நாட்டு மாடுகள், ஏலக்காய், மிளகு... இயற்கை விவசாய நுட்பங்கள்!

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் மலையாள நாட்டில், நம் தமிழ் மணக்க ஒரு இயற்கை விவசாயி பயிரிட்டுள்ள ஏலக்காய் எஸ்டேட்டை பார்வையிட்ட அனுபவம் இங்கே!
 

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 25

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் மலையாள நாட்டில், நம் தமிழ் மணக்க ஒரு இயற்கை விவசாயி பயிரிட்டுள்ள ஏலக்காய் எஸ்டேட்டை பார்வையிட்ட அனுபவம் இங்கே!

ஈஷா விவசாயக்குழு தென்மாவட்ட பயணத்தில் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சிவக்குமார் சந்திரபிரபா தம்பதியினரைச் சந்தித்தது.

இவர்களுக்கு கம்பத்தில் தென்னந்தோப்புடன் கூடிய மாட்டுப்பண்ணையும், இடுக்கி மாவட்டம் கட்டப்பனாவில் (கேரளா) ஏலக்காய் எஸ்டேட்டும் உள்ளது. முதலில் நாங்கள் கம்பத்திற்குச் சென்றோம். எங்களுக்கு பண்ணையை சுற்றிக் காண்பித்துக் கொண்டே பேச்சைத் தொடங்கினார் திரு.சிவக்குமார் அவர்கள்.

மாட்டுப் பண்ணை

"பத்து ஏக்கரில் தென்னந்தோப்பு இருக்கு, மாட்டுப் பண்ணையை பத்து வருஷமா வச்சிருக்கேன். நான்கு வருஷமா இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன்.

பாலேக்கர் ஐயா வகுப்பில் கலந்து கொண்ட பிறகு நாட்டுமாடுகளோட எண்ணிக்கையை அதிகமாக்கி இருக்கோம். இப்போ எங்க பண்ணையில் மொத்தம் ஐந்து நாட்டு மாடு, ஐந்து கன்னுகுட்டி என பத்து நாட்டு மாடுகள் இருக்கு.

எங்க பண்ணையில இருபது ஜெர்சி மாடும் இனச்சேர்க்கைக்காக ஒரு எச்.எப் காளைமாடும் வச்சிருக்கோம். மாட்டுக்கு பசுந்தீவனம் தான் அதிகமா கொடுக்கிறோம், அதனால பாலோட தரம் நல்லா இருக்கு. பாலேக்கர் ஐயா வகுப்பில் கலந்து கொண்ட பிறகு நாட்டுமாடுகளோட எண்ணிக்கையை அதிகமாக்கி இருக்கோம். இப்போ எங்க பண்ணையில் மொத்தம் ஐந்து நாட்டு மாடு, ஐந்து கன்னுகுட்டி என பத்து நாட்டு மாடுகள் இருக்கு.”

மாடுகளுக்கு எளிய மூலிகை மருத்துவம்

"நாட்டு மாடுகளுக்கு பொதுவா எந்த பிரச்சினையும் வராது, ஜெர்சி மாடுகளுக்குதான் அடிக்கடி ஏதாவது பிரச்சினைகள் வரும். முடிந்த அளவு இயற்கை முறையில் தான் மருத்துவம் பார்ப்போம். மாடுகளுக்கு ஆங்கில மருந்துகளை தேவையில்லாமல் கொடுக்க மாட்டோம். அது மாட்டுக்கும் நல்லதில்லை அந்த மாட்டோட பாலை குடிக்கிற நமக்கும் நல்லதில்லை."

ஏனுங்ணா இந்த நாட்டு மாடுங்க வளக்குறதே நம்ம நாட்டுக்கு செய்யுற ஒரு உதவி தானுங்க! அட நம்ம சல்லிக்கட்டு போராட்டம் இவ்வளவு தீவிரமா நடந்து வெற்றி கிடைச்சிருக்குன்னா, நாட்டு மாடுகள காப்பத்துணும்கற விழிப்புணர்வு லேசா மக்களுக்கு வந்திருக்குன்னு தானுங்க அர்த்தம்! ஆனா இன்னும் வெகரமா நாம நம்ம ஆளுங்களுக்கு புரிய வைக்கோணுமுங்க! அப்ப தானுங்க நாட்டு மாடுகள அடுத்தடுத்த தலைமுறைக்கு காப்பாத்தி கொண்டுபோக முடியும்!

மடிநோய்

"பால்மாடுகளுக்கு மடிநோய்தான் பெரிய பிரச்சினை, இதுக்கு எளிமையான மூலிகை மருத்துவம் இருக்கு. இரண்டு ரணகள்ளி இலையை எடுத்து அரைச்சுக்கனும், அதோட 50 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, ஒரு எலுமிச்சை பழத்தோட சாற்றையும் சேர்த்து கலந்துக்கனும். இந்தக் கலவையை காலை மாலை இரண்டு வேளையும் மாடுகளோட மடியை சுத்தமாக கழுவிவிட்டு தடவிவந்தா மடிவீக்கம் வேகமாகக் குறையும்."

இந்த மடிநோய் பிரச்சினைக்கு, டாக்டர் புண்ணியமூர்த்தி அவர்களும் நல்ல தீர்வை சொல்லியிருக்கார். சோற்றுக் கற்றாழை 250 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம் அதோட சுண்ணாம்பு 15 கிராம் இதை எல்லாம் சேர்த்து மைய அரைச்சு, பால் கரந்த பிறகு மாட்டு மடியில் தடவணும், ஒரு நாளைக்கு பத்து முறை வரைக்கும் தடவலாம், மருந்தை தேவைக்கேற்ப புதுசா தாயாரித்து பயன்படுத்தணும். இப்படி 5 நாள் தடவினால் மடிநோய் குணமாயிடும்.

"மாட்டு வைத்தியத்துக்காக எங்க பண்ணையில் சோற்றுக் கற்றாழை, ரண கள்ளி செடிகளை எல்லாம் வச்சிருக்கோம். மாடு வச்சிருக்கிறவங்க எல்லோரும் கட்டாயமா அவசியமான மூலிகைச் செடிகளை வளர்க்கனும். கைவைத்தியமும் செய்ய பழகிக்கனும்."

அட மேயிற மாட நக்குற மாடு கெடுக்கும்னு சொல்லுவாங்க இல்லீங்கோ?! அதுமாறி மாடுகள கெடுக்குறதே அதைய பாதுகாக்க வேண்டிய மனுசங்க தானுங்க! நோய் வந்தா குணமாக்குறதுக்கு இயற்கையே பல வழிகள காட்டி வச்சிருக்கும்போது, நாம தானுங்ணா கண்ட கண்ட இங்கிலீசு மருந்த மாடுகளுக்கு குடுத்து கெடுத்துப்போடுறோமுங்க. நம்ம சிவக்குமார் அண்ணா மாறி இயற்கை வைத்தியத்த சரியா செஞ்சா மாடும் மனுசனும் நல்லா இருக்கலாமுங்க!

தென்னையில் ஊடுபயிராக தீவனப்புல்

தீவனத்துக்காக CO 4, CO 5 ரக புற்கள் ஊடுபயிர் செய்யப்பட்டிருந்தது. இரண்டுமே ஒரு வித்திலைத் தாவரம் என்பதால் தீவனப்புற்களுடன் சேர்த்து அகத்தி, கிளைரிசிடியா மற்றும் தட்டை போன்ற தழைச்சத்தை நிலைப்படுத்தக் கூடிய இரு வித்திலைத் தாவரங்களையும் பயிர் செய்யும்படி ஆலோசனை கூறினோம். இதனால் மாடுகளுக்கு வகைவகையான பசுந்தீவனம் கிடைப்பதுடன் மண்ணுக்கு தழைச்சத்தும் கிடைக்கும்.

தொடர்ந்து பேசிய திருமதி. சந்திரபிரபா அவர்கள் தெரிவித்தவை

மண்புழு உரம்

"மாடுகள் நிறைய இருக்கிறதால சாணம் நிறைய கிடைக்குது. கடந்த நான்கு வருஷமா சாண மண்புழு உரம் தயாரிக்கிறோம். சிறிய ரக மண்புழுவை உரம் செய்ய பயன்படுத்துகிறோம்." தொடர்ந்து மண்புழு தயாரிப்பு பற்றியும் விளக்கினார்.

"சாணத்தை லேசா காய வச்சு கொஞ்சம் பொலபொலப்பான பிறகுதான் மண்புழு உரத்தொட்டியில் போடனும், அப்பதான் கொஞ்சம் காற்றோட்டம் கிடைக்கும். மண்புழுக்களுக்கு ஊட்டமா கருப்பட்டி, தயிர், கொள்ளுமாவு போன்றவற்றை 10-15 நாளுக்கு ஒருமுறை சாணியோடு கலந்துவிடுவோம். இடைஇடையே வேப்பந்தழையையும் போடுவோம், 45 நாள்ல மண்புழு உரம் தயாராயிடும்.

உரம் தயாரான பிறகு அதை ஜலிச்சு மண்புழுக்களை தனியா பிரிச்சு திரும்பவும் உரத்தொட்டியில் போட்டுருவோம். ஜலித்த உரத்தோட குறிப்பிட்ட பதத்தில் ஜீவாமிர்தம் கலந்து சாக்கில் கட்டிவைத்து விடுவோம்.

நாட்டு மாடுகள், ஏலக்காய், மிளகு... இயற்கை விவசாய நுட்பங்கள்!, nattu madugal yelakkai milagu - iyarkai vivasaya nutpangal

கட்டப்பனா பயணம்

கம்பத்தில் மாட்டுபண்ணையைப் பார்வையிட்ட பின் கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனாவிற்குச் சென்றோம். கம்பத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப்பயணத்திற்குப் பின் எஸ்டேட்டை அடைந்தோம்.

எஸ்டேட்டை சுற்றிக் காண்பித்துக் கொண்டே திரு. சிவக்குமார் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...

"மொத்தம் 40 ஏக்கர், ஏலக்காய்தான் முக்கிய பயிரா போட்டிருக்கோம். காப்பி மற்றும் மிளகை ஊடுபயிரா போட்டிருக்கோம். நாற்பது ஏக்கருக்குத் தேவையான எல்லா இடுபொருட்களையும் கம்பத்திலிருந்து இங்கே கொண்டு வந்துருவோம்."

அட அந்த வெள்ளக்கார துறைங்க நம்ம ஊருக்கு வந்ததே இந்த ஏலக்காயும் மிளகும் வாங்கிட்டு போகத்தானுங்ளே?! சும்மாவா சொல்லிவச்சாங்கோ ‘கடவுளின் தேசம்’னு கேரளாவ?! ஆனா கெரகத்துக்கு நம்ம விவசாயிங்க அந்த கடவுளோட தேசத்தையே இரசாயன தேசமா மாத்திப்போட்டு வச்சிட்டாங்க பாருங்கோ! ஆனா நம்ம அண்ணா வெகரமான ஆளுங்கறதால இரசாயன விவசாயத்த விட்டுப்போட்டு இப்போ இயற்கை முறைக்கு மாறியிருக்கறது ரொம்ப சந்தோசம் தானுங்க.

ஏலக்காய்

"ஏலக்காய்ச் செடி கிழங்கு மூலமா நிறைய பக்கக்கிளைகளை விட்டு வளரும். செடி நட்டு இரண்டு வருஷத்தில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். விதைகளை வச்சு கன்று உற்பத்தி செய்வதைவிட நல்ல தரமான செடியை தேர்ந்தெடுத்து அதிலிருந்து பக்கக்கன்றுகளை பிரித்து நட்டுக்கொள்ளலாம்."

"அடித்தண்டிலிருந்து சரம் சரமாக தட்டை வரும் அதிலிருந்தே பூக்கள் வரும். பூத்த 90-120 நாளில் ஏலக்காய் அறுவடைக்கு வந்துடும். 50 நாளுக்கு ஒரு முறை அறுவடை செய்வோம்."

நாட்டு மாடுகள், ஏலக்காய், மிளகு... இயற்கை விவசாய நுட்பங்கள்!, nattu madugal yelakkai milagu - iyarkai vivasaya nutpangal

நாட்டு மாடுகள், ஏலக்காய், மிளகு... இயற்கை விவசாய நுட்பங்கள்!, nattu madugal yelakkai milagu - iyarkai vivasaya nutpangal

நாட்டு மாடுகள், ஏலக்காய், மிளகு... இயற்கை விவசாய நுட்பங்கள்!, nattu madugal yelakkai milagu - iyarkai vivasaya nutpangal

இயற்கை முறையில் ஏலக்காய்

"சுற்றியுள்ள விவசாயிகள் எல்லோரும் இரசாயன விவசாயம்தான் செய்கிறார்கள், நான் ஜீரோ பட்ஜெட் வகுப்பு கலந்து கொண்ட பிறகு 90 சதவீதம் வரை இயற்கை முறையில்தான் சாகுபடி செய்கிறேன். இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடியை முழுமையாக செய்ய சில விஷயங்களை பரிட்சார்த்தமாக செய்து வருகிறேன்."

"ஏலக்காய் பயிர் செய்துள்ள இடத்தை மூன்று பகுதியாகப் பிரித்து அவைகளில் ஒவ்வொன்றிற்கும் ஜீவாமிர்தத்தை வெவ்வேறு கால இடைவெளியில் தருகிறேன். 7 நாட்களுக்கு ஒரு முறை, 15 நாள்களுக்கு ஒரு முறை, 30 நாட்களுக்கு ஒரு முறை என ஜீவாமிர்தம் கொடுத்ததில் 7 நாள்களுக்கு ஒரு முறை கொடுத்த பயிர்களில் நல்ல மாற்றம் தெரிந்ததைக் காண முடிந்தது."

இதை உறுதிப்படுத்தும் வகையில் பக்கத்து எஸ்டேட்டில் நுழையக்கூட முடியாத அளவுக்கு இரசாயன நெடி அடித்தது. சிவக்குமார் அவர்களின் தோட்டம் மூடாக்கு இடப்பட்டு இது இயற்கை சாகுபடிதான், தாராளமாக உள்ளே வரலாம் என்பது போல் காட்சியளித்தது.

புள்ளிநோய்

"ஏலக்காயில் தட்டை அழுகல், வேர் அழுகல், காய் அழுகல் போன்ற நோய்களுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்கிறேன். புளித்த மோர் கரைசல் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துகிறது. தேவைப்படும்போது ட்ரைகோடெர்மா, சூடோமோனாஸ், போன்றவற்றையும் பயன்படுத்துகிறேன்."

"முழுமையான இயற்கை விவசாயம் செய்யவே செய்ய முயற்சி செய்கிறேன், ஆனால் தவிர்க்க முடியாமல் ஏலக்காயில் வரும் புள்ளி நோய்க்கு மட்டும் சிறிது இரசாயன மருந்து அடிக்கிறேன். இதற்கு தீர்வு கிடைச்சுட்டா நூறு சதவீதம் இயற்கைதான்" அதற்கு தீர்வாக திராட்சை ரசத்தை, ஏலக்காய் பிஞ்சுகளின்மேல் தெளிக்கும்படி ஆலோசனை தெரிவித்து செய்முறை பற்றிய இடுபொருள் தயாரிப்புக் கையேடு ஒன்றையும் அவருக்கு அளித்தோம்.”

அட மனமிருந்தா மார்க்கம் கண்டிப்பா உண்டுங்ணா! இயற்கை விவசாயம் நூறு சதவீதம் செய்யணும்னு மனசு வச்சா, அதுக்கு வழி இல்லாமலா போயிருமுங்க?! புள்ளிநோய்க்கு திராட்சை இரசம்குற தீர்வ நம்ம ஈஷா விவசாய குழு அழகா குடுத்துட்டாங்க பாத்தீங்களா? நம்மூர்ல கெரகம்புடிச்சு நெறைய பேர் டாஸ்மாக்ல டெய்லி சாரயத்த திராட்சை இரசம்னு சொல்லி குடிச்சுப்போட்டு ரவுசு பண்ணிகிட்டு திரியிறாங்கோ. எதையுமே நாம நல்ல விஷயத்துக்காக பயன்படுத்த முடியுமுங்கணா!

ஏலக்காயும் தேனீக்களும்

"ஏலப் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் மிக அவசியமானது. தேனீக்கள் இல்லை என்றால் ஏலக்காயின் மகசூல் பாதிகூட கிடைக்காது. அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரைக்கும் வரும் தேனீக்கள்தான் மிக முக்கியமானது. இந்த நேரத்தில் வரும் தேனீக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே காய் பிடிப்பு இருக்கும். மகரந்தச் சேர்க்கையடைந்த பிஞ்சுகள் மட்டும்தான் உதிராமல் காய் முற்றி வளரும். மகரந்தச் சேர்க்கையடையாத பிஞ்சுகள் மஞ்சள் நிறத்தில் பழுத்து உதிர்ந்து விடும்."

"வெய்யில் காலங்களில் ஏலக்காய்க்கு நிழல் அவசியம், அதனால் வட்டக்கண்ணி, கருணை, சந்தன வேம்பு, குரங்காட்டி, காணாம்பூ, ஏழிலை, பலா போன்ற மரங்களை இடையிடையே நட்டிருக்கோம். மரங்கள் அதிகமா இருந்தாதான் தேனீக்களின் எண்ணிக்கையும் அதிகமா இருக்கும்."

எதிர்காலத் திட்டம்

"மிளகு உற்பத்தியை அதிகப்படுத்தனும், அடுத்த வருஷத்தில் இருந்து மிளகுக்கென்று தனி இடத்தை ஒதுக்கி நிறைய மிளகை உற்பத்தி செய்ய நினைச்சிருக்கேன், நிழலுக்காக இருக்கிற மரத்திலேயே மிளகை ஏற்றிவிட முடியும், மரம் இல்லாத இடங்களில் மரம் நடவிருக்கிறேன்." என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.

பக்கத்தில் எல்லாத் தோட்டங்களிலும் இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது ஏலக்காயை இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் சிவக்குமார் சந்திரபிரபா தம்பதியினருக்கு வாழ்த்துக்கூறி அவர்கள் கொடுத்த இயற்கை ஏலக்காயுடன் விடைபெற்றோம்.

தொடர்புக்கு:
திரு. சிவக்குமார்: 8608186018

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம்: 8300093777

 

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1