மரங்கள் இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கை இல்லை, உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் சுவாசிக்க மட்டுமல்லாமல் பல்வேறு தேவைகளுக்கும் மரத்தை சார்ந்தே இருக்கிறோம். மக்கள் தொகைப் பெருக்கம் மரங்களின் தேவையை அதிகரித்ததோடு மரங்களின் அழிவிற்கும் காரணமாகிவிட்டது. நாம் அழித்த மரங்களை நாமே மீட்டெடுக்க வேண்டிய காலகட்டத்தில் தற்போது இருக்கிறோம். இந்நிலையில் மரவளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விவசாய மற்றும் தரிசு நிலங்களில் டிம்பர் மரங்கள் சாகுபடி குறித்த பயிற்சியை *ஈஷா வேளாண் காடுகள் திட்டம்* நடத்தி வருகிறது. துறையூர் தம்மம்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்ச்சியாக கடந்த 16ம் தேதி தென்காசி புளியங்குடியில் நடைபெற்றது.

தென்காசி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அழகிய ஊர் புளியங்குடி. தேக்கு பூக்கும் பருவம் என்பதால் வெண்நிறத்தில் பூத்திருந்த தேக்குப் பூக்கள் சோலைக்கு வரிசை வரிசையாய் அழகூட்டிக் கொண்டிருந்தன. இயற்கை மணம் மாறாத காடுகள் சூழ அமைந்திருந்தது அந்தோணிசாமி அவர்களின் மரச்சோலை. 120 ஏக்கரில் பல்வேறு வகையான டிம்பர் மரங்கள் திட்டமிடப்பட்டு நடப்பட்டிருந்தன. பயிற்சியில் 400க்கும் மேற்பட்ட மர ஆர்வலர்கள் இயற்கையை ரசித்துக்கொண்டே மரம் வளர்ப்பு குறித்த பல்வேறு நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டனர்.

தமிழகத்தின் பசுமைப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க வேண்டும்

எலுமிச்சை கன்று நடவுடன் நிகழ்ச்சி துவங்கியது. ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் அனைவரையும் வரவேற்று பசுமைக்கரங்கள் திட்டத்தின் பணிகளை விளக்கினார். தற்போது தமிழகத்தின் காடுகளின் பரப்பளவு 16 சதவிகிதம் மட்டுமே உள்ள நிலையில், பசுமைப்பரப்பை குறைந்த பட்சம் 33 சதவிகிதம் அதிகரிக்கும் நோக்கத்தில் பசுமைக்கரங்கள் திட்டம் செயல்பட்டுவருகிறது. ஈஷா வேளாண் காடுகள் திட்டம் விவசாய நிலங்களில் மரப்பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதுடன் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகிறது.

கலப்பு மரங்களையே சாகுபடி செய்யுங்கள்

ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் வேளாண் காடுகள் திட்டம் செய்துவரும் பணிகளை குறித்து விளக்கினார். ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம் இதுவரை 750 விவசாயிகள் மரப்பயிர் விவசாயிகளாக மாறி உள்ளனர். இவ்விவசாயிகள் டிம்பர் மரங்களை சாகுபடி செய்து ஒரு ஏக்கர் முதல் 150 ஏக்கர் வரையில் வேளாண் காடுகளை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் 9,67,000க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப் பட்டுள்ளன. ஒற்றை மரச்சாகுபடியை விட கலப்பு மர சாகுபடியே லாபகரமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது. கலப்பு மரசாகுபடியில் நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை என்பதால் கலப்பு மர சாகுபடியையே ஊக்குவிக்கிறோம்.

நிகழ்ச்சியில் மரம் வளர்ப்பு குறித்த அடிப்படை விஷயங்கள், இயற்கை முறையில் மரம் வளர்ப்பு உத்திகள், மரம் வளர்ப்பு குறித்த அரசு நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான வருமானம் பெற ஊடுபயிர் சாகுபடி போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி அனுபவ விவசாயிகளும், துறை வல்லுநர்களும் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

30 சதவிகிதம் மழை அதிகரித்துள்ளது - புளியங்குடி அந்தோணிசாமி அவர்கள்

அவரவர் நிலத்திற்கு ஏற்ப எந்தெந்த மரங்கள் நன்றாக வளர்கிறதோ அந்த மரங்களையே வளர்க்க வேண்டும். எனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் இல்லாததினால் அதற்கு தண்ணீர் கொண்டுபோக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிலத்தை வாங்கி இங்கு மரங்களை வளர்த்தேன். தற்போது எனது பண்ணை ஒரு சிறந்த வனமாகியுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் மழையின் அளவு 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வேளாண் காடுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் பண்ணைக் குட்டையையும் சேர்த்தே அமைத்தால் நமக்கு தண்ணீர் கிடைப்பதோடு மற்றவர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி பிறக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கவாத்து செய்வது அவசியம் - தம்மம்பட்டி டாக்டர் துரைசாமி அவர்கள்

இயற்கை முறையில் வளர்ந்த கன்றுகளையே நடவு செய்ய வேண்டும். ரசாயன உரங்கள் பயன்படுத்தி வளர்ந்த மரங்களை நடவு செய்தால் 50 சதம் வரை கன்றுகள் இறந்து விடுகின்றன. மேலும் சிறிய கன்றாக நடவு செய்யும்போது ஆணிவேர் மண்ணில் ஆழமாக செல்லும், மரக்கன்றுகளை பையிலேயே உயரமாக வளர்த்தால் ஆணிவேர் பையிலேயே வளர்ந்து ஒரு சுருள் போல மாறிவிடும். இக்கன்றை நடவு செய்தால் ஆணிவேர் வளராது. பெரிய கன்றாக நடவிரும்பினால் பெரிய பையில் கன்று நட்டு வளர்க்கவேண்டும். மரம் வளர்ப்பை ஒரு கலை போல் செய்யவேண்டும். மரப்பயிர்களை முறையாக கவாத்து செய்வது அவசியம். பக்கக் கிளைகள் துளிர்க்கும்போதே அவற்றை கிள்ளிவிடவேண்டும். மரம் வளர்த்தால் மட்டும் போதாது அது தேவையான பருமனுடன் இருக்க வேண்டும், அப்போதுதான் நல்ல விலை கிடைக்கும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து மரங்களைப் பாதுகாக்க பண்ணையைச் சுற்றி உயிர் வேலி அமைப்பதும் அவசியம்.

வேப்ப மரம் வளர்த்தும் வெற்றி பெறலாம் - புதுக்கோட்டை கருப்பையா அவர்கள்

ஒரு காலத்தில் நம் நாடு முழுவதும் வேப்ப மரங்கள் இருந்ததினால் நம் முன்னோர்கள் பலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். வேப்ப மரம் எல்லா இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது. குறைந்த பட்சம் கால் ஏக்கரிலாவது விவசாயிகள் வேப்பந்தோப்பை உருவாக்க வேண்டும். காக்கை இடும் எச்சத்தில் உள்ள வேப்ப விதைகள் நன்றாக முளைக்கும். வேம்பு சுற்றுச்சூழலுக்கு உதவுவதோடு வருடாவருடம் வேப்பங் கொட்டையைத் தருகிறது. வேப்பங்கொட்டை விற்பனை மூலமாகவே எனக்கு வருடத்திற்கு 40,000 ரூபாய் வருமானம் வருகிறது.

தென்னையில் ஊடுபயிராக மரப்பயிர் - பொள்ளாச்சி வள்ளுவன் அவர்கள்

தென்னையில் ஊடுபயிராக மகாகனி, காயா, ஜாதிக்காய் போன்ற மரங்களை வளர்த்துள்ளேன். ஊடுபயிராக மரப்பயிர்களை சாகுபடி செய்வதினால் தென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஊடுபயிர் செய்தபின் காய்ப்பு அதிகரித்துள்ளது. மரப்பயிர்களின் இலைகள் தென்னைக்கு நல்ல உரமாக மாறுகிறது. பொள்ளாச்சியில் தற்போது வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. ஆனால் எனது பண்ணை ஒரு கலப்புப் பண்ணையாக உள்ளதால் தென்னை வாசனையை நுகர்ந்து வரும் வெள்ளை ஈக்களால் எனது பண்ணையை அடையாளம் காண முடியவில்லை. இதனால் எனது பண்ணையில் வெள்ளை ஈ தாக்குதல் அறவே இல்லை.

வளமான வருமானம் தரும் வாகை - திருப்பூர் வெங்கடேசன் அவர்கள்

எங்கள் நிலத்தில் இருந்த 9 வருட வயதுள்ள ஒரு நாட்டுவாகை மரம் 11 ஆயிரத்திற்கு விலை போனது. நமது நாட்டு மரங்களுக்கு நல்ல விலை கிடைக்கும்போது நாம் ஏன் மற்ற மரங்களை நாடிப்போக வேண்டும். நான் தற்போது 500 நாட்டுவாகை மரங்களை நடவு செய்துள்ளேன். மேலும 30 அடி உயரத் தென்னையில் ஊடுபயிராக மலைவேம்பை பயிர் செய்து நல்ல வருமானம் எடுத்துள்ளேன். மலைவேம்பு வேகமாக வளரக்கூடிய மரம் என்பதால் சிறிய கன்றாகவே நடவு செய்ய வேண்டும். மலைவேம்பை கவாத்து செய்யும்போது பட்டை உரியக்கூடாது. பட்டை உரிந்த மரத்தை குறைவான விலைக்கே எடுப்பார்கள். 18 அங்குல சுற்றளவு உள்ள மரம் என்றால் ஒரு டன்னுக்கு 7,100 வரை விலை கிடைக்கிறது. மலைவேம்பு வெட்டியபின் மறுதாம்பு நன்றாக வளரும், அதற்கேற்றார் போல் தரையை ஒட்டி அறுவடை செய்ய வேண்டும்.

நீங்களே விற்றால் லாபம் நிச்சயம் - மரக்கடை அதிபர் சோமசுந்தரம் அவர்கள்

இருபது முப்பது வருஷமா பாதுகாத்து வளர்த்த மரத்துக்கு நியாமான விலை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அவர்களே மரத்தை விற்க வேண்டும். வியாபாரிகளிடம் விற்க முயன்றால் அவர் மரத்தைப் பார்த்து இது கோணல் மரம், ஓட்டை, வெடிப்பு என பல்வேறு காரணங்களைக்கூறி அடிமாட்டு விலைக்கே மரத்தை வாங்குவார். அதனால் இடைத்தரகர்களிடமோ வியாபாரிகளிடமோ மரத்தை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மரத்தை தடியாக (log) விற்பனை செய்யாமல் தேவையான அளவுக்கு தச்சர்களின் உதவியுடன் மரஅறுவை பட்டரைகளில் அறுத்து வைத்துக் கொண்டு *சைஸ் மரமாக* விற்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு மரத்தின் மொத்த மதிப்பில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் கிடைக்கும்.

மரப்பயிர்களில் ஊடுபயிராக மிளகு - அனவயல் ராஜாகண்ணு அவர்கள்

புதுக்கோட்டை வடகாடு, அனவயல் கிராமங்களில் கடந்த 25 வருஷத்துக்கு மேல் மிளகு சாகுபடி செய்துவருகிறோம். பன்னியூரா ஒட்டு ரகமும், கரிமுண்டா நாட்டு ரகமும் சமவெளிப்பகுதியில் மிகவும் நன்றாக வளர்கிறது. எந்த வகையான டிம்பர் மரத்திலும் மிளகை ஊடுபயிராக சாகுபடி செய்ய முடியும். தென்னையிலும் மிளகு நன்றாக படர்ந்து வளர்கிறது. மிளகு நடவுசெய்து மூன்று வருடத்தில் காய்க்கத் தொடங்கிவிடும். ஐந்தாவது வருடத்தில் இருந்து ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 500 கிலோ அறுவடை கிடைக்கும். மரப்பயிர் சாகுபடி செய்து வருமானம் எடுக்க பல வருடங்கள் காத்திருக்கும் விவசாயிகளுக்கு மிளகு நல்ல வருமானம் தரக்கூடிய சிறந்த ஊடுபயிராகும்.

மரத்தை நட்டவுடன் பதிவு செய்யுங்கள் - DFO வீரக்குமார் அவர்கள்

மரப்பயிகளை நடவு செய்தவுடன் ஒரு வருடம் கழித்து எத்தனை மரங்கள் உயிருடன் இருக்கிறதோ அதை கிராம நிர்வாக அதிகாரியிடம் (VAO) அடங்கலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்படி பதிவு செய்வது மரங்களின் பிறப்புச் சான்றிதழ் போல, அதனால் அவசியம் பதிவு செய்ய வேண்டும். மரத்தை வெட்ட விரும்பும்போது VAO அவர்களிடம் விண்ணப்பித்து சிட்டா, அடங்கல் போன்ற சான்றிதழ்களைப் பெறவேண்டும்.

பட்டியல் மரங்களான (Scheduled timbers) சந்தனம், செஞ்சந்தனம், ஈட்டி, கருங்காலி, தேக்கு போன்ற மரங்களை வனத்துறையின் அனுமதி பெற்றே வெட்டவேண்டும். நீங்கள் வெட்டப்போகும் மரங்கள் பட்டியல் மரங்கள் என்றால், Form 2 விண்ணப்ப படிவத்துடன், VAO அவர்களிடம் பெற்ற அடங்கல், சிட்டா போன்ற ஆவணங்களையும் இணைத்து அருகில் உள்ள வனத்துறை (Regular) அதிகாரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.

தேக்கு மரத்திற்கு அனுமதி பெற்று விவசாயிகளே வெட்டிக்கொள்ளலாம். ஈட்டி மரம் வெட்ட தற்போது அனுமதியில்லை. சந்தனம், செஞ்சந்தனம் நன்றாக முற்றியிருந்தால் வனத்துறையே வெட்டி எடுத்துக் கொண்டு 80 சதவிகித பணத்தை விவசாயிகளுக்குக் கொடுப்பார்கள். பட்டியல் மரங்களைத் தவிர மற்ற அனைத்து மரங்களையும் VAO விடம் சான்றிதழ் பெற்று விவசாயிகளே வெட்டிக்கொள்ளலாம். மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லும்போது இந்த சான்றிதழ் மிகவும் அவசியம்.

தொடர்ந்து மரக்கன்று நடவு முறை குறித்த களப்பயிற்சிக்குப்பின், பங்கேற்பாளர்கள் பண்ணையில் ஓங்கி வளர்ந்திருந்த செம்மரம் போன்றவற்றை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சி முடிந்தபின் எலுமிச்சை கன்றுகளையும், மரக்கன்றுகளையும் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க ஒரு வேளாண் காட்டை உருவாக்குவார்கள் என்பது நிச்சயம்.

தொகுப்பு: ஈஷா வேளாண்காடுகள் திட்டம்

தொடர்புக்கு: 94425 90068

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!