நவரச நாட்டியத்துடன் முதல்நாள் நவராத்திரி கொண்டாட்டம்!
ஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற முதல்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!
 
 

ஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற முதல்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா நேற்றிலிருந்து 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10) வரை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறவிருக்கிறது. 9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

நாட்டியத்தில் நவரசங்களை வெளிப்படுத்திய மாணவிகள்!

ஈஷா சம்ஸ்கிருதி மாணவிகள் தேவிநவரசம் என்கிற ஒன்பது வகையான பாவனைகளை பரதநாட்டியத்தில் வழங்கினார்கள். இதில் தேவியின் பல்வேறு கதைகளில் வழங்கப்பட்டு வருகிற ரசங்களான வீரம், சிருங்காரம், அற்புதம், ஹாஸ்யம், பீபத்சம், ரௌத்ரம், பயம், கருணை மற்றும் சாந்தம் ஆகிய உணர்வுகளை நவரசமாலிக வர்ணத்தில் அற்புதமாக வெளிப்படுத்திய மாணவிகள் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

தேவி மீனாக்ஷி வீரத்துடன் திக்விஜயம் செய்தது, கயிலைநாதனிடம் தன் மனதைப் பறிகொடுத்தது, அவருடைய பராக்கிரமங்களைக் கண்டு வியந்தது, பிட்டுக்கு மண் சுமந்த எம்பெருமானின் வேடிக்கையைக் கண்டு நகைத்தது, தக்ஷன் யாகத்தின் போது அவமானப்பட்டு தீக்குளித்தது, ரௌத்ரமான மகாகாளி ரூபமெடுத்து, சண்ட முண்ட அசுரர்களை சம்ஹாரம் செய்தது, ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்க, பயந்து அதை அவர் கழுத்திலேயே நிறுத்தியது, ராவணன் கயிலை மாமலையை தூக்க, பெருமான் தன் கட்டை விரலால் கீழே அழுத்தியது, சம்மந்தப் பெருமானுக்கு கருணையுடன் ஞானப்பால் ஊட்டியது, அபிராமி பட்டருக்காக தன் மூக்குத்தியை வானில்வீசி முழுநிலவாக்கியது, ஸ்ரீசக்கரத்தில் சாந்த ஸ்வரூபியான லலிதாம்பிகையாக வீற்றிருப்பது - இப்படி எத்தனை எத்தனை பாவங்கள்... அனைத்தையும் பேசி முடியாப் பேரழகு நடனமாக சம்ஸ்கிருதி மாணவிகள் வழங்கியதைக் கண்டு பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.

ராகமாலிகாவிலும் ஆதிதாளத்திலும் மலர்ந்த அந்த வர்ணம், திரு.லால்குடி ஜெயராமன் அவர்களால் உருவமைக்கப்பட்டது. நடன வடிவமைப்பு செய்தவர் திருமதி. திவ்யாநாயர். திரு. சங்கரன் மேனன் வயலினும், திரு. ஆர்.வீ.பிரசாத் அவர்கள் மிருதங்கமும், திருமதி. திவ்யாநாயர் நட்டுவாங்கமும் வழங்கினார்கள். பாட்டிசை, பக்கவாத்தியம் மற்றும் மேடை அமைப்புகள் அனைத்தும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்தன.

லிங்க பைரவி ஊர்வலம்...

நவராத்திரியின் முதல் நாளான நேற்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொலு...

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

இன்று...

இரண்டாம் நாள் விழாவான இன்று திரு.மஞ்சுநாத் மற்றும் திரு.பிரஷாந்த் அவர்களின்
இந்துஸ்தானி குரலிசை நிகழ்ச்சி நிகழவுள்ளது.

நாளை...

மூன்றாம்நாள் விழாவான நாளை திரு. பிரவீன் குமார் அவர்களின்
பரதநாட்டிய நிகழ்ச்சி நிகழவுள்ளது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1