கோடையில் கொளுத்தும் வெயிலிலும் உடலை கூல்'ஆக வைத்துக்கொள்வதற்கு சில கூல் டிப்ஸ் தருகிறார் ஈஷா ஆரோக்யா மருத்துவர் டாக்டர் சாட்சி சுரேந்தர், படித்துப் பலன்பெறுங்கள்!

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

வீ ஆர் ஆல் சோலார் பவர்ட்!

“நாம் அனைவரும் சூரிய சக்தியினாலேயே இயங்குகிறோம். உயிரைக் கொண்டாடும் இந்தக் கலாச்சாரம், உயிருக்கு மூலமான சூரிய சக்தியையும் வழிபட்டுக் கொண்டாடுகிறது. அதனால்தான் சூரியன் பூமிக்கு மிக அருகில், மிகத் தீவிரமாய் நிகழும் சித்திரை மாதத்தை புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இந்தக் காலம் சிறிது அசௌகரியமாக இருந்தாலும், இதனை ஒரு புதிய தொடக்கமாகக் காண்கிறோம்!” இது சத்குருநாதர் தன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியாய் அருளியது.

இளநீரை விடவா, அந்தக் குளிர்பானம் வெயில் சூட்டைத் தணிக்கப் போகிறது? நிச்சயம் இல்லை.

இந்தச் சிறிய அசௌகரியத்தை, நம் உடல், மனம் உயிருக்கு மிக சௌகரியமாக மாற்றிக் கொள்ளவே ஊர்த் திருவிழா, தேரோட்டம் எனப் பல வழிமுறைகளைக் கொண்டாட்டமாய் பயன்படுத்துகிறோம். படையல் இட்டு உண்ணப்படும் பச்சரிசி மாவிளக்கு தொடங்கி அருந்தும் நீர் மோர், பானகம் வரை உடலுக்குக் குளிர்ச்சியூட்டி வெப்பம் தணிக்கும் அறிவியலே! அதேபோல், சென்ற வருடத்தின் கசப்புகளையும், பிணக்குகளையும் மறந்து, ஊர் கூடி தேர் இழுக்கும் வைபவம் அனைத்து மனங்களுக்கும் உற்சாகம் ஊட்டும் மா மருந்தே! தன் குடும்பத்தின் முன்னோர்களுக்கு நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் குலதெய்வ வழிபாடுகள் உயிருக்குச் செறிவே!

“அண்டமும் பிண்டமும் ஒன்றே” என உணர்ந்து, அண்டத்தில் ஏற்படும் பருவ மாற்றத்திற்கேற்ப பிண்டத்தை (உடல்-மன-உயிர் கூட்டமைப்பு) தயார் செய்யும் முறைகளை வாழ்க்கை முறையாகவே வழங்கியதுதான் நம் முன்னோர் நமக்கு வழங்கிய கொடை.

ஆனால், நமக்குக் கை மாற்றப்பட்ட பொக்கிஷங்களில் சிலவற்றை நாம் தொலைத்தோம், பலவற்றைக் களவு கொடுத்தோம், எஞ்சியிருக்கும் சொச்சத்தையும் தங்கமென உணராமல், தகரமாய் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

கோடைக்கு வேண்டாம் கோலா!

வெகு நாட்களுக்குப் பிறகு எங்கள் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். நல்ல வெயில். என் தந்தையின் தென்னந்தோப்பில் பணிபுரியும் துரைராசு அண்ணன் ஓடி வந்து, “டாக்டர் தம்பி, வெயில் பொளக்குதே... மிராண்டா வாங்கியாறேன், குடிக்கிறீயளா?” என வாஞ்சையுடன் வினவினார். அவருடைய அன்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால், அங்கு இருந்த தென்னந்தோப்பு இளநீரை விடவா, அந்தக் குளிர்பானம் வெயில் சூட்டைத் தணிக்கப் போகிறது? நிச்சயம் இல்லை.

உடல் சூட்டை அனாயாசமாய்த் தணிக்கும் திறன் இளநீர், நுங்கு, வெண்பூசணி, தர்பூசணி, திராட்சை, மாதுளைப் பழச்சாறு, நீர் மோர், பானகம், பதநீர் போன்ற நம் நாட்டுப் பதார்த்தங்களுக்கு உண்டு. ஆனால், ஒன்றுக்கும் உதவாத பன்னாட்டுக் கம்பெனிகளின் சர்க்கரைத் தண்ணீர்தான் கோடைக்குச் சிறந்தது என நம் கிராம மக்களின் மூளை வரை செலுத்தப்பட்ட அந்த நஞ்சுதான் வேதனை அளிக்கிறது.

இரண்டு கோடைகளுக்கு முன் இதே கருத்தை வலியுறுத்திதான் காட்டுப்பூ வாசம் மூலம் உங்களுடன் தொடர்பு கொண்டேன். இன்னும் எத்தனை கோடைகளுக்கு இந்தப் பாடல் பாடப்படுமோ அறியேன்! தாமிரபரணி வற்றும் வரையிலா? நிலத்தடி நீர் காயும் வரையிலா? பத்தில் 4 என இருக்கும் சர்க்கரை நோயாளர் கணக்கு பத்துக்கு 10 என உயரும் வரையிலா? நான் அறியேன்!!

விழித்துக் கொள்வோரே பிழைத்துக் கொள்வார்! ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும், குறிப்பாக கோடைக் காலத்தில் காலைச் சுற்றும் புட்டிப் பாம்புகளிடம் இருந்து நீங்களும் பிழைத்து, நாட்டுக்கும் உயிர் கொடுங்கள்.

குளிர்ச்சியூட்டும் மூலிகைகள்!

இயல்பாகவே, பூமியின் அட்சரேகை அமைப்பில் நம் தமிழகம் வெப்பம் கூடுதலான பகுதியின் கீழ் வருகிறது (Tropical Zone). குறிப்பாக கோடையில் உள்/வெளி வெப்பம் அதிகமாதலால், தோல், கண், சிறுநீர்பாதை, மலவாய் பகுதி, மேல் வயிறு, பெண்களுக்கு கர்ப்பப்பை பகுதிகளில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்நோய்கள் வராமல் தடுக்க, பல நூறு தாவரங்கள் சித்த மருத்துவ நூல்களில் அடையாளம் காட்டப்படுகின்றன. அவற்றில், இன்றைய தேதியில் எளிதில் கிடைக்கக் கூடியதும், உடல் சூட்டை தணித்து அதிக பலன் அளிக்கக் கூடியவையுமான சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

நன்னாரி/வெட்டிவேர்

உடல் சூடு தணித்து, சிறுநீர் பாதை எரிச்சல், கடுகடுப்பை குறைக்கும். வேர்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.

குமரி (சோற்றுக் கற்றாழை)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கர்ப்பப்பை நோய்கள் வராமல் காப்பதிலும், மாதவிடாய் கோளாறுகளுக்கும் ஆகச்சிறந்த உணவு/ மருந்து.

வில்வம் (இலை/பழம்)

குளிர்ச்சி உண்டாக்கி வயிறு தொடர்பான எரிச்சல், புண், செரியாமை, கட்டுப்பட உதவும்.

மயானவாசியான சிவன் உஷ்ணக்காரனாய் விளங்குவதால் குளிர்ச்சி தன்மையுடைய ‘வில்வம்‘ சிவனுக்கு ஏற்றது எனவும், பாற்கடல் நீரில் பள்ளிகொள்ளும் பெருமாளின் கபத்தை விலக்கும் சூடுதன்மை உடையதாலேயே, மாலனுக்கு ‘துளசி’ ஏற்றது எனவும் வழங்கப்படுகிறது. இது இறை சித்தாந்தமும், தமிழ் மருத்துவ கோட்பாடும் பிணைந்துள்ளதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ரோஜாப்பூ

உடல் குளிர்ச்சியாகும்; இரத்தக்கொதிப்பு குறையும்.

துத்தி

மூல நோய்களுக்கு நிவாரணம்.

பொன்னாங்கண்ணி

சூட்டினால் ஏற்படும் கண் கட்டி வராமல் தடுக்கும்.

இவை தவிர நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், வெள்ளரி போன்றவை தினசரி உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.

குளிர் தேசங்களில் பிறந்த ஆங்கில முறைகளுக்கும் பாரம்பரிய மருத்துவத்திற்கும் ஓர் முக்கிய வேறுபாடு உண்டு. அடிப்படைத் தத்துவத்தில் ‘சூடு, குளிர்ச்சி’ எனும் கோட்பாடு ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. ஆனால், இவை தமிழ் முறையின் முக்கிய ஆதாரம். மனித உடலையும் சரி, உண்ணும் உணவையும் சரி “இது சூடு, இது குளிர்ச்சி” என பிரித்து அறியும் பாங்கு சித்த, ஆயுர்வேத முறைகளில் உண்டு.

நோய்த் தடுப்பு மற்றும் வருமுன் காக்கும் நோக்கத்தில் சமுதாயம் பயணிக்க எத்தனிக்கும் போது இந்திய மருத்துவ முறைகளின் இந்தக் கோட்பாடு பெருந்துணையாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆரோக்கியம் என்பது தென்றல் மாதிரி. அதன் இருப்பு மென்மையாகத்தான் இருக்கும். அதன் சுகத்தை அனுபவிக்கக்கூட ஒரு குறைந்தபட்ச நுண்ணுனர்வு வேண்டும். இல்லையெனில் தவற விடுவோம். நோய் என்பது புயல் மாதிரி. அதன் இருப்பும் தாக்கமும் தீவிரமாய் இருக்கும். விளைவுகளும் வேதனையைத் தரும். ஆங்கில மருத்துவம் என்பது பெரும்பாலும் புயலின் தாக்கத்தை சமாளிக்கும் யுக்தியே! தமிழர் மருத்துவமும், வாழ்வும் தென்றலில் இலயிக்க விடுக்கப்படும் அறைகூவல்!! உங்கள் கோடை தென்றலாய் அமையட்டும்!

குறிப்பு: மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் ஈஷா ஆரோக்கியாவில் சர்பத், டானிக், மாத்திரை வடிவில் கிடைக்கும். பாரம்பரிய எண்ணெய் குளியல் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

எண்ணெய் குளியல்...

வாரம் இருமுறை பரிந்துரைக்கப்படும் எண்ணெய் குளியல் தமிழர் வாழ்வியலில் ஆரோக்கியம் காக்கும் ஓர் இன்றியமையா அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது. இவ்வழக்கம் நம்மிடையே தற்கால அவசர வாழ்வில் சற்று சுனக்கம் அடைந்துவிட்டது. எனினும், இந்தக் கோடையை, வாய்ப்பாய் பயன்படுத்தி நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பலன்கள்:

  • உடல் சூடு தணியும்
  • உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்
  • நல்ல உறக்கம்
  • மெய், கண், செவி, நாசி, வாய் என புற உலகோடு நாம் தொடர்புகொள்ள உதவும் ஐம்புலன்களுக்கும் தெளிவு
  • தோல், கூந்தல் செழுமை
  • ஆயுள் விருத்தி

உகந்த நாட்கள்

  • ஆண்களுக்கு புதன் மற்றும் சனி
  • பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளி

உகந்த நேரம்

  • காலை 5 முதல் 7 மணிக்குள்

உகந்த எண்ணெய்

வெறும் நல்லெண்ணெய் அல்லது அதனுடன் பூண்டு, சிகப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சீரகம் உடையும் பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. ‘கபம்‘ சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம். மாறாக கபத்தன்மை உடையோர்க்கென பிரத்யேகமான மூலிகை தைலங்களை (பீனிச தைலம்) தாராளமாய் பயன்படுத்தலாம். இவை சைனஸ் தொந்தரவு குறைவதற்கு உதவிகரமாகக்கூட செயல்படுகின்றன.

எண்ணெய் வைக்கும் முறை:

தாங்குமளவு சூட்டில் தலை மற்றும் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து, செவி ஒன்றுக்கு மூன்று துளியும், நாசி ஒன்றுக்கு இரு துளியும் இட வேண்டும். காதில் நீர்/சீழ் வடியும் தன்மை இருப்போர்க்கு, இம்முறைக்கு மட்டும் மருத்துவ ஆலோசனை தேவை. உள்ளங்கால்களிலும் தேய்ப்பது அவசியம்.

10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை.

எண்ணெய் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை:

எண்ணெய் குளியல் நாளன்று உடல் இயக்கத்திற்கு நல்ல ஓய்வு அவசியம். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய அரிசி உணவுகளே அன்றைய தினத்திற்கு ஏற்றவை. மேலும் மாமிசம், மது, புகை, பகல் உறக்கம், உடற்புணர்வும் விலக்கப்பட வேண்டியவை.

ஈஷா ஆரோக்யா மருத்துவ மையங்கள்:

சென்னை (044) 42128847, 94425 90099
கோவை (0422) 4218852
சேலம் (0427) 2333232, 94425 48852
தொலைபேசியில் இலவச மருத்துவ ஆலோசனை பெற...
83000 55555