உலக யோகா தினம் வரும்வாரம் ஜூன் 21ல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈஷா வித்யா மாணவர்கள்கள் கடந்த கோடை விடுமுறையில் பொதுமக்களுக்கு தாங்களே வழங்கிய உப-யோகா வகுப்புகளில் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக இருந்த நிகழ்வுகள் குறித்து இங்கே உங்களுடன் சில வார்த்தைகள்!

கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பியுள்ளனர். சரி... கோடை விடுமுறையில் அவர்கள் அதிகபட்சம் என்னவெல்லாம் செய்திருப்பர் என்று சிந்தித்துப் பார்த்தோமானால், விளையாட்டு, ஆட்டம்-பாட்டம், சுற்றுலா, கோடைகாலப் பயிற்சி வகுப்புகள் என ஒரு பட்டியல் வரும்! ஆனால்... ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் செய்தவை இந்த பட்டியலில் யூகிக்க முடியாதது!

பொதுமக்களிடம் எப்படி பேசுவது, எப்படி நடந்துகொள்வது மற்றும் தங்களை தாங்களே எப்படி சமநிலையில் வைத்திருப்பது போன்ற பல்வேறு அனுபவப் பாடங்களை இந்த ஐந்து நாட்கள் கற்றுத்தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

ஈஷா வித்யா பள்ளிகள் தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு, நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் மேட்டூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்தப் பள்ளி மாணவர்கள், கோடை விடுமுறையை ஈஷாவில் பயனுள்ள வகையில் செலவழித்துள்ளனர். கடந்த கோடை விடுமுறையில் இம்மாணவர்கள் சுமார் 160 க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்தில் உப-யோகா ஆசிரியர்களாக மாறி பல்லாயிரம் மக்களுக்கு உப-யோகாவைக் கொண்டு சேர்த்துள்ளனர்.

உப-யோகா என்பது மிக எளிமையான 10 பயிற்சிகளின் தொகுப்பு. இதைச் செய்வதன் மூலம் உங்கள் மூட்டுக்கள், தசைகள், சக்திநிலை ஆகியவை இயக்கப்படுகிறது.

5 நாட்களில் நிகழ்ந்த அற்புதம்!

சுமார் 18,400க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக உப-யோகாவைக் கொண்டு சேர்ப்பதற்காக இம்மாணவர்கள் 5 நாட்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் தினமும் காலை 4:30 மணிக்கு படுக்கையிலிருந்து எழும் இவர்கள் குருபூஜையுடன் தங்கள் யோகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு, காலை 9:30 மணிமுதல் மாலை 4:30 மணி வரை உப-யோகா வகுப்புகளை வழங்கினர். 45 நிமிடங்களுக்கு ஒரு உப-யோகா வகுப்பு என, இருவேறு இடங்களில் தொடர்ச்சியாக வகுப்புகளை வழங்கிய இவர்கள், வகுப்புகள் முடிந்த பின்னர் மாலையில் கேளிக்கை மற்றும் விளையாட்டுகளில் மூழ்கிக் களித்தனர். பின்னர் தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியில் தியானம் மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டினர். தீர்த்தகுண்டம் மற்றும் ஆதியோகி திருமுகம் மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் போன்ற இடங்களுக்குச் சென்று மகிழ்ந்திருந்த மாணவர்கள், மாலையில் தரிசன நேரத்தில் கலந்துகொண்ட பின், இரவு உணவை உண்டு, அதன்பின்னும் உள்-அரங்க விளையாட்டுகளைத் தூங்கும் வரை தொடர்ந்தபடி குதூகலித்திருந்தனர்.

பல்வேறு குழுக்களாக பிரிந்த மாணவர்களில் சில குழுக்களில் இருந்தவர்கள் ஆட்களை வகுப்பில் சேர்க்கும் என்ரோல்மெண்ட் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மையத்திற்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு உப-யோகா பற்றியும், அவற்றை தொடர்ந்து பயின்று வருவதால் விளையும் நன்மைகள் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைப்பார்கள். ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தாமல் விருப்பத்துடன் வருபவர்களை மட்டுமே அவர்கள் வகுப்பில் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அனைவருக்கும் நமஸ்காரம் செய்து வகுப்பை துவங்கிய மாணவர்கள், சத்குருவின் வீடியோ மூலம் உப-யோகா வகுப்பினை அனைவருக்கும் முன்னின்று வழங்கினர்.

மாணவர்கள் அடைந்த புதிய பரிணாமம்!

பொதுவாகப் பள்ளி மாணவர்கள் குறும்புத்தனமும், விளையாட்டு குணமும் கொண்டவர்களாய் இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த வகுப்புகளின் துவக்கத்தில் வழக்கமான மாணவர்களாய் இருந்த இவர்கள் ஐந்து நாட்கள் நிறைவிற்குப்பிறகு ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்! புதிய மனிதர்களுடன் பேசும் வாய்ப்பு, பெரிய மக்கள் கூட்டத்தில் முன்னின்று வகுப்பினை வழிநடத்தும் திறம் ஆகியவை அவர்களுக்கு இந்த 5 நாட்களில் வாய்க்கப்பெற்றன. முதல் இரண்டு நாட்களில் அவர்கள் பெரிய கூட்டத்தை சமாளிப்பதில் சற்று சிரமம் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் தங்கள் கூச்ச சுபாவத்திலிருந்து வெளிவந்தவர்களாய் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுடன் வந்திருந்த ஆசிரியர்களுக்கே இதைப் பார்ப்பதற்கு பெரும் வியப்பாக இருந்தது.

இறுதி நாளில் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை குழுவாக இருந்து பகிர்ந்துகொண்டனர். பத்தாம் வகுப்பு மாணவிகளில் ஒரு மாணவி வந்து, 2வது நாளில் தான் எதிர்கொண்ட ஒரு அனுபவம் குறித்து விவரித்தார்... என்ரோல்மெண்ட் செய்யும் குழுவினர் ½ மணி நேரத்திற்கு வகுப்பில் இருக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்ட காரணத்தால் சுமார் 100 பேர் வகுப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே பாதியில் எழுந்து செல்லத் துவங்கிய அனுபவத்தைக் கூறினாள். 5 முதல் 10 நிமிடங்களுக்குள் வகுப்பு முடிந்துவிடும் என அவர்கள் தவறுதலாகப் புரிந்துகொண்டிருந்தனர். அந்த மாணவி அவர்களை சமாதானப்படுத்தி அமர வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை! தங்களுக்கு நேரமில்லை எனக் கூறி அவர்கள் கலைந்து செல்ல, அந்த மாணவி மனமுடைந்து அழத்துவங்கினாள். அதன்பின் அவளது ஆசிரியர்கள் வந்து இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவளுக்கு வழிகாட்டினர். அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் அம்மாணவி மனதளவில் பக்குவமடைந்தவளாய் உற்சாகத்துடன் வகுப்புகளை வழிநடத்தத் துவங்கினாள்.

முதல் 2 நாட்களில் வகுப்புகளை நடத்துவதற்கு சற்று கூச்சமும், தயக்கமும் கொண்டிருந்த மாணவர்கள் அடுத்தடுத்த நாட்களில் பக்குவமடைந்ததை காணமுடிந்தது.

விழுப்புரம் மற்றும் கடலூர் பள்ளி மாணவர்கள் ஈஷாவில் அமைந்துள்ள ‘கல்யாணி’ எனும் நீச்சல் குளத்தினை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. கிராமப்புற மாணவர்களான அவர்களுக்கு அதுபோன்ற அழகுணர்ச்சி மிக்க நீச்சல் குளம் வியப்பையும் குதூகலத்தையும் தந்தது. அங்கே ஆடிப்பாடி நீச்சலடித்து மகிழ்ந்த அவர்களின் தயக்கங்கள் அனைத்தும் காணாமல் போனது! நீச்சல் குளத்திற்குச் சென்று வந்தபின்னர் அவர்களிடம் சிறப்பானதொரு மாற்றத்தைக் காணமுடிந்தது. ஈஷா வித்யா ஆசிரியர்களில் ஒருவர் மாணவர்களின் இந்த மாற்றத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீருடன் சத்குருவிற்கு நன்றி கூறினார்.

பல்வேறு மாணவர்கள் இந்த ஐந்து நாட்கள் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டபோது, அவர்களிடமிருந்த தடைகள் யாவும் தகர்ந்துவிட்டதாகவும், இந்த ஐந்துநாட்களில் அவர்கள் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளதாகவும் ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தனர். பொதுமக்களிடம் எப்படி பேசுவது, எப்படி நடந்துகொள்வது மற்றும் தங்களை தாங்களே எப்படி சமநிலையில் வைத்திருப்பது போன்ற பல்வேறு அனுபவப் பாடங்களை இந்த ஐந்து நாட்கள் கற்றுத்தந்ததாக அவர்கள் தெரிவித்தனர். நடுநிலைப் பள்ளி அளவில் படிக்கும் மாணவர்கள் கூட தங்களது குறும்புத்தனங்களை ஒருபுறம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, பக்குவமடைந்தவர்களாய் மாறியிருந்தது ஆச்சரியம்தான்! நாம் அந்த மாணவர்களையெல்லாம் காணும்போது, வருங்கால சமூகத்திற்கு சிறந்த தலைவர்கள் உருவாகியுள்ளதை அங்கே உணரமுடிந்தது.

ஆதியோகியின் முன்னிலையில் நிகழவிருக்கும் 3வது உலக யோகா தின கொண்டாட்டங்களுக்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

ஜூன் 21, காலை 7 மணிக்கு
ஈஷா யோக மையம், கோவை.

சத்குருவுடன் நேரில் பங்கேற்க அல்லது நேரடி இணைய ஒளிபரப்பைக் காண...
AnandaAlai.com/YogaDay

சிறப்பு விருந்தினர்:
Dr.மகேஷ் ஷர்மா
மாண்புமிகு மத்திய அமைச்சர்
சுற்றுலா மற்றும் கலாச்சார துறை

முதன்மை விருந்தினர்:
மாண்புமிகு தமிழக சிறப்பு ஆளுநர்
வித்யாசாகர் ராவ் அவர்கள்

இணையம் மூலமாக இலவச உப-யோகா கற்க: AnandaAlai.com/YogaDay