கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று இயற்கை எழில்கொஞ்சும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாநகரில் ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வெகுசிறப்பாக நடந்தேறியது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு.K.C.கருப்பணன், திரு S.P.வேலுமணி, திரு.P.தங்கமணி மற்றும் திரு.K.A.செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் உரையாற்றி சிறப்பித்தனர்.

isha-gramotsavam-2018-alldelicates-on-stage

ministers-ishagramotsavam

“ஈரோட்ல கிராமோத்சவம்னு எதோ திருவிழான்னு சொல்றாங்கல்லீங்கோ, எந்த சாமிக்கு கும்புடுறாங்கோ?!” என பெருந்துறை பஸ்ஸில் பயணித்த ஒரு பெரியவர் கேட்க,“அட அது விளையாட்டு திருவிழாவாம் தாத்தா… கோயமுத்தூர் ஈஷால இருந்து வந்து நடத்துறாங்களாம்!” என ஸ்மார்ட் ஃபோன் திரையிலிருந்து கவனத்தை எடுத்துவிட்டு பதிலளித்தார் அந்த கல்லூரி இளைஞர்.

பங்குனி மாதம் வரும் பெரிய மாரியம்மன் கோயில் குண்டம் இப்போதே வந்ததைப் போல ஈரோட்டு மக்கள் ஒருபுறம் கொண்டாடத் தயாராக, அருகிலுள்ள கோபி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் என பல்வேறு ஊர்களிலும் கிராமோத்சவ கொண்டாட்ட அதிர்வுகள் பரவியிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

isha-gramotsavam-2018-makkal

சத்குரு தரிசனம் கிடைக்கும் என்ற பரவசத்தில் பல ஈஷா அன்பர்கள் வந்திருந்த அதேவேளையில், கிராமோத்சவத்தில் அரங்கேறும் பல்வேறு நாட்டுப்புறக் கலைகளை ரசிப்பதற்கும், இறுதிப்போட்டிகளில் வெல்லப்போகும் அணிகள் எவையெவை என்பதை அறிந்துகொள்வதற்கும் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாக்கு ஓட்டப்பந்தய போட்டி, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு வேடிக்கை விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு குழந்தைகளோடு குழந்தைகளாய் மாறி அனுபவித்து மகிழ்வதற்கும் என பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

காலை 10 மணி முதலே டெக்ஸ்வேலி வளாகத்தில் கொண்டாட்ட மனநிலை தொற்றிக்கொண்டிருந்ததை அங்கிருந்த புன்னகை பூக்கும் முகங்கள் அறிவித்தன. வளாகத்தினுள்ளே நுழைகையில் வாழை மரங்கள், பாக்கு கொட்டைகள், தென்னங் குறுத்தோலைகள் மற்றும் வண்ண மலர்களால் பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தோரண வாயில் வருகைதரும் பார்வையாளர்களை வரவேற்க, கூடவே சந்தனம், குங்குமம் வழங்கி, பன்னீர் தெளித்தபடி கைகூப்பி நமஸ்காரம் செய்து தன்னார்வத் தொண்டர்களும் வரவேற்றனர்.

கொங்கு சீமையின் கிராமங்கள் சூழ்ந்த நகரமாக ஈரோடு திகழும் அதேவேளையில், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் இயந்திர பயன்பாடுகளும் பல்வேறு பாரம்பரிய கிராமிய உணவுகளை வழக்கொழிய செய்துள்ளதே நிதர்சனம்! இத்தகைய சூழலில் ஈஷா கிராமோத்சவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமிய உணவுத் திருவிழாவில் மக்கள், கடந்த தலைமுறைவரை தங்களது வீடுகளில் அன்றாட உணவாக இருந்துவந்த பல்வேறு சத்தான சிறுதானிய உணவு வகைகளை மீண்டும் நினைவுகூர்ந்ததோடு, அவற்றை அங்கேயே ருசித்து மகிழ்ந்தனர்.

isha-gramotsavam-2018-gramiyakalai

மேலும், நாள்முழுக்க அரங்கேறிய நம் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கொண்டாட்டத்தின் உண்மையான முகத்தை தரிசிக்கச் செய்தன. மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமிய நடனங்களை ஒருசேர ஒரே மேடையில் காணும் அரிய வாய்ப்பினை இத்திருவிழா வழங்கியது. பறை இசையின் அதிர்வும் நையாண்டி மேளத்தின் முழக்கமும் நம் செவிகளை ஊடுருவும்போது கால்கள் எப்படி நடனம் ஆடாமல் இருக்க முடியும்?! கலை நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டிருந்த 6 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டிவரை எழுந்துநின்று உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரபரப்பின் உச்சத்தை காட்டிய இறுதிப்போட்டிகள்…

6500 தமிழக கிராமங்களிலிருந்து 40,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் 4000அணிகளுடன், போட்டியாளர்களின் எண்ணிக்கையிலும் கிராமங்களை சென்றடைந்த விதத்திலும் மிகப் பிரம்மாண்டமான ஒரு நிகழ்வாக இவ்வருட கிராமோத்சவம் நடந்துமுடிந்தது.

சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால், ஆண்கள் கபாடி & பெண்கள் கபாடி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகள் தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் உற்சாக குரல்களுக்கு மத்தியில் வெகுசிறப்பாக நிகழ்ந்தேறியது.

isha-gramotsavam-2018-finals

வழக்கம்போலவே கோப்பையை வென்றெடுக்கும் தீவிரத்தில் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டுசென்றனர்.

ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்

வாலிபால் (ஆண்கள்)முதலிடம் – சேலம் பூலாவரி – ரூ.5 லட்சம்2-ம் இடம் – திருநெல்வேலி நல்லூர் – ரூ.3 லட்சம்
த்ரோபால் (பெண்கள்)முதலிடம் – கோவை புள்ளா கவுண்டன் புதூர் – ரூ.1 லட்சம்2-ம் இடம் – ஆந்திரா, சொன்ட்டியம் – ரூ.50 ஆயிரம்
கபாடி (ஆண்கள்)முதலிடம் – சேலம் – ரூ.2 லட்சம்2-ம் இடம் – திருச்சி – ரூ.1 லட்சம்
கபாடி (பெண்கள்)முதலிடம் – கோயம்புத்தூர் – ரூ.1 லட்சம்2-ம் இடம் – திண்டுக்கல் – ரூ.50 ஆயிரம்
பாரா ஒலிம்பிக்முதலிடம் – கன்னியாகுமரி – ரூ.20 ஆயிரம்2-ம் இடம் – கோயம்புத்தூர் – ரூ.15 ஆயிரம்

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வு…

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய மாலைநேர விழாவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களும், தமிழக அமைச்சர்கள் திரு.கே.ஏ.செங்கோட்டையன், திரு.பி.தங்கமணி, திரு.எஸ்.பி.வேலுமணி, திரு.கே.சி.கருப்பணன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் இந்திய பளு தூக்குதல் வீராங்கணை திருமதி.கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரும் வெற்றிபெற்ற அணிகளைச் சார்ந்த வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

manjal-vilayum-managaril-nenjai-alliya-gramotsavam-tree-planting-img

முன்னதாக, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து மறைந்த திரு.நெல் ஜெயராமன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கர்ணம் மல்லேஸ்வரி அவர்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததோடு, விளையாட்டு வீரர்களுடன் உற்சாகமாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

ishagramotsavam2018-malleshwari-with-players

மல்லேஸ்வரி அவர்கள் பேசும்போது,

“தமிழக கிராமங்களில் விளையாட்டை மேம்படுத்த ஈஷா எடுத்துள்ள இந்த முயற்சி மிக பாராட்டத்தக்கது. 90-களில் பளு தூக்குதல் போட்டியில் தமிழகம் சிறந்து விளங்கியது. அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும். இந்தியாவில் போதிய விளையாட்டு மேம்பாட்டு வசதிகளையும் சிறந்த பயிற்சிகளையும் உருவாக்க வேண்டும். ஈஷா தொடங்கவுள்ள விளையாட்டு அகாடமியில் பளு தூக்குதல் போட்டிக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

மாண்புமிகு தமிழக ஆளுநர் பேசுகையில்…

manjal-vilayum-managaril-nenjai-alliya-gramotsavam-governer-speech-img

“வணக்கம், சௌக்கியமா இருக்கீங்களா?” என தமிழில் தனது உரையை துவங்கி பார்வையாளர்களின் கரகோஷதைப் பெற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள், தொடர்ந்து விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசியதோடு, தமிழக கிராமங்களில் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் ஈஷா மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து வெகுவாகப் பாராட்டினார். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் இளைஞர்கள் அனைவரும் தைரியமாக களத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்பதை ஆணித்தரமாக அவர் பதிவு செய்தார்.

நிகழ்ச்சியில் சத்குருவின் உரை:

நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு மையத்தை துவங்குவதற்கு வேண்டுகோள்விடுக்கும் விதமாக ஒரு திட்ட அறிக்கையினை தமிழக அரசிடம் ஈஷா சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பளு தூக்குதல், வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற தனிநபர் விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கக்கூடிய ஒரு சர்வதேச தரத்திலான அகாடமியை ஈஷா யோகா மையத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் சத்குரு அறிவித்தார்.

மேலும் அவரது உரையின்போது…

“நம் கிராமங்களில் உழவு ஓட்டுவது, விதை விதைப்பது, அறுவடை செய்வது என அனைத்திலும் ஒரு ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டங்கள் நிறைந்து இருந்தது. ஆனால், நம் நாடு கடந்த சில தலைமுறைகளாக ஏழ்மையில் இருந்த காரணத்தால் அந்த கொண்டாட்டங்கள், கிராமிய கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள் காணாமல் போய்விட்டன. அதை மீட்டெடுப்பதற்காக ஈஷா கிராமோத்சவம் எனும் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு கிராமோத்வசத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் கலந்துகொண்டுள்ளது மகத்தான ஒரு செயல்.

ஒருவருடைய வாழ்க்கை கொண்டாட்டமாகவும் உற்சாகமாகவும் நடக்க வேண்டும் என்றால் விளையாட்டு என்பது மிக அவசியமானது. அந்த நோக்கத்தில், சர்வதேச தரத்தில் ஒரு விளையாடு அகாடமியை ஈஷாவில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

நம் நாட்டு குழந்தைகளிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. ஆனால், அவர்களுக்கு சரியான வயதில் விளையாட்டுப் பயிற்சி கிடைப்பதில்லை. டில்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு சென்று பயிற்சி பெறுவது என்பது மிக சிரமமான ஒன்று.

1990-களில் பளு தூக்குதல் போட்டியில் தமிழக வீரர்கள் சிறந்து விளங்கினர். ஏராளமான பதக்கங்கள் வென்றனர். அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும்.

இந்தியாவில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் ஆகிய இரண்டும் மிக முக்கிய தொழில்களாக உள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக மக்கள் பயன்படுத்திய ஆடைகளில் 60 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவுக்குள் நுழைந்து தேசத்தை தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து ஆடை ஏற்றுமதியை 90 சதவீதம் வரை இல்லாமல் ஆக்கியது. இதனால் ஏராளமான நெசவாளர்கள் வறுமையால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. நம் நெசவு பாரம்பரியத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இதற்காக, நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சி நடத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் 120 விதமான ஆடைகளை உலக தர டிசைனர்களிடம் எடுத்துச் செல்ல உள்ளோம்.

கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்துவதற்காக ஈஷா பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நதிகளை மீட்போம் இயக்கத்தின் கொள்கை வரைவை (Policy) நிதி ஆயோக் அமைப்பு தேசிய கொள்கை வரைவாக அங்கீகரித்துள்ளது. மேலும், அந்த வரைவை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது.

தற்போது மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் 700 கோடி மரங்கள் நடுவதற்கு முயற்சிகள் நடந்துள்ளது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தின் முக்கிய ஆதாரமாக உள்ள காவேரியை மீட்பதற்கும் திட்டம் உள்ளது. இதற்காக, தலை காவேரியில் இருந்து தமிழக டெல்டா மாவட்டங்கள் வரை காவேரி கரை ஓரங்களில் மரம் நட திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார்.

இந்நிகழ்வை நீங்கள் ஒருவேளை தவறவிட்டிருந்தால் முகநூல் மற்றும் யூ- ட்யூப்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி இணைய ஒளிபரப்பின் பதிவினை இப்போதும் சென்று பார்க்கமுடியும்.

மேலும் விவரங்களுக்கு கிராமோத்சவம் இணையத்தளத்தை பாருங்கள்.