உங்கள் வீட்டில் ஒரு மொட்டை மாடி இருந்தால், அங்கேயே ஒரு காய்கறித் தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான உணவை நாமே தயாரிக்கமுடியும். சரி ஏன் மாடித் தோட்டம் அமைக்க வேண்டும்? தெளிவுறுவோம் இக்கட்டுரையின் மூலம்....

ஆர்கானிக் வெஜிடபிள்ஸ், இரசாயன கலப்பற்ற விளைபொருட்கள் என்றெல்லாம் இன்று ஆங்காங்கே பேசக் கேட்கிறோம். இரசாயனக் கலப்பற்ற உணவினை உட்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. ஆனால்... விவசாயிகள் வெகு சிலரே இயற்கை விவசாயத்தை தற்சமயம் மேற்கொள்கின்றனர்.

மண்ணும் குப்பையும் இருக்கும் இடத்தில் பசுமை தானாகவே வந்துவிடும்.

இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் 8 நாட்கள் பயிற்சி வகுப்பானது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெகு சிறப்பாக நிகழ்ந்தது. இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வமுள்ள இளைஞர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பலன்பெற்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த முயற்சிகளெல்லாம் ஒருபுறம் நிகழ்ந்தாலும், தற்போதைக்கு நாம் இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை வாங்கி உண்பதற்கு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பது உண்மைதான். இயற்கை விளைபொருட்கள் சந்தைகளில் கிடைப்பது அரிதாகவும் விலை கூடுதலாகவும் உள்ளது. இரசாயனக் கலப்பற்ற காய்கறிகளை உண்ண வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது, ஆனால் அதனை வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளதே என நீங்கள் நினைத்தால் அது நியாயமே! நாங்கள் இங்கே அதற்கு ஒரு தீர்வு சொல்கிறோம்.

இயற்கை காய்கறிகளை உண்ண, ஒரு தீர்வு!

ஆம், அதுதான் மாடித்தோட்டம்... அல்லது வீட்டுத் தோட்டம்! சில மண்மூட்டைகளை நீங்கள் சேகரித்து பக்குவம் செய்துவிட்டீர்கள் என்றால் பின் மாடித் தோட்டம் எளிதாக அமைந்துவிடும். அதென்ன இவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள் என கேட்கிறீர்களா?! நிஜம்தான்...! மண்ணும் குப்பையும் இருக்கும் இடத்தில் பசுமை தானாகவே வந்துவிடும். மனிதர்கள் நடமாட்டம் இல்லையென்றால் வீட்டிற்குள் கூட செடிகள் முளைத்து பசுமை பரப்பிவிடும். அது இயற்கையின் விளையாட்டு என்றுகூட சொல்லலாம்.

உங்கள் வீட்டு மொட்டை மாடியில் இடம் இருந்தால் போதும் அல்லது வீட்டின் முன்புறத்திலோ பின்புறத்திலோ கொஞ்சம் இடமிருந்தால் போதும், உங்கள் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை கீரைகளை நீங்களே விளைவித்துவிடலாம். அதுவும் இயற்கை முறையில்!

மாடித் தோட்டம்... செய்ய வேண்டியவை...?!

மாடித் தோட்டம் அமைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், மண் நிரப்புவதற்கான தொட்டிகளையோ அல்லது சாக்குப் பைகளையோ அல்லது ப்ளாஸ்டிக் பைகளையோ எடுத்துக்கொள்ளுங்கள். கீரை வகைகளை விளைவிக்க 1/2 அடி ஆழத்திற்கு மேல் மண் இருந்தால் போதுமானது. செடி வகைகளுக்கு 1 அடி ஆழத்திற்கு மேல் மண் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். கொடி வகைகளுக்கு 3 அடிக்கு மேலாக இருக்கும்படி பைகளில் மண்ணை எடுத்துக்கொள்ளவும். மண் போடும்போது அதோடு சம அளவு இயற்கையாக மட்கும் குப்பைகள் எதுவாயினும் சேர்க்க வேண்டும்.

குப்பைகளையும் மண்ணையும் நன்கு கலந்து பைகளில் இடவேண்டும். குப்பைகளுக்காக நீங்கள் எங்கும் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டு அன்றாட குப்பைகளிலேயே மட்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் மற்றும் வீட்டின் முன் உதிர்ந்துள்ள மர இலைகள் என எதுவாயினும் உபயோகித்துக்கொள்ளலாம். முதலில் நீங்கள் மண்ணை இடும்போது சிறிது நாட்டுப் பசுவின் சாணம் கிடைத்தால் சேர்த்துக்கொள்ளலாம். அது நல்ல உரமாக இருக்கும்.

பின் உங்களுக்குத் தேவையான காய்கறி விதைகளை சேகரித்தோ அல்லது கடைகளில் வாங்கியோ பைகளில் ஊன்றி வைத்தால் போதும்! இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்துவிடும்! அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உங்கள் வீடுகளில், உங்கள் மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த கீரை குழம்பாகவும், வெண்டைக்காய்கள் கூட்டாகவும், தக்காளிகள் பச்சடியாகவும் மணமணக்கும்.

ஈஷா நர்சரிகளில் மூலிகைச் செடிகள்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றது.

தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மூலிகைச் செடிகள் பதியமிடப்பட்டு, விநியோகிக்கப்படவுள்ளன. ஒரு சில குறிப்பிட்ட ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மூலிகைச்செடிகள் விநியோகம் துவங்கியுள்ளது. எனினும் மற்ற நாற்றுப்பண்ணைகளில் செடிகள் உற்பத்தி நிலையில் உள்ளன. கூடிய விரைவில் அனைத்து ஈஷா நாற்றுப்பண்ணைகளிலும் மூலிகை நாற்றுகளைப் பெற முடியும்.

உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.