குழந்தைகள் என்றாலே கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்த உயிர்கள்தான்! நாமும் குழந்தைகளாக இருந்தபோது அப்படித்தான் இருந்தோம். ஆனால், வாழ்க்கையின் போக்கு நம்மில் பலரை தொங்கிப்போன முகங்களுக்குச் சொந்தக்காரராக்கிவிட்டது. கிராமப்புற குழந்தைகளுக்காக ஈஷா வழங்கி வரும் யோகா வகுப்புகள் அவர்களின் வாழ்வில் எந்தவிதத்தில் உறுதுணையாய் இருக்கும் என்பது பற்றி இங்கே சில வரிகள்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குழந்தைப் பருவத்திலேயே வாழ்க்கையைப் பற்றிய தெளிவும் நோக்கமும் புரிந்துவிட்டால், அதன்பிறகு துக்கம், மனச்சோர்வு போன்றவற்றிற்கு வாழ்வில் எப்போதும் இடம் இருக்காது. ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான கோடைகால யோகா நிகழ்ச்சி அதுபோன்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியே!

ஈஷா யோகா மையத்தைச் சுற்றியிருக்கும் மலையோர கிராமங்களில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்காக ஈஷா அறக்கட்டளை பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில் மேம்பாடு போன்றவற்றில் தொடர்ந்து பயிற்சிகளும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, திருவிழாக்கள் கொண்டாடுவது போன்ற சமுதாய வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கரகம், கும்மி, ஒயிலாட்டம், தப்பாட்டம், பின்னலாட்டம், கோலாட்டம், களியலாட்டம், நாட்டுப்புறபாடல்கள் - இதுபோன்ற கலைகள் அழிந்து போகாமல் இருக்க, அவர்கள் வாழ்க்கையில் ஏற்கனவே பின்னிப் பிணைந்திருந்த இக்கலைகள் மீண்டும் புத்துணர்வு பெற, வாழ்க்கையே ஒரு கொண்டாட்டமாக நடைபெறுவதற்காக இக்கலைகள் கிராம மக்களுக்கு கற்றுத்தரப் படுகின்றன.

ஈஷாவில் நடந்துவரும் கோடைகால யோகா நிகழ்ச்சி

7
3

ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புறக் குழந்தைகள், இந்தக் கோடைகாலத்தை பயனுள்ள வகையிலும் புத்துணர்வு பெறும் வகையிலும் செலவழிக்கும் வகையில், ஈஷா யோகா மையத்தில் எட்டு நாட்கள் யோகா மற்றும் புத்துணர்வு நிகழ்ச்சி தற்போது நிகழ்த்தப்பட்டு வருகிறது. தானிக்கண்டி, முட்டத்துவயல், செம்மேடு என ஈஷாவைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இதில் பங்கு பெற்று வருகின்றனர். காலையில் யோகா பயிற்சியுடன் துவங்கும் நிகழ்ச்சியில், குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாது, அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் சம்பந்தமாக தினசரி ஒரு தலைப்பில் குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு ஈஷா மையம் சார்பில் உணவும் வழங்கப்படுகிறது.

நிறைவு நாளன்று குழந்தைகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் ஆடல், பாடல் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் கலை விருந்தாய் அமைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குழந்தைகள், தங்கள் வாழ்க்கையை தெளிவுடனும் உத்வேகத்துடன் எதிர்கொள்ளும் வகையில் யோகப் பயிற்சியையும் வாழ்க்கை முறையையும் வழங்குகின்ற ஒரு முழுமையான நிகழ்ச்சியாக அமைகிறது. ஈஷா யோகா மையத்தில் ஈஷா யோகா ஆசிரியர்களால் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.