மழை நீரை குடிநீராக்கும் முறை
குடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாக வரும் மழைநீரை, நிலத்தில் விடாமல் அப்படியே குடிநீருக்காகவும் சேமிக்கலாம் அல்லவா, இதை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அத்தியாவசியமாகிறது.
 
மழை நீரை குடிநீராக்கும் முறை, Mazhai neerai kudineerakkum murai
 

கிராமங்களில் 15 வருடங்களுக்கு முன்புவரை தண்ணீர் தேவையென்றால் கிணற்றில் இறைக்கப்படும். அதிலும், ஒவ்வொரு ஊரிலும் நல்ல தண்ணிக் கிணறு-உப்புத்தண்ணி கிணறு என இரண்டு வகை கிணறுகள் இருக்கும். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தால், "நல்ல தண்ணி பானையிலதான மொண்டு வந்த...?" என்று கேட்டு ஐயம் தீர்த்த பின்பே தண்ணீரை குடிக்கக் கொடுப்பார்கள்.

குடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாக வரும் மழைநீரை, நிலத்தில் விடாமல் அப்படியே குடிநீருக்காகவும் சேமிக்கலாம் அல்லவா, இதை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அத்தியாவசியமாகிறது.

இப்போது அந்த கேள்வியெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஒரு ஃபோன் செய்தால்போதும் மினரல் வாட்டர் கம்பெனியிலியிலிருந்து தண்ணீர் கேன்கள் வீடுதேடி வந்து விடுகின்றன. இது நாகரீக வளர்ச்சியையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ குறிப்பதாக இல்லை, இது நிலத்தடிநீர் இல்லாமல் போனதையும் உப்பாகிப் போனதயுமே காட்டுகிறது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நமது நாட்டில் பருகத் தகுந்த நீர் நூற்றுக்கு 85 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது, அதிலும் பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் 31 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது, தமிழ்நாட்டில் 92 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது, மற்ற அனைவரும் மாசடைந்த நீரையே, குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

முன்பு நகரமானாலும் கிராமமானாலும் வீட்டிற்கு பின் புறத்தில் கேணி அமைந்திருக்கும். இப்போதோ புதுவீடு கட்டப்படும்போது ஒரு போர்வெல் போடப்படுகிறது. அதுவும் குடிதண்ணீருக்காக என்று கனவிலும்கூட யாரும் எண்ணுவதில்லை. பாத்திரங்கள் கழுவது, துணி துவைப்பது போன்ற பிற தேவைகளுக்காக மட்டுமே அந்த தண்ணீர்! ஆனால், அந்த போர்வெல்லில் தண்ணீர் வருகிறதா, முந்நூறு அடி துளைபோட்ட பின்னும் வெறும் காற்று மட்டுமே வருகிறதா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே!

மழைநீர் சேமிப்பே ஒரே தீர்வு!

இந்நிலை மாறுவதற்காக பூமிக்கு வரும் மழைநீரை சேமிப்பதின் அவசியத்தை அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக “மழைநீர் சேகரிப்புத் திட்டம்” (Rain Water Harvesting Plan) பற்றி வலியுறுத்தி வருவதை காணமுடிகிறது. தூய மழைநீரை அதிகபட்சமாக நிலத்தடி நீராக சேகரிக்கும்போது படிப்படியாக நிலத்தடி நீரின் மட்டம் உயர்கிறது, மேலும் நீரின் சுவையும் மேம்படுகிறது.

குடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாக வரும் மழைநீரை, நிலத்தில் விடாமல் அப்படியே குடிநீருக்காகவும் சேமிக்கலாம் அல்லவா, இதை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அத்தியாவசியமாகிறது.

ஈஷா ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிமுகமான இயற்கை வாழ்வியல் நிபுணர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்களை ஈஷா விவசாயக் குழு அவரது இல்லத்தில் சந்தித்தது.

இத்தகைய சூழ்நிலையில் மழைநீர் வளம் மற்றும் சூரிய ஆற்றல் இரண்டையும் ஒருங்கே நாம் முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் என்று கூறும் திரு. இயற்கை சிவா அவர்கள் தனது இல்லத்திலேயே முழு செயல் வடிவம் கொடுத்துள்ளார். இந்த அமைப்பை “மழைக் குடிநீர் சேகரிப்புத் திட்டம்” (Drinking Rain Water Harvesting Plan) என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

மழை நீரை குடிநீராக்கும் முறை

20 அடிக்கு 30 அடி என்ற அளவில் அமைந்த அவரது இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து வரும் நீர் அனைத்தையும் சேமிக்கும் படி வழிவகைகளை செய்துள்ளார். முதலில் மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீர், வேகம் குறைக்கப்பட்டு, எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கும் தொட்டிக்கு செல்கிறது.

வடிகட்டும் தொட்டி துத்தநாகத் தகட்டினால் (Zinc) ஆனது, மழை நீரினால் துருபிடிக்காத இத்தொட்டியில் நீரில் உள்ள அழுக்குகள் வடிகட்டப்பட்டு தூய்மைப்படுத்தப் படுகிறது.

தொட்டி அமைப்பு - இரண்டடி நீளம், ஒன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது, இதில் கீழிருந்து மேலாக ஜல்லி, மணல் மற்றும் அடுப்புக்கரி போன்றவை அடுக்குகளாக (Layers) பரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குக்கு இடையில் நைலான் கொசுவலை உள்ளது, இதனால் வடிகட்டும் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காதவாறு தடுக்கப்படுகிறது.

தூசுகள் வடிகட்டப்பட்ட தூய்மையான நீர், சமையலறை பரண் (loft), படுக்கையறை பரண் மற்றும் முற்றங்களில் உள்ள பரண்களிலும் வைக்கப்பட்டுள்ள pvc தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு குடிநீருக்காகவும், மற்ற உபயோகத்துக்கும் பயன்படுகிறது.

இதைப்பற்றி திரு. சிவா அவர்கள் தெரிவித்தவை “குடிநீருக்கு பயன்படுத்துவதால், pvc தொட்டிகளின் மேல் சூரிய ஒளி படாமல் இருக்கும் படி அமைக்கப்பட வேண்டும், சூரிய ஒளி படநேர்ந்தால் நீரில் நுண்ணுயிரிகள் பெருகி நீர் பருக முடியாத அளவுக்கு கெட்டுவிட வாய்ப்புள்ளது.

மேலும் அவ்வப்போது பெய்யும் மழைநீர் தொடர்ந்து சேமிக்கப்படுவதால் குடிநீர் தொடர்ந்து கிடைக்கிறது, நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு குடிநீர் தேவைக்கு மட்டும் 3000 லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டிகளை அமைப்பதற்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே செலவாகும்.”

தமது தொழில்நுட்பங்களை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார். தேவைப்படுவோருக்கு அவர்களது இல்லங்களுக்கே சென்று ஆலோசனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். (தொடர்புக்கு: 9095156797)

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை இன்றி, நீர் மிகை மாநிலமாக வேண்டும் என்பதே என் கனவு என்று கூறிய திரு. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு ஈஷா விவசாயக்குழு நன்றியையும், வணக்கத்தையும் கூறிக்கொண்டு விடைபெற்றது.

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் முயற்சி...

சத்குருவின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமானது தமிழக விவசாயிகளை இயற்கை வேளண்மைக்கு திரும்பச்செய்யும் தனது முதற்கட்ட முயற்சிகளைத் துவங்கியுள்ளது. செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் முறையை பின்பற்றி ஈஷா விவசாய இயக்கம் செயல்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1