கோவை உக்குளம் குளக்கரையில் மரம் நடும் விழா!
ஈஷா அறக்கட்டளை, உக்குளம் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து கோவை உக்குளம் குளக்கரையில் நடத்திய மரம் நட்டு பராமரிக்கும் திட்ட துவக்க விழாவை சத்குரு மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர்.
 
 

உக்குளம் பாசன விவசாயிகள் சங்கத்துடன் ஈஷா அறக்கட்டளை இணைந்து கோவை உக்குளம் குளக்கரையில் இரண்டாயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டது அதன் துவக்க விழா உக்குளம் குளக்கரையில் பிப்ரவரி 11ம் தேதி அன்று காலை நிகழ்ந்தது. சத்குரு முன்னிலையில் நடந்த இந்த விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் தலைமை ஏற்று சத்குருவுடன் சேர்ந்து முதல் மரக்கன்றை நட்டு வைத்தார்.

உக்குளம் பகுதியின் காவல் தெய்வமான கருப்பநாயக்கன் சுவாமிக்கு பூஜையுடன் விழா துவங்கியது. நாட்டுபுறக் கலைஞர்களின் மேள தாளங்கள் முழங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்தில் நடனமாட துவங்கினர் சத்குருவும் அவர்களுடன் இணைந்து சிறிது நேரம் நடனமாடினார். சுற்றுவட்டார கிராமவாசிகள், ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள், ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகள், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

பெருமைத் தேடித் தந்த சத்குரு

விழாவில் பேசிய பேரூராட்சி தலைவர் திரு வேலுமணி அவர்கள், "முதலில் சத்குருவிற்கு நான் நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன். நம் மண்ணில் துவங்கிய அவரது பணியானது இன்று உலகம் முழுவதும் படர்ந்து ஐ.நா தேசம் வரை சென்று நம் மண்ணிற்கு பெருமை தேடி தந்துள்ளது. அவர்கள் சத்குரு மிகுந்த தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுகிறார்கள். அதற்கு அவருக்கு கோடான கோடி நன்றிகள். இன்று உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல். நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம். இன்று காற்று மாசுபடுகிறது மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம். இன்று இங்கு நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.

உலகத்தை கோவை பக்கம் திருப்பிய சத்குரு

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் பேசுகையில், "மக்கள் சேவையில் ஈடுபடும் சத்குரு அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றி, குளம் பராமரிப்பிற்காக பல உதவிகளை செய்துள்ளார்கள், குறிச்சிக் குளத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் சேர்ந்து தூர்வாரி கொடுத்தார்கள். இங்கு அவர் ஆற்றிவரும் பணி மிகவும் போற்றத்தக்கது, யோகா மூலம் இந்த உலகமே நமது கோவை மண்ணை திரும்பி பார்க்க வைத்துள்ளார். கடந்த மஹாசிவராத்திரிக்கு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியை கோவை வரவழைத்த சத்குருவிற்கு எனது மிகப்பெரும் நன்றி.

கோவையில் அரசு மயானத்தை பராமரிக்க கேட்டபோது சிறிதும் தயக்கமின்றி எடுத்து அதை இப்பொழுது ஒரு கோவிலைப் போல் நமக்காக மாற்றி தந்துள்ளார்கள். நதிநீர் இணைப்பிற்காக அவர் நடத்திய "நதிகளை மீட்போம் இயக்கம்" மிகவும் பிரபலம். நாம் இந்த பகுதி மக்களுக்காக சமுதாய நலக்கூடங்கள் துவங்கியுள்ளோம். நமது முதல்வரும் நமக்காக பாடுபடும் மனப்பான்மை கொண்டவர். பல தடுப்பணைகள் கட்டியுள்ளோம், இனிமேலும் யார் தடுப்பணைகள் வேண்டுமென்று மனு கொடுத்தாலும் கட்டித்தர உறுதிபூண்டுள்ளோம்.

சத்குருவின் பேச்சு

குளம், காடு, மலை இவையாவும் நமக்கு சொந்தமானது மட்டுமில்லை அதை நாம் நமக்கு கிடைத்ததைபோல நமது அடுத்த தலைமுறைக்கு திருப்பி தருவதும் நம் கடமை. இந்த குளத்தை சுற்றி 2000 மரங்கள் நடவுள்ளோம், இந்த இடத்தை மாற்றித்தருவது எனது கடமை. அதன் பிறகு அதை பாதுகாப்பது உங்கள் கடமை. 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதுமிருந்தும் மக்கள் நம் தேசம் தேடி வந்தார்கள் ஆனால் இப்பொழுது நமது தேச மக்கள் நம் தேசத்தை விட்டு ஓடிப்போக நினைக்கிறார்கள். ஓடிப்போக நினைப்பது நமது நாட்டை சிறையாக நினைப்பதால்தானே? பொருளாதார நிலையில் முன்னேறுவது அவசியம். அதே நேரத்தில் நமது தேசம் குறித்த பற்றும் அவசியம் தானே. விரைவில் விவசாயிகள் உற்பத்தி நிலையம் (Farmers Produce Centre) என்ற ஒன்றை உருவாக்க உள்ளோம் இதனால் விவசாயிகளுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். 15% விவசாயிகள் கூட தங்களின் குழந்தைகள் விவசாயம் செய்ய வேண்டும் என்று விரும்புவதில்லை. ஏனென்றால் அவ்வளவு சிரமத்தை சந்திக்கிறார்கள். விஞ்ஞானிகளின் கையில் உள்ள விவசாயின் பொருளாதரத்தை மீட்டெடுத்து விவசாயியின் கையில் கொடுக்க வேண்டும். நம் மாநிலத்திற்கு வளர்ச்சி வேண்டுமெனில் பொருளாதாரத்தில் ஒரு படி முன்னேற வேண்டும். 65% விவசாயிகள் உள்ள நாட்டில் அவர்கள் முன்னேறாமல் நாடு முன்னேற வாய்ப்பே இல்லை. பல வருடங்களுக்கு பிறகு நமது சமீபத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான பல விஷயங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

கலாச்சார குடும்பம்

ஈஷா யோக மையத்திற்கு உலகம் முழுவதுமிருந்து பலர் வருகை தருகிறார்கள், அவர்களில் பலருக்கு நமது கலாச்சராத்தை பற்றி அறிந்து கொள்ள ஆசை. நாமும் அந்த அனுபவத்தை அவர்களுக்கு தர முடிவு செய்துள்ளோம். நமது தமிழ் கலாச்சாரத்தை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நாம் எவ்வாறு சமைக்கிறோம், எவ்வாறு கோலம் போடுகிறோம், எவ்வகையான உடைகளை அணிகிறோம், எவ்வாறு பண்டிகைகளை கொண்டாடுகிறோம் என்பது போன்ற பல விஷயங்களை அவர்களுக்கு தெரியபடுத்த முடியும். ஆகையால் நாம் அவர்களை கிராமத்திற்கு அழைத்து வந்து தங்கவைக்க போகிறோம், இது நம் மக்களுக்கு பல வகையில் பலன் தரும். பொருளாதாரத்து நிலையில் மற்றும் உலகை பற்றி நமது மக்கள் அறிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும்.

முதற்கட்டமாக நமது கிராம மக்கள் ஐம்பதுபேருக்கு பயிற்சியளிக்கவுள்ளோம். புரட்சி என்றால் பேருந்தை கொளுத்துவது அல்ல நம்மை நாம் மாற்றி கொள்வது, நம் தன்மையை மாற்றி கொள்வதுதான் பெரிய புரட்சி. இந்த மாற்றத்திற்கு அனைவரும் தயாராக இருங்கள். இங்கு இருக்கும் பள்ளி குழந்தைகள் எல்லோரும் இந்த கோடை விடுமுறையில் குறைந்தது 3 தினங்களாவது நீங்கள் "நதிகளை மீட்போம்" இயக்கத்திற்கு தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டும். இதுவரை எந்த ஒரு இயக்கத்திற்கும் இல்லாத ஆதரவு நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் இயக்கத்திற்கு இருந்தது சுமார் 16 கோடி பேர் பங்கேற்றார்கள். இந்தியா முழுவதுமிருந்து "நதிகளை மீட்போம்" தன்னார்வத் தொண்டாற்ற மாதத்திற்கு 40 பேர் வருகிறார்கள், தன்னலமற்று பணி செய்ய வேண்டும் என்பது மட்டுமே அதற்கான தகுதி. நல்ல வேலைகளிலிருந்தவர்கள் அதை துறந்து விட்டு வந்திருக்கிறார்கள். சிலர் படிப்பை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். முதலில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பணி துவங்கவுள்ளது. அங்குள்ள சந்திரபாகா நதி மற்றும் பீமா நதி இரண்டிலும் வரும் மார்ச் மாதத்தில் பணி துவங்க உள்ளது. தமிழகத்திலும் நாம் இதைப்போல் செய்ய வேண்டும்.

மருத்துவமனைகள் இருக்கக்கூடாது என்று கூறிய சத்குரு

நன்றியுரை வழங்கிய திரு. பொன்னுசாமி அவர்கள் குறிப்பிடுகையில், "சத்குருவிடம் ஒருமுறை ஈஷா மருத்துவமனை அமைத்து தரும்படி கேட்டிருந்தோம் அவரும் அதை ஏற்று எங்களுக்கு உதவினார். அந்த திறப்பு விழாவில் பேசிய அனைவரும் இந்த மருத்துவமனை பெரிதாக வேண்டும் எல்லா உபகரணங்களும் வைத்து இதை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்றார்கள். அப்போது அதற்கு பதிலளித்த சத்குரு அவர்கள் இந்த மருத்துவமனை இங்கிருந்து மாற்ற வேண்டும் சிறிது காலத்திற்கு  பின்னர் இங்கு மருத்துவமனை இருக்கக்கூடாது. எல்லோரும் ஆரோக்கியமாகிவிட்டால் மருத்துவமனை தேவையில்லை என்றார். நானும் யோக பயிற்சி செய்கிறேன் இப்பொழுது ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இதுபோல் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி". என்றார்.

விழாவின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1