரலாமென கடந்த நான்கு நாட்களாக புறப்பட்டபோதெல்லாம், என்னை மழை தடுத்துக்கொண்டே இருந்தது. எனவே அன்று முன்னெச்சரிக்கையுடன் குடையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அது மழைக்கு தெரிந்துவிட்டது போலும், வெறும் சாரல்மழை மட்டுமே விழுந்துகொண்டிருந்தது.

பசலைக்கீரை சாப்பிடுறதுனால நீர்க்கடுப்பு, நீரடைப்பு (சிறுநீர்), வெள்ளைப்படுதல் தீரும்; பண்ணைக்கீரை குடலுக்கு வலு தர்றதோட, மலத்தை இளக்கி மலச்சிக்கல தீர்க்கும்; பருப்புக்கீரை சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கும், அதிக உடல் வெப்பத்த தீர்க்கவும் உதவுறது மட்டுமில்லாம, உடலுக்கு குளிர்ச்சியும் தரும்.

வடகிழக்குப் பருவமழை தந்த சில்லென்ற சீதோஷ்ண நிலையில், உமையாள் பாட்டி ஆவி பறக்க அங்கு எதையோ மண் குவளையில் ‘உஃப் உஃப்’ என ஊதியபடியே சுவைத்து குடித்துக்கொண்டிருந்தாள்.

“என்ன பாட்டி... இவ்வளவு ரசிச்சு குடிச்சிகிட்டிருக்கீங்களே... எதும் ஃபாரின் ஹெல்த் ட்ரிங்க்கா?!” கேட்டபடியே பாட்டியின் குடிலுக்குள் நுழைந்தேன்.

“வாப்பா... இது ஃபாரின் ட்ரிங்க்கெல்லாம் இல்ல! எங்க பாட்டன் முப்பாட்டனெல்லாம் அடிக்கடி குடிச்ச ஹாட் ட்ரிங்க்” என சிரித்தபடியே எனக்கும் ஒரு குவளையில் கொடுத்தாள், அந்த காட்டுக்கீரை சூப்பினை!

பாட்டியின் கை பக்குவத்தில், சூப் காரசாரமாக நாவிற்கு ருசி தந்துகொண்டிருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“இது என்ன கீரை சூப் பாட்டி? ரொம்ப நல்லா இருக்கே?!” மண்குவளையிலிருந்த சூப்பின் ருசி அதனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலைத் தர, பாட்டியிடம் கேட்டேன்!

“இது காட்டுக்கீரை... எல்லா சீசன்லயும் இது கிடைக்காது! மழைக்காலத்துல வயல் வரப்போரத்துல முளைக்கும்! இப்போ விட்டுட்டா இன்னும் அடுத்த சீசன்லதான் சாப்பிட முடியும்!”

“ஓ அப்படியா? எனக்கு அப்போ அதிர்ஷ்டம்தான், இந்த சீசன்ல எனக்கு கிடைச்சிருக்கே!”

“ஆமாப்பா...! ஆனா... எல்லா சீசன்லயும் நீ கீரை சாப்பிடணும்! அப்போதான் உடல் ஆரோக்கியமா இருக்க முடியும்! முடிஞ்சா டெய்லி கூட சாப்பிடலாம்! கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லா ஊரும் ஒன்னு! இயற்கை எல்லா காலத்திலயும் கிடைக்குற மாதிரி பலவகை கீரை வகைய நமக்காக தந்திருக்கு. அதில ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நாள் சாப்பிட்டாலே நோய்நொடி நம்மள அண்டாது!”

“நீங்க என்னென்ன கீரை சாப்பிடுறீங்க பாட்டி? சொன்னீங்கன்னா நான் அதை அப்படியே ஃபாலோ பண்ணிக்குவேன்!” பாட்டியிடம் கீரையைப் பற்றிய வேறு விஷயங்களையும் அறிந்து கொள்வதற்காக கேட்டேன்.

“நான் எந்த கீரை கிடைச்சாலும் சாப்பிடுவேன். எல்லா கீரையுலயும் எதாவது ஒரு பலன் இல்லாம இருக்காது. பொதுவா நான் ருசிக்காக இல்லாம, ஆரோக்கியத்துக்காகதான் சாப்பிடுறேன். கீரைய நமக்குத் தேவையான மாதிரி சூப்பாவோ, பொறியலாவோ, இல்லைன்னா கடைஞ்செடுத்து குழம்பாவோ சாப்பிடலாம். அதில சில கீரை பத்தி சொல்லணும்னா...

முளைக்கீரை நாவுக்கு நல்ல சுவைய தரும், நல்ல பசி கொடுக்கும்; சிறுகீரை பித்தம் தணிக்கும், சிறுநீர் நல்லா வெளியேத்த உதவும், புத்திக்கூர்மை கொடுக்கும், ஞாபகசக்திய அதிகரிக்கும், கண்புகைச்சல், எரிச்சல குணமாக்கும். பசலைக்கீரை சாப்பிடுறதுனால நீர்க்கடுப்பு, நீரடைப்பு (சிறுநீர்), வெள்ளைப்படுதல் தீரும்; பண்ணைக்கீரை குடலுக்கு வலு தர்றதோட, மலத்தை இளக்கி மலச்சிக்கல தீர்க்கும்; பருப்புக்கீரை சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கும், அதிக உடல் வெப்பத்த தீர்க்கவும் உதவுறது மட்டுமில்லாம, உடலுக்கு குளிர்ச்சியும் தரும். அப்புறம்... புதினா கீரை சாப்பிட்டிருக்கியா?”

“ஓ பிரியாணியில கொஞ்சம் மணத்துக்காக போடுவாங்களே, அதான?! சாப்பிட்டிருக்கேன்!”

“அது வெறும் மணத்துக்காக மட்டும் பயன்படுத்துற கீரையில்ல, அத நாம உணவா எடுத்துக்கணும்ப்பா! புதினாக்கீரை சாப்பிட்டா அது பசிய தூண்டும், அதோட வாய்கசப்பு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளும் நீங்கும். புதினா இலையையும், கற்பூரப் புல்லையும் சமஅளவு எடுத்து குடிதண்ணீர் சேத்து, குடிச்சிட்டு வந்தா, சிறுநீர் அளவு அதிகரிக்கும், நல்ல உறக்கமும் வரும். தண்டுக்கீரை சிறுநீர் எரிச்சல், வயிற்றுக்கடுப்பு, வெள்ளைப்படுதலை குணமாக்க வல்லது. புளிச்சக்கீரை வாய்சுவையின்மை, வாத நோய், கரப்பான் (தோல் நோய்) நோய்க்கு நல்ல தீர்வாகும்.”

பாட்டி கீரை வகைகளைப் பற்றி சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, ஏற்கனவே குடித்திருந்த கீரை சூப் நல்ல பசியைத் தர, “பாட்டி... இந்த கீரையில்லா சோறு சாப்பிடக் கூடாதுன்னு சொல்றீங்க, அதனால... கீரை சூப் குடுத்த நீங்க, அப்படியே கொஞ்சம் சோறும் போடலாமே?!” என்றேன் வேடிக்கையாக.

“அதுக்கென்னப்பா... வா உனக்கில்லாத சோறா?!” என உடனே மண்சட்டியில் ஆக்கியிருந்த சோற்றை அங்கிருந்த வட்டிலில் வைத்து பரிமாறலானாள் உமையாள் பாட்டி.

குறிப்பு:
பருப்புக்கீரை வெளிப்புற உபயோகம்:

பருப்புக்கீரை இலை

  • இதன் இலையை நன்றாக சிதைத்து அக்கியின் மீது பற்று போட்டுவர அக்கி குணமாகும்.
  • இலையை அரைத்து நெற்றியின் மீது பற்றிட, சூட்டினால் உண்டாகும் தலைவலி தீரும்.
  • இலையை அரைத்து தீப்புண், சுடுதண்ணீர் பட்ட புண்களுக்கு பூசலாம்.

பருப்புக்கீரை தண்டு

இதன் தண்டை அரைத்து வேர்க்குரு, கைகால் எரிச்சல்களுக்கு வெளிப்பிரயோகமாக போட பாதிப்பு குறையும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்