கொல்லைப்புற இரகசியம் - பகுதி 14

மாவிலை தோரணம், மாம்பழ ருசி, மாமர நிழல் என அழகும் சுவையும் சுகமும் நிறைந்த பல அம்சங்களை மாமரம் நமக்கு வழங்குவது, நாம் அறிந்ததே! ஆனால், மாம்பிஞ்சும், மாவிலையும், மாம்பூவும் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இங்கே உமையாள் பாட்டி கூறுவதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்!

வைகாசி திருவிழா ஊரெல்லாம் களைகட்டி இருக்க, உமையாள் பாட்டி வீடுமட்டும் விதிவிலக்கா என்ன?! மாவிலை தோரணங்களும் சாணி மொழுகப்பட்ட வாயிற்புறமும் என புதுப்பொலிவுகொண்டு உமையாள் பாட்டியின் வீடு காட்சியளித்தது. தோரணங்களிலிருந்த மாவிலைகள் என் சிரசை ஆசீர்வதித்து உள்ளே அனுப்ப, பாட்டி அங்கே மாவிலைகளுக்கும் மாம்பிஞ்சுகளுக்கும் நடுவே ஏதோ பக்குவம் செய்துகொண்டிருந்தாள்.

மாவிலை கொழுந்தை எடுத்து, காயவெச்சு பொடிசெஞ்சு, 3 விரல் அளவு உணவுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா நீரிழிவு நோய் கட்டுப்படும்.

"என்ன பாட்டி... அதான் எல்லா நிலைவாசல்லயும் மாவிலை தோரணம் தொங்குதே... இன்னும் எதுக்கு மாம்பிஞ்சும் மாவிலையுமா உட்காந்துகிட்டு இருக்கீங்க?" கேள்வி கேட்டபடியே பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தேன்.

"ம்... வாப்பா! வந்துட்டியா?! என்ன பாத்தாலே உனக்கு கேள்வி தன்னால வந்திடுதா? இல்ல ப்ளான் பண்ணி கேள்வியெல்லாம் தயாரிச்சுட்டு வர்றயா?" எனக் கேட்டு சலித்துக்கொள்வதுபோல் பாசாங்கு செய்தாள் பாட்டி.

"பாட்டி... அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க! கனிஞ்ச மரம்தானே கல்லடிபடும்?! உங்க கிட்டதான நாங்கெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க முடியும்?!"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாட்டியிடம் ஐஸ் வைப்பதைப்போல் பேசி சமாளித்தேன். ஆனாலும், உமையாள் பாட்டியிடம் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை.
"பாட்டி உங்க வாசல்ல, மாவிலைத் தோரணம் கட்டியிருக்கீங்க, அழகா இருக்குது, அது ஓகே! ஆனா... இதென்ன இவ்வளவு மாம்பிஞ்சு மாம்பூவெல்லாம் பறிச்சிட்டு வந்திருக்கீங்க. எதுக்காக?"

"மாமன்மார் செய்யாதத மாமரம் செய்யும்னு ஒரு பழமொழி இருக்கு கேட்டிருக்கியா?"

"இல்ல பாட்டி, இப்போ நீங்க சொல்லிதான் மொத தடவ கேக்குறேன்!"

"அதுசரி... இப்போ யாரு பழமொழியெல்லாம் யூஸ் பண்றாங்க, எல்லாம் ட்விட்டர் மொழிதான் யூஸ் பண்றாங்க. சரி நான் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ!

மாங்கொட்டை முற்றாத மாம்பிஞ்சுகள எடுத்து காம்பு நீக்கி காயவெச்சு, ஊசிய வெச்சு சின்ன சின்ன துளையிட்டு, உப்பு நீருல ஊறப்போடணும். அப்புறம் அத எடுத்து வெயில்ல வெச்சு உலர்ந்த பிறகு அப்பப்போ சாப்பிட்டு வந்தா பசியின்மை நீங்கி பசி உண்டாகும். வாய்குமட்டல் சரியாகும்.

இந்த மாங்கொட்டையில இருக்குற பருப்ப எடுத்து பொன்னிறமா வறுத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்போக்கு சரியாகும்.

இந்த மாவிலை மட்டும் சாதாரணமா..."

"ஓ மாவிலையிலயும் மருத்துவ குணம் இருக்குதா?!" பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆவல் அதிகமாக, குறுக்கிட்டேன்.

"ஆமா, சொல்றேன் கேளு! மாவிலை கொழுந்தை எடுத்து, காயவெச்சு பொடிசெஞ்சு, 3 விரல் அளவு உணவுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா நீரிழிவு நோய் கட்டுப்படும். மாவிலைய தேன் விட்டு வதக்கி குடிநீரில் கலந்து குடிக்க தொண்டைக்கட்டு, குரல்கம்மல் தீரும். மாவிலையை தீயிலிட்டு அதிலிருந்து வரும்புகையை பிடிச்சா தொண்டைக்கமறல், விக்கல் சரியாகும். மாவிலைய சுட்டு சாம்பலாக்கி வெண்ணெயில குழைச்சு தீப்புண் இருக்குற இடத்துல தடவி வந்தா, புண் குணமாகும்."

பாட்டி சொல்லிக்கொண்டே மாம்பிஞ்சுகளை பக்குவம் செய்து முடித்திருந்தாள்.

மாங்காய்-மாம்பழம் இவற்றைத்தவிர வேறேதும் பற்றி இதுவரை கேட்டிராத எனக்கு மாமரத்தின் இதர பாகங்களின் மருத்துவ குணங்களை பாட்டி சொல்லிக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் பயனுள்ள விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட சந்தோஷமும் கிடைத்தது. அதுமட்டுமில்லாம இது மாம்பழ சீசன் வேற... அதான் நான் பாட்டிகிட்ட டாட்டா சொல்லிட்டு, மாம்பழக் கடைக்கு புறப்பட்டேன். அதாவது, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

குறிப்பு:

மாம்பூ - மாம்பூவை பொடியாக்கி புகையிட கொசுக்கள் ஓடிவிடும்
மாம்பிசின் - பாதவெடிப்பிற்கு நல்ல மருந்து (வெளிப்புற உபயோகம்)
மாம்பிசின்+எலுமிச்சை சாறு - தேமல், படை ஆகியவற்றுக்கு நல்ல மருந்து (வெளிப்புற உபயோகம்)

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்