தூக்கம் - சில தகவல்கள்! - பகுதி 2

தூக்கத்தைப் பற்றி சில தகவல்களை கடந்த வாரப் பகுதியில் பார்த்தோம். இந்த வாரம் எவ்வாறு நன்கு தூங்குவது, தூக்கமின்மையால் வரும் இடர்கள் ஆகியவற்றைக் காண்போம்...

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

எவ்வாறு நன்கு தூங்குவது?

கீழ்க்கண்ட குறிப்புகள் உங்களது உடலையும், மனதையும் நல்ல தூக்கத்துக்குத் தயார் செய்யும்.

 • தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு திரவமான பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
 • இரவுப் பொழுதில் காபி, டீ, புகைபொருள் மற்றும் மதுவைத் தவிர்க்கவும்.
 • சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு தூங்கச் செல்லவும்.
 • தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு பரபரப்பான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.
 • தூங்கும் நேரத்துக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் முன்பு உடற்பயிற்சிகளை முடித்துக்கொள்ளலாம்.
 • தூக்கத்துக்குச் செல்லும் நேரத்தைக் காட்டிலும் தூக்கத்தில் இருந்து எழும் நேரத்தை முடிந்தவரை ஒரே நேரமாக வைத்துக்கொள்ளவும். தினமும் குறிப்பிட்ட அதே நேரத்தில் விழிக்கப் பழகிக்கொள்ளவும். (ஓய்வு நாட்கள் உட்பட.)
 • தூக்கம் வந்த பிறகு மட்டுமே படுக்கவும்.
 • படுக்கையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தவும்.
 • படுக்கையில் இருந்துகொண்டு தொலைக்காட்சி பார்க்காதீர்கள்.
 • தளர்வு நிலையை அடைந்த பிறகு உறங்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
 • 15, 20 நிமிடங்களில் தூங்காவிட்டால் தூக்கம் வரும் வரை படுக்கை அறையைவிட்டு வெளியே வந்து அமைதியாக வேறு வேலை பார்க்கவும்.
 • பகலில் தூங்குவதைத் தவிர்க்கவும்.

கனவு

தூக்கம் போலவே கனவையும் வரையறுத்துக் கூறுவது கடினம். தூக்கத்தில் நாம் அனுபவிக்கும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளாகக் கனவுகளைக் கூறலாம். ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு மணி நேரம் வீதம் சராசரி மனிதன் அவனுடைய வாழ்நாளில் ஆறு வருடங்கள் கனவு காண்கிறான். கனவுகளுக்கு உடல்ரீதியாக என்ன உபயோகம் என்று தெரியவில்லை. ஆனால், மனோதத்துவ ஆய்வாளர்கள் இதைப்பற்றி அதிகம் எழுதியுள்ளனர். குறிப்பிட்ட ஒரு மனிதருக்கு ஏற்படும் அனுபவத்தை (கனவை), பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும்படி கூறுவது கடினம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கனவுகள் அந்தந்த நபருக்கும் அவரின் வாழ்வுக்கும் அர்த்தம் அளிக்கக்கூடியதாக இருக்கலாமே தவிர, அதைப் பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும்படி செய்வது இயலாது.

மிகவும் பயமாகவும், நம்மை உணர்வுரீதியாகப் பாதிக்கும் கனவுகளை அச்சுறுத்தும் கனவுகள் என்கிறோம். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படும். இருப்பினும் மது, போதைப் பழக்கங்கள், தூக்க வியாதிகள் மற்றும் சில வகையான மருந்துகள் இவற்றை அதிகப்படுத்தும். இவை தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

தூக்கமின்மையால் வரும் இடர்கள்

பல்வேறு உடல்பாதிப்புகளைத் தரும்.

நோய் எதிர்ப்புச் சக்தி, இதயம், ரத்த ஓட்டம், நாளமில்லாச் சுரப்பிகளின் வேலைகளைப் பாதிக்கும். நினைவாற்றல் பாதிக்கப்படும். மனநிலையைப் பாதிக்கும். வேலையிலோ, படிப்பிலோ கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். எரிச்சல், கோபம் போன்றவை அதிகமாகி உறவுமுறைகளைப் பாதிக்கும்.

இது மட்டுமின்றி ஏற்கனவே உள்ள உடல் மற்றும் மன நோய்களை மோசமடையச் செய்யும்.

தூக்கம் வரவில்லையென்றால், அது பற்றி புலம்புகின்றோம். ஆனால், அந்த நிலை தொடர்ந்து நீடிக்குமானால், நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஏனோ சரிசெய்ய முயற்சிப்பதில்லை. காரணம், தூக்கமின்மையால் வரும் பாதிப்புகளைப்பற்றி நாம் அறியாததுதான்.

தூக்கக் கோளாறுகளால் 10ல் ஒரு நபர் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்படும்.

 • இரவு தூக்கம் பாதிக்கப்படுவதால் பகலில் தூக்கம் ஏற்படும். அப்போது தூங்க முடியாததால், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும்.
 • வேலை மற்றும் செயல்திறனைப் பாதிக்கும்
 • உடல் மற்றும் மனவியாதிகள் வரக் காரணமாகும். ஏற்கெனவே அவை இருந்தால், அவற்றை மேலும் மோசமடையச் செய்யும்.
 • வாகனம் ஓட்டுபவர்களாக இருந்தால், கவனம் செலுத்த முடியாமல் விபத்து ஏற்படலாம்.
 • எரிச்சல், கோபம் அதிகமாக ஏற்படும். இதனால் உறவில் விரிசல்கள் ஏற்படலாம்.


அடுத்த வாரம்...

தூக்கம், தூக்கமின்மை ஆகியவற்றினால் வரும் பிரச்சனைகள், இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்துகொள்வோம்...

இத்தொடரின் பிற பதிவுகள்: தூக்கம் - சில தகவல்கள்!