நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 12

'வாய் மட்டும் இருந்தால் மொழி பேசும் தெய்வம்...’ மாடுகளின் பெருமைக் கூறும் இந்த புகழ்பெற்றத் திரைப்படப் பாடல் வரிகளை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது! இங்கே நம்மாழ்வார் கால்நடைகள் எந்த அளவிற்கு நமக்கு உற்ற துணையாய் இருக்கின்றன என்பதை தனது பாணியில் எடுத்துரைக்கிறார்.

நம்மாழ்வார்:

மனிதர்கள் தங்களுக்கு மட்டும் பொங்கல் கொண்டாடவில்லை. மாடாக உழைத்த இவர்கள் மாட்டுக்கும் பொங்கல் வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பசு தாயாகவே மதிக்கப்படுகிறது. அதனால், அதற்கு பூஜை செய்து சோறு ஊட்டுகிறார்கள். பொட்டு வைத்து மாலை அணிவிக்கிறார்கள். காளையும் அதற்கு ஈடான மரியாதையைப் பெறுகிறது. மாடு என்பது சக்தியாக, தாயாக, பயிர்த் தொழிலுக்கு ஆதாரமாகப் பயன்படுவதால், மாடுகளே ஒரு காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டது. இன்றும் நாளையும்கூட விளங்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று நாகரிக முன்னேற்றத்தால் பூமி வெப்பம் அதிகரிக்கிறது. சூழலில் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியை உலகில் பலரும் தேடுகிறார்கள். அப்படிப் புதுப்பிக்கக் கூடிய ஆதாரமாக காலங்காலமாக விளங்கி வருவது நமது மாடு.

40 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் உள்ள தண்ணீரை மேலே கொண்டுவருவதற்குக்கூட காளைகளைத்தான் பயன்படுத்தினோம். இன்று எந்திரங்கள் மிகுந்து வருவதால், மாடுகள் மனிதருக்குச் சுமை என்று நினைக்கிற மனோபாவம் கூடி வருகிறது.

2003-ம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 18 கோடியே 52 லட்சம் கால்நடைகள் உள்ளன. இன்னமும் நாட்டில் உள்ள பயிர் நிலத்தில் பாதியை மாடுகள் கொண்டுதான் உழவு செய்கிறோம். ஒரு கோடியே 20 லட்சம் மாடுகள் வண்டி இழுக்கின்றன. தமிழ்நாட்டில் மைசூர் மாடுகளும், மலை மாடுகளும் உம்பளாச்சேரி கொம்பில்லா மாடுகளும், காங்கேயத்தின் வலிமைமிக்க மாடுகளும் ஏரிலும், வண்டியிலும் செல்வதை ஆங்காங்கே காண முடியும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் உள்ள தண்ணீரை மேலே கொண்டுவருவதற்குக்கூட காளைகளைத்தான் பயன்படுத்தினோம். இன்று எந்திரங்கள் மிகுந்து வருவதால், மாடுகள் மனிதருக்குச் சுமை என்று நினைக்கிற மனோபாவம் கூடி வருகிறது. இன்றும் மாடுகள் சக்தியாகப் பயன்படுத்தப்படுவதால் 60 லட்சம் டன் பெட்ரோலியப் பொருட்கள் மிச்சப்படுத்தப்படுகின்றன என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்கள் மிச்சப்படுத்தப்படுவதால், 20 கோடி ரூபாய்க்கு அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

நமது மாடுகள் கொடுக்கும் சாணத்தின் மூலம் கிடைக்கும் எரிசக்தி மூன்றரைக் கோடி டன் நிலக்கரி அல்லது ஏழு கோடி டன் விறகுக்குச் சமமானது. இது மட்டும் அல்லாது 34 கோடி டன் அளவுக்கான சாணம் நமது நிலங்களுக்கு எருவாகக் கிடைக்கிறது. மாடு அல்ல மற்றவை அதாவது கல்வியைத் தவிர மற்றவை செல்வம் அல்ல என்று சொல்லும்போது மாடு அல்ல என்று ஏன் குறிப்பிட்டான் என்று இப்போது புரிகிறது.

நமது கிராமங்களில் உழவனுக்குத் துணையாக நின்று பாலாகவும், எருவாகவும் எரிசக்தியாகவும் பயன்படுகின்ற மாடுகள் இறைச்சிக் கடைக்கு அனுப்பப்படுவது அறிவுக்கு உகந்த செயல் அல்ல என்பதை இந்தப் பொங்கல் நாளில் நினைவுகூர்வது முக்கியம்.

வாழ்வில் இன்பம் பொங்குவது என்பது நாம் வாழ்வாதாரங்களை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. மழை, காடு, நிலம், கடல், மலை, சூரியசக்தி, கால்நடை, விதைகள், பயிர்கள், மனிதர்கள், நாம் வளர்க்காத செடி கொடி, விலங்கினங்கள் இவையே இயற்கை ஆதாரங்கள். இவற்றைச் சீராகவும், சிறப்பாகவும் நிர்வகிக்கப் பழகுவது நிலைத்து நீடிக்கவல்ல வாழ்வுக்கு வழிகோலும்.

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.