என்னதான் நமது பாரதம் ஆன்மீகத்திற்கு தலைமை இடமாக விளங்கினாலும், இங்கே எத்தனைபேர் உண்மையை தேடும் முயற்சியில் முழுமையாக இறங்குகின்றனர்?! அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை சொற்பமே! வெறும் பிரார்த்தனை மையங்களாக கோயிலைப் பார்க்கும் மனநிலை பெருகிவரும் இவ்வேளையில், ஒரு வெளிநாட்டவர் ஈஷாவில் தனக்கு கிடைத்த அனுபவத்தை தொடர்ந்து, சிவனை அறியும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதோ அவரது அனுபவங்கள் வார்த்தைகளில்!

தன்யதா, அமெரிக்கா

நான் டாக்ஸியை விட்டு கீழிறங்கி பார்த்தபோது பச்சைப் போர்வை போர்த்தப்பட்ட மலைகள் என் கண்களைக் குளிர்வித்தன. வெளிநாட்டுக்காரியான எனக்கு இந்தியாவின் இந்த அடர்ந்த வனப்பகுதி ஏதோ ஒரு இனம்புரியாத ஆனந்தத்தைத் தந்தது. கரடுமுரடான கூழாங்கற்கள் நிறைந்த பாதையில் என் பெற்றோரைப் பின்தொடர்ந்து நடந்தேன். அங்கே நான் கண்டது கருங்கல் பாறைகளால் ஆன பெரிய மண்டபம். அங்கே இன்னும் என்னை கவனிக்க வைத்தவை... மண்டபங்களின் கூரைகளின் மேலிருந்து கீழிறங்கியபடி படமெடுக்கும் பாம்பு வடிவங்கள். சில நிமிடங்கள் அதனை வியந்து பார்த்தபடி நின்றிருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை ‘சிவன்’ என்பவர், மக்கள் கொண்டுள்ள வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்த ஒரு பரிமாணம். அது காலத்தையும் அண்டவெளியையும் கடந்த நிலை.

புன்னகை ஏந்திய தென்னிந்திய முகம் ஒன்று எங்களை கனிவுடன் வரவேற்றது.. மூக்குக்கண்ணாடி அணிந்திருந்த அவர், தலை முழுவதும் மழிக்கப்பட்ட ஒரு துறவியாகத் தெரிந்தார். ஆனால், அவர் ஒரு பெண் என்பதைக் கவனித்தபோது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. மிகுந்த வாஞ்சையுடன் எங்களை அணுகிய ஈஷாவைச் சேர்ந்த அந்த பெண் துறவி, தொடர்ந்து வழிநடத்திக் கூட்டிச் சென்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தூண்களே இல்லாமல் உட்புறம் குழிந்திருந்த, ஒரு பெரிய கூரை எங்கள் கண்களுக்கு புலப்பட்டது. அதற்குள் கரிய நிற லிங்கம் ஒன்று தென்பட்டது. ஆனால், உள்ளே செல்லும் முன் எங்களுடைய செல்ஃபோன்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கச் சொன்ன அந்தப் பெண் துறவி, ஒலியெழுப்பும் மின்னணு கடிகாரத்தைக் கூட நிறுத்தி வைக்கச் சொன்னார். சற்றே அதிகப்படியான நடவடிக்கையாகத்தான் முதலில் எனக்கு இது தோன்றியது...

ஆனால், உள்ளே சென்று தியானலிங்கத்தின் முன் அமர்ந்தபோதுதான், அந்த நிசப்தத்தில் செல்ஃபோனோ, கடிகாரமோ ஒலி எழுப்பியிருந்தால், அங்கே எனக்கு கிடைத்த அந்த அற்புத அனுபவத்தைத் தவறவிட்டிருப்பேன் என்பது புரிந்தது. அங்கே யாரும் பேசிக்கொள்வதில்லை; ஏதாவது தகவல் பரிமாற வேண்டுமென்றால் கைகளால் சமிக்ஞை செய்கிறார்கள். நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய லிங்க வடிவம் அதுவாகத்தான் இருக்கும். லிங்கத்தின் மீது சூட்டப்பட்டிருந்த நீண்ட மலர் மாலையைத் தவிர வேறு எந்த அலங்காரங்களும் செய்யப்படவில்லை.

நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும் எங்கள் குடும்பம் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த, வைணவ பின்னணியைக் கொண்டது. ஆனால், கல்லூரி மாணவியான எனக்கு, கோயில் குளம் என்று சுற்றுவதில் துளிகூட விருப்பம் இருந்ததில்லை. என் அம்மாவின் பிடிவாதத்தினால் நானும் எனது தந்தையும் ஈஷா யோகா மையத்திற்கு வந்தோம். எது எப்படியோ எனக்குப் பாடப் புத்தகத்திலிருந்து தப்பித்து கோடை விடுமுறையை செலவழித்தால் போதும் என்ற மனநிலையே இருந்தது. நான் விடுமுறைக்காக செலவழிக்கும் நாட்கள், என் வாழ்வின் அடிப்படையையே மாற்றவிருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

தியானலிங்கத்தின் முன் அமர்ந்தபோது, லிங்கத்தை ஒரு சில நிமிடங்கள் பார்த்தேன்; பின் கண்களை மூடி அமர, என்னை முழுமையான அமைதி ஆட்கொண்டது. அங்கிருந்த இருளில் நானும் இரண்டறக் கலந்துவிட்டது போன்ற ஒரு வெறுமை நிலையில் மூழ்கினேன். நான் அதுவரை அறிந்திராத ஒரு அனுபவமாக அது இருந்தது. உள்நிலை நோக்கிய அந்தப் பார்வை எனக்குள் பல கதவுகளைத் திறந்தது என்றே சொல்ல வேண்டும்.

எனது உடலும் மனமும் என்னை விட்டு விலகி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். நான் அங்கு எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் என்பதே எனக்கு தெரியாது. நிச்சயம் சில மணி நேரங்கள் சென்றிருக்க வேண்டும்! ஒரு கை என்னை வந்து தொட்டு எழுப்பியது. விழித்தபோது என் முன்னே என் தந்தை. அந்த அற்புத அனுபவம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. குழப்பத்துடனே அங்கிருந்து வெளியில் சென்றேன்.

நான் இந்தியாவின் பிற இடங்களில் பல்வேறு கோயில்களைப் பார்த்திருக்கிறேன். சில கோயில்கள் குப்பையாகவும், மக்களின் இரைச்சலுடனும், ஒலிபெருக்கி சத்தத்துடனும், மந்திர உச்சாடனை என்ற பெயரில் ஏதேதோ கோஷங்களுடனும் முகம் சுழிக்க வைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், தியானலிங்கத்தில் எந்தவித மந்திர உச்சாடனையோ பூஜைகளோ இல்லை. நிலைத்த அமைதியும் நீடித்த வெறுமையுமே அங்கு நான் கண்டது. இந்த இடம் சிவனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை எனக்குள் தூண்டியது.

சிவனை அறியும் ஆவலில் பல பிரபல புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன். சிவனே முழுமுதற் கடவுள்; ஆதியும் அந்தமும் இல்லாதவர்; ஒன்றுமில்லாத ஒரு தன்மை; ஆழ்ந்த அமைதியுடனும் அதே சமயம் அதீத தீவிரத்துடனும் இருப்பவர். பிறை நிலவைத் தலையில் சூடி, போதையில் நடனமாடும் குடிகாரர்; அவர் நல்லவர்; அழகானவர்; அனைத்தையும் அழிக்கக் கூடியவர்; கோரமானவர் இப்படி முன்னுக்குப் பின் முரணான செய்திகளைப் படித்தேன்.

நான் தொடர்ந்து சிவனைப் பற்றிப் படிக்கப் படிக்க, குழப்பங்களே அதிகரித்தது. குழப்பங்கள் அதிகரித்த அதே சமயத்தில், அவரை அறியும் தீவிரமும் அதிகரித்தது. இறுதியில் நான், அவரைப் படித்துப் புரிந்தகொள்ள நினைப்பது முட்டாள்தனம்; உணர்ந்து பார்ப்பதே ஒரே வழி என்று புரிந்து கொண்டேன்!

இப்போது எனது தேடல், ஆன்மீகத் தேடலாக மாறியது. அதன்பிறகு நான் யோக வகுப்புகளில் கலந்துகொண்டேன். தொடர்ந்து பயிற்சிகளைச் செய்தேன். பிராணாயாமமும் யோகப் பயிற்சிகளும் எனது தன்மையை வெகுவாக மாற்றியது. அதன்பின், நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் தியானலிங்கத்திற்குத் திரும்பினேன். அங்கே நுழைந்தபோது இன்னும் வித்தியாசமான அனுபவங்களைச் சுவைக்க முடிந்தது. தியானலிங்கத்தில் செலவழித்த முழு நாளும் நிமிடங்களாகக் கடந்தோடின. ஒவ்வொரு முறை தியானலிங்கத்தில் நுழையும்போதும் எனக்குள் இருக்கும் அனைத்து எதிர்பார்ப்புகளும் தகர்ந்து, கண்களை மூடி அமரும்போது முழுமையான ஒரு தன்மையை உணர்ந்தேன்.

எனக்கு சிவனின் பெயர் பற்றி அக்கறையில்லை. அவர் கடவுளா? இல்லையா? என்பதைப் பற்றி கவனமில்லை. மக்கள் அவரை விரும்புகின்றனரா? வெறுக்கின்றனரா? என்பது பற்றி கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை ‘சிவன்’ என்பவர், மக்கள் கொண்டுள்ள வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்த ஒரு பரிமாணம். அது காலத்தையும் அண்டவெளியையும் கடந்த நிலை.

ஒன்றுமில்லாததாகவும் எல்லாமுமாகவும் இருக்கும் அந்தப் பரிமாணத்தை ஒருநாள் முழுமையாக உணர்ந்து அதில் கரைவதற்காகவே என் பயணம் தொடர்கிறது...