தற்போது கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித்திறக்கப்பட்டு வருகின்றன. உற்சாகமாக குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்வதை பார்க்கமுடிகிறது. இந்த கோடை விடுமுறையை சிறப்பாய் பயன்படுத்தி தங்கள் உடலையும் உள்ளத்தையும் புதியதொரு சாத்தியம் நோக்கிக் கொண்டு செல்லும் வாய்ப்பினை ஈஷாவில் சில நூறு குழந்தைகள் பெற்றனர்.

ஈஷாவில் குழந்தைகளுக்கான இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து நிகழ்ந்தன. மொத்தம் நிகழ்ந்த 5 நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சராசரியாக 65 குழந்தைகள் வரை பங்கேற்றனர். சுமார் 25 தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் தங்கள் பங்களிப்பை வழங்கி, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற துணை புரிந்தனர். வெளியூர் மையங்களில் குழந்தைகளுக்கான 8 நாட்கள் ஈஷா யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகள் இதில் கலந்துகொண்டனர்.

சூரிய நமஸ்காரம், எளிமையான பிராணாயாமம், மற்றும் 'ஆம்' மந்திர உச்சாடனம் போன்ற எளிமையான யோகப்பயிற்சிகளை குழந்தைகள் கற்றுக்கொண்டனர். இந்தப் பயிற்சிகள் குழந்தைகளின் உடல், மனம் மற்றும் உறுதித்தன்மை, கவனம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வதில் உறுதுணையாய் இருக்கும். இந்நிகழ்ச்சி குழந்தைகளின் தகுதியையும் திறமையையும் விரிவடையச் செய்வதால், அவர்கள் தங்கள் வாழ்வில் செய்ய விரும்பும் செயல்களுக்கு பக்கபலமாய் அமையும்.

உப-யோகா பயிற்சிகளைக் கற்றுக்கொண்டதோடு, இயற்கையோடு தொடர்பில் இருக்கும் வகையிலான அற்புத தருணங்களை குழந்தைகள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பலவிதமான பயிற்சிகளும் அனுபவங்களும் குழந்தைகள் தங்களைச் சுற்றியிருக்கும் ஒவ்வொன்றையும் ஒரு உயிராக, மதிப்புமிக்க ஒன்றாகப் பார்க்கும் பக்குவத்தை வழங்கியுள்ளன. குழந்தைகளுக்கு அனுபவப்பூர்வமாக வழங்கப்பட்ட இயற்கை சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகள், தாங்கள் இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறிய அங்கம் என்பதை உணர்த்தியுள்ளது என நிச்சயம் சொல்லலாம்!

இதில் பங்காற்றிய தன்னார்வத் தொண்டர்களுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு ஆழமான அனுபவமாக அமைந்தது. அவர்களில் பலர் தங்கள் அனுபவத்தை சொல்லும்போது, தங்கள் மனதில் இருந்த குப்பைகள் அகன்று எளிமையாக ஒரு குழந்தையைப்போல் உணர்ந்ததாக தெரிவித்தனர். குழந்தைகளுடன் இருப்பதும் அவர்களை கவனித்துக் கொள்ளும் ஒரு உற்சாகமிக்க அற்புத அனுபவமாகும். தங்கள் உள்நிலை வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் ஒரு அங்கமாக அடர்ந்த வனப்பகுதியில் மலையேற்றம் செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை குழந்தைகள் பெற்றனர். அதன்மூலம் அவர்கள் பல வகையான அரிய வனவிலங்குகள், செடி வகைகள், தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றை நேரடியாகக் கண்டு மகிழ்ந்தனர். வனவிலங்குகளை நேரடியாகக் கண்ட அனுபவம் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அனைத்திற்கும் மேலாக மரங்களுடன் தொடர்பில் இருப்பது எப்படி என்பதையும், பறவைகளை கவனிப்பது மற்றும் பல்லுயிர்களையும் கவனிப்பது போன்ற அம்சங்களையும் அவர்கள் அனுபவப்பூர்வமாக கற்றுக் கொண்டனர். மேலும், பிரபஞ்சத்தின் அடிப்படை கூறுகளான நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களுடன் தொடர்பில் இருப்பது குறித்து அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்வதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில் அந்த குழந்தைகளின் முகத்தில் ஆனந்தத்துடன் கூடிய ஒரு பிரகாசமும், கூடவே ஆழமான அமைதியும் தெரிந்தது. பெரும்பாலான குழந்தைகளுக்கு நிகழ்ச்சியின் இறுதிநாளில் ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கு மனமே இல்லை என்பதுதான் உண்மை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.