மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி!

ஈஷாவின் நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில் நிகழ்ந்த 5 நாட்கள் பயிற்சி முகாம் பற்றிய ஒரு தொகுப்பு உங்களுக்காக!
 

ஈஷாவின் நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில் நிகழ்ந்த 5 நாட்கள் பயிற்சி முகாம் பற்றிய ஒரு தொகுப்பு உங்களுக்காக!

மத்திய பிரதேச மாநில அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இயங்கும் அம்மாநில அரசிற்கு சொந்தமான கூட்டமைப்பான ஜன் அபியான் பரிஷத்தின் (JAP) உயர்மட்ட அதிகாரிகள் சுமார் 130 பேருக்கு ஈஷாவின் நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நிகழ்த்தப்பட்டது.

மே 8ஆம் தேதியன்று ஈஷா யோக மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் துவங்கவிழாவில் கோவை மாவட்ட கிராம மேம்பாட்டு முகமையின் இயக்குநரான திரு.ரூபன் ஷங்கர் ராஜ் அவர்கள் முன்னிலை வகிக்க, ஜன் அபியான் பரிஷத் (JAP) அமைப்பைச் சார்ந்த திரு.சையத் ஷகிர் ஜஃப்ரி, திரு.டரியவ் சிங் சூரியவன்ஷி மற்றும் திரு.அருண் திருப்பதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாண்புமிகு மத்திய பிரதேச முதல்வர் அவர்கள் தலைமை வகிக்கும் ஜன் அபியான் பரிஷத் அமைப்பில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கிறார்கள். ஜன் அபியான் பரிஷத்திலிருந்து ஈஷாவிற்கு வருகை தந்துள்ள அதிகாரிகள் அனைவரும் சுமார் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் பணி அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரிகள். இவர்கள் களப்பணி அளவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொறுப்பாளர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலான அதிகாரிகள் கடந்த காலங்களில் சில மரம் நடும் செயல்திட்டப் பணியில் பொறுப்பேற்றிருந்தவர்கள் ஆவர்.

மேலும், இவர்கள் அனைவரும் கடந்த செப்டம்பரில் நிகழ்ந்த ஈஷாவின் நதிகளை மீட்போம் பேரணியில் நேரடியாக கலந்துகொண்டவர்கள்! நதிகளை மீட்போம் பேரணியில் கிராம அளவிலும் மண்டல அளவிலும் பொதுமக்கள் கலந்துகொள்வதற்கு இவர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்தனர். ஜன் அபியான் பரிஷத் அமைப்பின் இந்த ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் தாலுகாக்களில் ஈஷாவின் நதிகளை மீட்போம் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு கிளை நதியை புத்துயிரூட்டுவதற்கான பொறுப்பேற்கும்படி பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி தொடர்பான நிகழ்ச்சிகள் தவிர்த்து, பங்கேற்பாளர்களுக்கு சூரிய சக்தி, ஆம்கார தீட்சை, ஈஷா கிரியா போன்ற எளிமையான சக்திமிக்க யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன.

நிகழ்ச்சியின் சில துளிகள்

மே 9ஆம் தேதியன்று ஜன் அபியான் பரிஷத்தின் துணைத் தலைவர் திரு. பிரதீப் பாண்டே அவர்கள் தங்களது குழுவினரையும் ஈஷாவின் நதி வீரர்களையும் சந்திப்பதற்காக ஈஷா யோகா மையம் வருகை தந்தார். மத்தியப் பிரதேச மாநில நதிகளை புத்துயிரூட்டுவதற்காக இந்த இரண்டு குழுவினரும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் பேசும்போது நாம் நதிகளின் இன்றைய நிலையை மாற்ற வேண்டுமாயின், நாம் இந்த முயற்சியில் பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்கும் விதத்தில் அவர்களின் வாழ்வை தொடுவது அவசியம் என்பதை தெரிவித்தார்.

அன்றைய நிகழ்ச்சியின் நிறைவில் குழு விவாதம் ஒன்று நிகழ்ந்தது! அதில் நதிகளை மீட்போம் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் நிகழ்ந்த இந்த விவாதத்திற்குப் பின், பல்வேறு குழுக்களாக இருந்த பங்கேற்பாளர்கள் பின்வரும் சில முக்கிய கருத்துக்களை ஒருமித்த குரலில் முன்வைத்தனர். கிராமங்களில் கிராம பஞ்சாயத்து உதவியுடன் விவசாய நிலங்கள் மற்றும் பொது நிலங்களில் மரங்கள் நடுதல், இரசாயன விவசாயத்தை தவிர்த்து இயற்கைமுறையில் பலபயிர் விவசாயத்திற்கு மாறுதல், சொட்டு நீர் பாசனமுறை, நதிகளை சுத்தம் செய்தல், கிணறு வெட்டுதல் மூலமாக நிலத்தடி நீர் பெருக்கம் மற்றும் மழைநீர் சேமிப்பு போன்ற பல்வேறு நீர் சேமிப்பு முறைகள் போன்றவற்றோடு, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் விதமாக உழவர் உற்பத்தியாளர் அமைப்பினை (FPO) நாடு முழுவதும் செயல்படுத்துதல் ஆகியவை பட்டியலிடப்பட்டன.

பண்ணையில் நேரடி பார்வையிடல்

மே 10ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள திரு.வள்ளுவன் மற்றும் பிரேமலதா தம்பதியினரின் சுமார் 28 ஏக்கர் அளவிலான இயற்கை விவசாய பண்ணையை பங்கேற்பாளர்கள் அனைவரும் பார்வையிட்டனர். கடந்த 8 ஆண்டுகளாக மரப்பயிர் சார்ந்த இயற்கை வேளாண்மை நிகழும் இந்த பண்ணை, ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் ஆரம்பகட்ட முன்னெடுப்பின் அங்கமாகும். நிகழ்ச்சியில் விவசாயம் தொடர்பான சில தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து திரு.வள்ளுவன் அவர்களுடன் கலந்துரையாடியபோது சில முக்கிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இயற்கை விவசாய முறைப்படி தென்னை சாகுபடி செய்யும்போது, ஒரு வருடத்திற்கான முதலீடு குறித்தும் ஒரு வருடத்தில் தான் ஈட்டும் லாபம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். இரசாயன இடுபொருட்களுக்கு எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல், ஒரு வருடத்திற்கு ஆறு லட்ச ரூபாய் வரை முதலீடுசெய்து சுமார் 28 லட்சம் ரூபாய்க்கு மகசூல் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் அவர் 22 லட்ச ரூபாய் ஆண்டு வருமானமாக கிடைப்பதாக தெரிவித்தார்.

விவசாய நிலத்தின் தன்மை, மண்ணின் வளம், விவசாயிகளின் தேவை ஆகியவற்றைப் பொறுத்து வேளாண் காடுகள் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை அவர் தெரிவித்தார்.

இளம் விவசாயிகள் பெருக…?

விவசாயிகள் தங்கள் குழந்தைகளை விவசாய தொழிலில் ஈடுபடுத்த விருப்பம் இல்லாமல் இருப்பது குறித்த பார்வையை சிலர் முன் வைத்தனர்.

நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவும் இந்த நிலத்தில் இருந்து விவசாயிகளின் கடும் உழைப்பால் நம் தட்டிற்கு வருகிறது என்பதை நாம் நன்றி உணர்வுடன் ஒவ்வொருவரும் நினைத்து பார்த்தோமானால், விவசாயிகளுக்கான மதிப்பும் விவசாயத்தின் மீதான பெருமையும் நம்மிடம் உருவாக்கும்; இத்தகைய ஒரு நன்றி உணர்வை நாம் மக்களிடத்தில் ஏற்படுத்தினால் அது விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகளை முன்னேற்ற இளைஞர்கள் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட வழிவகுக்கும் என்ற பதில் அங்கே கிடைக்கப்பெற்றது.

விவசாயிகள் வருமானம் பெற வழி?

மேலும், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த விவாதங்களில், விவசாய நிலங்களில் என்ன வகையான மரங்கள் நடவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் மரப் பயிர் மற்றும் பலபயிர் வேளாண்மை அமைய வேண்டும் என்பதை ஈஷா பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள் வலியுறுத்திக் கூறினர். கூடவே உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் (FPO) மூலமாக விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலைபெற்றுத்தந்து பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு உதவிகள் வழங்கப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தன்னார்வத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மட்டுமே விவசாயிகளை நதிகளை மீட்போம் இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் பங்குபெறச் செய்யமுடியும் என்ற கருத்தை ஈஷா தன்னார்வத் தொண்டர் திரு.எத்திராஜலு அவர்கள் முன்வைத்தார். மரங்களின் கழிவுகளும் மாடுகளின் சாணமும் நிலத்திற்கு ஊட்டமளித்து இரசாயன இடுபொருட்களின் செலவை குறைப்பது குறித்த நுட்பமான விஷயங்களும் நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டன.

நன்றி கூறுதலும், அனுபவப் பகிர்வும்!

நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று பங்கேற்பாளர்கள் அனைவரிடமும் நிகழ்ச்சி குறித்த தங்கள் அனுபவப் பகிர்வை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஈஷா யோக மையத்தில் இந்தி மொழியில் முதன் முதலாக நிகழும் இந்த நிகழ்ச்சியான இது வெகு சிறப்பாக நடை பெற்றதாக தெரிவித்த ஈஷா பசுமைக் கரங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆனந்த் அவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரமவாசிகள், தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

பகிர்வுகள்:

மூத்த உறுப்பினர், JAP

இந்நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் முதற்கொண்டு பயிற்சி வகுப்புகள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தபோதிலும் அனைத்து பங்கேற்பாளர்களும் களைப்பேதும் இன்றி, மிக உற்சாகமாக சந்தோஷமாக காணப்பட்டனர். இந்தக் குறுகிய காலத்தில் நாங்கள் நிறைய விஷயங்களை இங்கு தெரிந்து கொண்டோம். பல்வேறு விஷயங்கள் கற்றுக்கொண்டபோதிலும் அவை உண்மையிலேயே மிக எளிமையாக இருந்தன. நாங்கள் தொடர்ந்து ஈஷாவுடன் பணியாற்றுவோம்! ஈஷாவில் நாங்கள் கற்றுக்கொண்டது எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மிக நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன்.

திரு.ஜெஃப்ரி, JAP

தனக்கு JAPயில் 10 வருட காலங்கள் பணியாற்றிய அனுபவமும், யுனிசெஃப்பில் 5 வருட காலங்கள் பணியாற்றிய அனுபவமும் உள்ளதாக தெரிவித்த ஜெஃப்ரி அவர்கள், ஈஷாவில் காணப்பட்ட ஒருங்கிணைப்பும் கட்டுப்பாடும் தன்னை வியக்கச் செய்வதாக தெரிவித்தார். இங்கே உள்ள மக்கள் தங்கள் சொந்தப் பணிகளை எல்லாம் விட்டுவிட்டு நதிகளை மீட்பதற்காக முழுநேரமாக முழுமையான ஈடுபாட்டுடன் இங்கே வந்து செயலாற்றுவது மிகவும் அற்புதமானது என்பதை தெரிவித்தார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1