மனநிறைவுக்கும், பண வரவுக்கும் கைகொடுக்கும் வனவிவசாயம்!
காடுகளின் பரப்பளவு உலகம் முழுவதும் குறைந்துவரும் நிலையில் உலகக் காடுகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் வனவிவசாயம் செய்து மரங்களின் தாலாட்டில் மனநிறைவை பெறுவதோடு, அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய பண வரவுக்கும் வழிகாட்டி, நாட்டின் பசுமைப்பரப்பையும் உயர்த்தும் வனவிவசாயத்தைப் பற்றி இங்கு படித்தறியலாம்!
 
 

பொன் முட்டையிடும் வாத்துபோல் வனங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

காடுகள் நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தவரை, காடுகள் நம்மால் பாதுகாக்கப்பட்டு வந்தது, என்று நாம் காடுகளை பயன்படுத்த துவங்கிவிட்டோமோ அன்றுமுதல் காடுகள் அழியத் துவங்கியது. தற்போது காடுகள் அழிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் மரத்தேவைகளுக்காகவே காடுகள் அதிகம் அழிக்கப்படுகிறது. மரங்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் மரங்களை அளவறிந்து, தேவையறிந்து பயன்படுத்த வேண்டிய நிலையிலும், அம்மரங்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கிறோம்.

பொன் முட்டையிடும் வாத்துபோல் வனங்களை நாம் பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சத் தேவைக்கு மட்டுமே காடுகளை அணுகவேண்டும், தற்போது இருக்கும் காடு முழுவதையும் நாமே அழித்து விட்டால், நமது சந்ததியினருக்கு என்ன வளங்கள் கிடைக்கும்?. இந்த சூழ்நிலையில் நமக்குத் தேவையான மரங்களை காடுகளில் இருந்து வெட்டாமல், டிம்பர் மரங்களை நாமே வளர்த்து அவைகளை பயன்படுத்திக் கொள்வதின் மூலம் வனவளத்தை நாம் பாதுகாக்க முடியும்.

காடுகளின் பரப்பளவை உயர்த்த நாம் ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பை செய்தால் நாட்டில் பசுமை படரும், வனவளம் செழிக்கும். விவசாய நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் வேளாண்காடுகளை உருவாக்குவதன் மூலம் வனவளம் அதிகரிப்பதோடு, நமக்கு தேவையான மரங்களை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். அந்த நோக்கத்தில் ஈஷா வேளாண்காடுகள் திட்டம் விவசாயிகளை மரங்கள் வளர்க்க ஊக்குவித்து வருவதோடு, அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. ஈஷா விவசாய இயக்கம் விவசாயப் பண்ணைகளின் வேலியோரங்களில் நாட்டுரக மரங்களையும், டிம்பர் மரங்களையும் வளர்க்க விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.

விவசாயிகள் மனநிறைவுக்கு மட்டும் மரம் வளர்ப்பதில்லை, அவர்களின் வாழ்வாதாரமும் அதில் உள்ளது

மனநிறைவுக்கு வனவிவசாயம்

ஈஷா பசுமைக்கரங்களின் உதவியோடு பல்வேறு விவசாயிகள் அவர்கள் நிலங்களில் காடுகளை உருவாக்கி வருகிறார்கள். சேலம் தம்மம்பட்டி, காஞ்சேரி மலையில் டாக்டர் துரைசாமி அவர்கள் ஆரம்பித்த வனவிவசாயம் தற்போது லிட்டில் ஊட்டி என்ற பெயரோடு 120 ஏக்கரில் ஈட்டி, வேங்கை, செம்மரம், கருமருது, நீர் மருது, மஞ்சள் கடம்பு, மலைவேம்பு போன்ற டிம்பர் மரங்களுடனும், பலா, சப்போட்டா, நெல்லி போன்ற பழ மரங்களுடனும் பல்லுயிர் பெருக்க நிலையில் பல்வேறு தாவரங்களைக் கொண்டும் பல உயிர்களுக்கு அடைக்கலமாகவும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரங்களைத் தாங்கி சேலத்தில் ஒரு குட்டி நீலகிரியாக மாறியிருக்கிறது.

Dr. Duraisamy (1) அந்த மரங்களை வளர்த்துள்ள துரைசாமி அவர்கள், இந்த மரங்களை என் உயிருள்ளவரை வெட்டமாட்டேன், எதிர்காலத்தில் என் பேரப்பிள்ளைகளுக்கு இது பயன்படும், அவர்கள் ஒரு மரத்தை வெட்டினாலும் அதற்கு பதிலாக இரண்டு மரங்களை நடவு செய்து விடுவார்கள், என்று கூறும்போது மரங்களின் மீது அவருக்குள்ள நேசத்தை உணரமுடிந்தது.

நிறைவான வருமானம் தரும் வனவிவசாயம்

விவசாயிகள் மனநிறைவுக்கு மட்டும் மரம் வளர்ப்பதில்லை, அவர்களின் வாழ்வாதாரமும் அதில் உள்ளது, அவர்கள் எளிமையான முறையிலும் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய வகையிலும் டிம்பர் மரங்களை வளர்க்க முடியும். ஈட்டி, வேங்கை, செம்மரம், கருமருது, நீர் மருது, மஞ்சள் கடம்பு, மலைவேம்பு போன்ற டிம்பர் மரங்களை வளர்த்து, அம்மரங்களை வெட்டிப் பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு நல்ல வருமானம் உத்திரவாதத்துடன் கிடைக்கிறது. குமிழ், மலைவேம்பு, பெருமரம் போன்ற மரங்களை நடவு  செய்து 7 முதல் 10 வருடங்களில் வருமானம் பெற முடியும். தேக்கு, மகோகனி, மஞ்சள் கடம்பு போன்ற மரங்களை நடவு செய்து 20 முதல் 30 வருடங்களில் நல்ல வருமானத்தைப் பெற முடியும். ஈட்டி, செஞ்சந்தனம், சந்தனம் போன்ற மரங்களை நடவு செய்வதின் மூலம் 30 முதல் 40 வருடங்களில் நல்ல பலனைப் பெறமுடியும்.

வன விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி

Pepper 1 (1) பல்லாண்டுகாலப் பயிர்களான மரப்பயிர்களை சாகுபடி செய்யும்போது விவசாயிகள் ஊடுபயிர்களையும் சாகுபடி செய்யலாம், ஆரம்ப காலங்களில் காய்கறிகள், நிலக்கடலை, பயறுவகைகள் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். ஜாதிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் போன்றவற்றை டிம்பர் மரங்களுக்கிடையே சாகுபடி செய்வதினால் சில ஆண்டுகளுக்கு பிறகு கனிசமான வருமானம் கிடைக்கும். நீர் மருது போன்ற மூலிகை மரங்களையும் சாகுபடி செய்யலாம், அவற்றின் பட்டை மிகச்சிறந்த மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது. இலுப்பை போன்ற எண்ணைவித்து மரங்களையும் சாகுபடி செய்து நீடித்த நிலைத்த வருமானத்தை பெற முடியும்.

வனவிவசாயமும் மிளகு சாகுபடியும்

மரப்பயிர்களின் நடுவே வருடந்தோறும் வருமானம் தரக்கூடிய ஒரு ஊடுபயிராக மிளகு உள்ளது. மலைப்பகுதியில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய மிளகு சாகுபடி சமவெளிப்பகுதியிலும் சாத்தியப்பட வைத்துள்ளனர் புதுக்கோட்டை, ஆலங்குடி வடகாடு கிராம விவசாயிகள். அங்கு வனவிவசாயமும் பணவிவசாயமும் சேர்ந்தே நடைபெறுகிறது. வடகாடு விவசாயிகளின் முயற்சி தற்போது தமிழகத்தின் பல்வேறு விவசாயிகளுக்கும் ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது. ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் வடகாடு கிராமத்தில் மிளகு சாகுபடி பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்பயிற்சியில் 150 விவசாயிகள் பங்கேற்று பூத்து, காய்த்து, பழுத்து தொங்கிக் கொண்டிருந்த மிளகுக் கொடிகளை பார்த்து ஆச்சரியமடைந்தனர். மிளகு குளிர்ச்சியையும் ஒளியையும் விரும்பும் பயிர் என்பதால் மரப்பயிர்களை சாகுபடி செய்து அந்த சூழ்நிலையை உருவாக்கி விட்டால் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மிளகு விவசாயம் செய்யமுடியும். மிளகு சாகுபடிக்கு கரிமுண்டா என்ற நாட்டுரக மிளகும், பன்னியூர் என்ற ஹைப்ரிட் ரக மிளகும் ஏற்றவை. Pepper 3 (1)

மிளகு சாகுபடிக்கு வேளாண்காடுகள் அமைக்கும் முறை

மிளகுக் கொடிகளுக்கு குளிர்ச்சியும் ஒளியும் தேவை என்பதால் குளிர்ச்சியை மரங்கள் கொடுத்து விடுகின்றன, எனினும் நெடிது உயர்ந்து வயர்ந்து வளரக்கூடிய மரங்கள் மட்டுமே ஒளியை உள்ளே விடும், படர்ந்து வளரும் மரங்கள் ஒளியை உள்ளே விடுவதில்லை, எனவே உயரமாக வளரக்கூடிய மரங்களான தேக்கு, மலை வேம்பு, செஞ்சந்தனம், மகோகனி, ஈட்டி, குமிழ் போன்ற டிம்பர் மரங்களை நடவு செய்து அதில் மிளகை ஏற்றி விடலாம். இவ்வாறு மிளகுக் கொடிகளை டிம்பர் மரங்களில் ஏற்றிவிடுவதோடு, இடையிடையே  தழை வழி இனப்பெருக்கத்தின் மூலம் வளரக்கூடிய கிளைரிசிடியா, வாதநாராயணன், கிளுவை, முள்முருங்கை போன்ற போத்து மரங்களை நடவு செய்து அதிலும் மிளகுக் கொடிகளை ஏற்றி விடமுடியும். டிம்பர் மரங்களில் நடவு செய்வதாக இருந்தால் மரத்திற்கு மரம் 10 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். 20 அடி இடைவெளியில் டிம்பர் மரங்களை நடவு செய்திருந்தால் இடையிடையே போத்து மரங்கள் நடவு செய்து மிளகுக் கொடிகளை போத்து மரங்களிலும் டிம்பர் மரங்களிலும் படரவிடவேண்டும். சூழ்நிலைக்கேற்ப ஒரு மிளகுக்கும் மற்றொரு மிளகுக்கும் உள்ள இடைவெளியை முடிவு செய்து கொள்ளலாம்.

Pepper 2 (1)வளமான வருமானம் தரும் மிளகு

மிளகு நடவு செய்த மூன்றாவது ஆண்டில் இருந்து மகசூல் கிடைக்கும், தொடக்கத்தில் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை அறுவடை கிடைக்கும். 6 முதல் 7 வருடம் முதிர்ந்த கொடிகளில் இருந்து 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.       5 வருடம் வளர்ந்த ஒரு கொடியில் இருந்து 2 கிலோ வரை மிளகு கிடைக்கும்.       

15 வருடம் வளர்ந்த கொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய முடியும். ஒரு கிலோ மிளகுக்கு 800 முதல் 1000 ரூபாய் வரை விலை கிடைக்கும். மரப்பயிர்களில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யும் நுட்பத்தை தமிழகம் முழுவதும் உள்ள வன விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியில், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. வன விவசாயத்தில் இத்தகைய எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கும்போது, இனியும் மரங்களை வளர்க்க விவசாயிகள் ஏன் தயங்க வேண்டும். ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வன விவசாயம் செய்து நாட்டின் பசுமைப் பரப்பை உயர்த்துவதோடு மனநிறைவையும், நிறைவான வருமானத்தையும் விவசாயிகள் பெறுவதற்கு உலக காடுகள் தினம் நமக்கு நினைவு படுத்துகிறது.

தொகுப்பு: ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 94425 90062

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1