கடை திறந்திருக்கிறது காசுப் பெட்டியும் திறந்தே இருக்கிறது. கடையில் விற்பனையாளரும் இல்லை. இது எப்படி சாத்தியம்? சாத்தியம்தான் என்று காட்டியுள்ளனர் நம் ஈஷா வித்யா பள்ளி குழந்தைகள். என்ன கடை? தொடர்ந்து படியுங்கள்!

பெரும்பாலும் ‘இங்கே திருடர் பயம்’ அதிகம் என்று தான் பலரும் பேசக் கேள்விப் பட்டிருக்கிறோம். திருடன் பூட்டினை உடைக்கும் வித்தையை கற்கிறான். கடை உரிமையாளரோ உடைக்க முடியா பூட்டை பொருத்துகிறார். திருடன் உடைக்க முடிய பூட்டை உடைத்திடும் வித்தையை கற்கிறான். இப்படியே தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போய் தற்போது CCTV யில் வந்து நிற்கிறது. இன்னும் சில நாட்களில் திருடன் CCTV யையும் ஏமாற்றும் வித்தையை கற்றுக் கொள்வான். இதற்கு தீர்வுதான் என்ன?

உள்நிலையில் மாற்றம் நிகழ்ந்துவிட்டால் கருவிகள் மட்டும் அல்ல, கடைக்காரரும் தேவையில்லை என்றே ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இதோ தமிழகத்தில் துவங்கிவிட்டது ஒரு நேர்மை புரட்சி! ஆளில்லா கடைகள் கள்ளமில்லா வாடிக்கையாளர்கள் பூட்டில்லா பணப்பெட்டி! இந்த வித்தியாசமான கடை முதலில் துவங்கியது ஈரோடு ஈஷா வித்யா பள்ளியில்தான்!
13

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு மாணவன் கடைக்குள் செல்கிறான். தனக்குத் தேவையான நோட்டுப் புத்தகத்தை கடையிலிருந்து எடுத்துக் கொள்கிறான். அதற்கான சரியான விலையை பணப் பெட்டியில் வைத்து விட்டு வருகிறான். அந்த வார இறுதியில் வரவு செலவு கணக்குப் பார்க்கும் ஆசிரியருக்கு கணக்கு சரியாக இருக்கிறது.

ஈஷா வித்யா பள்ளியோ ஈரோட்டில் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறது. அங்கே சுமார் 600 மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் பெரும்பாலும் ஏழை மாணவர்களே இருக்கிறார்கள். இங்கே கல்வியின் தரமும் மாணவர்களின் பண்பும் எப்படி இருந்துவிடப் போகிறது என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு பெரும் அதிசயமே.

வாழ்வில் ஏழ்மையின் இருளையும் தாண்டி நேர்மை ஒளியை சுமந்து வரும் இந்த மாணவர்கள் நம்மை அதிசயத்தில் ஆழ்த்துகிறார்கள்.

மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்ற பல பொருட்களை வாங்க மாணவர்கள் பள்ளியிலிருந்து வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதாலும் அவர்களுக்குள் நேர்மை எனும் விதையை விதைக்கும் விதமாகவும் இந்தக் கடை முதலில் துவங்கப்பட்டது. இந்த கடைக்கு நேர்மையாளர் கடை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
12

தற்போது தமிழகத்தில் பல பகுதிகளிலும் உள்ள பல பள்ளிகளிலும் இதுபோன்ற கடைகளை அமைத்திருக்கிறார்கள். இது மாணவர்களிடையே நேர்மைப் பண்பை வளர்க்க பெரும் உதவியாக இருக்கிறது என்று இந்த ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

எவரும் தன்னை கவனிக்காத போதும் நான் நேர்மையாகவே இருப்பேன் என்னும் பழக்கம் மாணவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பள்ளியின் 9வது வகுப்பு மாணவியான கவிதா, "எங்களுக்காக இந்தக் கடை திறக்கப்பட்ட பின், நாங்கள் எப்படி நேர்மையில்லாமல் இருக்க முடியும்? இது, எங்களின் மனசாட்சியை நெறிபடுத்தி, யாரும் எங்களை கவனிக்காத போதும் நாங்கள் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்ற ஒழுக்கத்தைக் கற்றுத்தந்துள்ளது. இதுபோன்ற ஒரு அமைப்பு வேலை செய்யும் என்று யாரும் நம்பவில்லை. எங்கள் பள்ளியை நினைத்து நாங்கள் பெருமையடைகிறோம்," என்றார்.

மாணவர்களிடையே நேர்மை என்னும் பண்பை வளர்ப்பதற்கு இது மிகச் சிறந்த கருவியாக இருக்கிறது என்பதை உணர்ந்த பலரும் இதுபோன்ற திட்டத்தை வரவேற்கிறார்கள். ஈரோடு ஈஷா வித்யா பள்ளியைத் தொடர்ந்து மதுரையிலுள்ள ஒரு பள்ளியிலும் நேர்மையாளர் பள்ளி துவங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் என்னும் அமைப்பு இதுபோன்ற கடைகளை தமிழகமெங்கும் சுமார் 44 பள்ளிகளில் துவங்க திட்டமிட்டுள்ளது.

சென்னையிலும் குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் வித்யாலயா பள்ளியிலும் இது போன்ற கடை துவங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கல்வித்துறை அதிகாரிகள் இந்தக் கடைகள் செயல்படும் விதத்தை விரிவாக ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இது தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் துவங்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

ஒரு மனிதனை இன்னொரு மனிதன் நம்பும் இந்தக் கலாச்சாரம் இங்கே பிறந்திருப்பது மிகவும் அற்புதமானது.

இது உலகெங்கும் பரவிட ஈஷா வித்யா வாழ்த்துகிறது.