கீரை சாகுபடியில் ஒரு முன்னோடி இயற்கை விவசாயி

பல்வகை கீரை சாகுபடியை இயற்கை வழியில் செய்வது குறித்த விளக்கத்தை விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளிக்குழந்தைகளுக்கும் கற்பிக்கிறார் ஒரு இயற்கை விவசாயி. அடுத்த தலைமுறையை ஒரு ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்குவதற்கு துணைநிற்கும் அந்த மதிப்பிற்குரிய மனிதரின் நேர்காணலை இங்கே தொடர்ந்து படித்தறியலாம்…
keerai-saagupadiyil-oru-munnodi-iyarkai-vivasayi-isha-tamil-blog
 

"கீரை சாகுபடியிலதான் இயற்கை விவசாயத்த எளிமையாவும் வேகமாவும் கத்துக்கொடுக்க முடியும்” என மிக அழுத்தமாக கூறுகிறார் கோவையை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி தங்கவேல். 27 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வரும் அவர் கீரை சாகுபடியில் சிறப்பான அனுபவங்கள் உடையவர். தான் இயற்கை விவசாயம் செய்வதோடு மட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கும் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கும் இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள அத்தப்பகவுண்டன்புதூரில் இருக்கும் அவரது தோட்டத்துக்கு ஒரு மாலை வேளை ஒன்றில் சென்று இருந்தோம். தோட்டத்துக்கு அருகில் கூரை வேய்ந்த 2 வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீட்டில் உள்ளே நுழைந்தோம். அங்கு ஐ.டி. ஊழியர்களுடன் தரையில் அமர்ந்து கொண்டு இயற்கை விவசாயம் தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருந்தார் இயற்கை விவசாயி தங்கவேல். அருகில் இருந்த சுவரில் நம்மாழ்வாரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு, அதன் கீழ் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. அதை கவனித்தவாறே தங்கவேலிடம் நம்மை அறிமுகப்படுத்தி கொண்டோம்.

கலந்துரையாடலை சிறிது நேரத்தில் முடித்துக்கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். “சின்ன வயசுல இருந்தே அப்பா கூட சேர்ந்து விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தேன். 1991-ல நானே முழுசா விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன். எங்க அப்பா ரசாயன விவசாயம் பண்ணாரு. ஆனா, நான் தொடக்கத்துல இருந்தே இயற்கை விவசாயம்தான் பண்ணிக்கிட்டு வர்றேன். நம்மாழ்வார் ஐயாவோட கருத்துக்களை நிறைய வாசிச்சு இருக்கேன். அவரு பேச்சுக்களையும் நிறைய கேட்டுருக்கேன். அதுதான் நான் தொடர்ந்து இயற்கை விவசாயம் பண்றதுக்கு உந்துதலா இருந்துச்சு.

அதேபோல, 2008-ல சுபாஷ் பாலேக்கர் ஐயாவோட ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். அந்த பயிற்சி வகுப்பு என்னோட விவசாய முறைய பெரியளவுல மாத்துச்சுனு சொல்லலாம். அவரோட வழிமுறைகள் எல்லாம் ரொம்பவும் எளிமையா செலவு குறைவா பண்ற மாதிரி இருக்கு. ரிசல்ட்டும் நல்லா இருக்கு. நான் இப்போவரைக்கும் அவரோட வழிமுறைகளதான் பின்பற்றிக்கிட்டு இருக்கேன்.

சக மனிசங்களுக்கு விஷமில்லாத உணவு கொடுக்கணும்ங்கிற எண்ணம்தான் முதன்மையா இருக்கும். நீங்க தரமான பொருட்கள் உற்பத்தி பண்ணா லாபம் தானா கிடைக்கும். என்னை எடுத்துக்கோங்க. லாபம் இல்லாமலா 27 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்?” என்று மனதில் இருப்பதை பளிச்சென்று கூறி முடித்தார்.

27 வருஷமா நான் இயற்கை விவசாயம் பண்றது மட்டுமில்லாம நிறைய பேருக்கு சொல்லி கொடுத்துக்கிட்டும் இருக்கேன். கீரை சாகுபடியிலதான் இயற்கை விவசாயத்த எளிமையாவும் வேகமாவும் கத்துக்கொடுக்க முடியும். அதுனால, கீரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

கோயம்புத்தூர்ல இருக்குற அரசு பள்ளிகளுக்கு போய் கீரை வளர்க்குறது எப்படினு குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஈஷா விவசாய இயக்கம் மூலமாவும் கீரை சாகுபடி பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறைக்கு இயற்கை விவசாயத்தை எடுத்துட்டு போனுங்குறதுல நான் உறுதியா இருக்கேன். அதுனால என்னோட தோட்டத்தை பாத்துக்குற முழு பொறுப்பையும் பிரபாகரிடம் ஒப்படைச்சுட்டேன்” என்று பிரபாகரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

சுறுசுறுப்பான இளைஞராக காட்சியளித்த பிரபாகர், தங்கவேலை போன்றே கீரை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர். அவர் கீரை சாகுபடி தொடர்பாக ஏராளமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“தமிழகத்துல மொத்தம் 40 வகையான கீரைகள விளைவிக்க முடியும். அதுல 27 வகையான கீரைகள நாங்க விளைவிச்சுக்கிட்டு இருக்கோம். ஏராளமான சத்துக்கள் நிறைஞ்ச கீரைகளை சாப்பாட்டுல அதிகமா சேத்துக்கணும்னு டாக்டர்ஸ் சொல்லிக்கிட்டே இருக்காங்க. அது உங்களுக்கு தெரியும். ஆனா, கீரைய ஆய்ஞ்சு சமைக்கிறதுக்கு கொஞ்சம் நேரமாகும்னு மக்கள் சோம்பேறித்தனம் பட்டுக்கிறாங்க. உடம்ப ஆரோக்கியமா வைச்சுக்கணும்னா அந்த குணத்தை கொஞ்சம் மாத்திக்கணும். கீரைகள அதிகமா சாப்பிடணும்.

இப்போ கண் பிரச்சனைக்காக நிறைய பேரு சின்ன வயசுலயே கண்ணாடி போட்டுக்குறாங்க. இந்த நிலைமையை நாம குறைக்கணும். அதுக்கு கீரையோட அவசியத்தை மக்களுக்கு புரிய வைக்கணும். அந்த நோக்கத்துலயும் நாங்க கீரை சாகுபடி பண்ணிக்கிட்டு வர்றோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “நாங்க இப்போ மொத்தம் 2 ஏக்கர்ல கீரை போட்டுருக்கோம். பொதுவா கீரைகள, அறுவடை காலத்த வைச்சு மூணு வகையா பிரிக்கலாம். அந்த கீரை வகைகள தனித்தனியா பிரிச்சு பயிர் செய்யணும்.

முதல் வகை:

முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, போன்ற கீரைகள் முதல் வகை. அந்த கீரைங்க ஒரு மாதத்தில் வளர்ந்துரும். அந்த கீரைகள அஞ்சாறு நாள்ல பறிச்சுட்டு மறுபடியும் விதை தூவிறலாம்.

2-வது வகை:

அரைக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக்கீரை, சுக்கான்கீரை, புளிச்சக்கீரை, கொடிப்பசலைக்கீரை, சீலோன்பசலைக் கீரை, மொடக்கத்தான், கொத்தமல்லி போன்ற கீரைகள் இரண்டாவது வகை. இந்த கீரைகள விதைச்ச ஒரு மாசத்துல இருந்து அஞ்சாறு மாசம் வரைக்கும் பறிக்கலாம்.

3-வது வகை:

முருங்கை, அகத்தி, புதினா, கருவேப்பிலை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, வல்லாரை போன்ற கீரைகள் 3-வது வகை. இந்த கீரைங்க ஒரு வருஷத்துக்கு மேல பலன் தரும். இந்த வகையில் சாகுபடி பண்ணா, வருஷம் பூரா கீரை சாகுபடி பண்ண முடியும்” என்று விரிவாக பேசினார் பிரபாகர்.

இதனிடையே, ‘ஐயா, கீரை சாகுபடியில லாபம் பார்க்க முடியுமா? என தங்கவேலிடம் கேட்டதற்கு, “தம்பி, நீங்க முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்கணும். என்னை பொறுத்தவரைக்கும் இயற்கை விவசாயம்ங்குறது ஒரு தொழில் இல்ல, அது ஒரு கலாச்சாரம். இந்த கலாச்சாரத்துல பணம் இரண்டாம்பட்சம்தான். சக மனிசங்களுக்கு விஷமில்லாத உணவு கொடுக்கணும்ங்கிற எண்ணம்தான் முதன்மையா இருக்கும். நீங்க தரமான பொருட்கள் உற்பத்தி பண்ணா லாபம் தானா கிடைக்கும். என்னை எடுத்துக்கோங்க. லாபம் இல்லாமலா 27 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்?” என்று மனதில் இருப்பதை பளிச்சென்று கூறி முடித்தார்.

கீரை பயிரிடும் முறை:

  • நிலத்தை 2 முறை நன்கு உழ வேண்டும். 2-வது உழவில் ஏக்கருக்கு 4 லோடு நாட்டு மாட்டு எருவை நிலத்தில் போட வேண்டும்.
  • 100 சதுர அடி வருவதுபோல் பாத்தி அமைக்க வேண்டும். ஸ்பிரிங்ளர் போடுவதாக இருந்தால் 5x20, 3x33 போன்ற அளவுகளில் அரை அடி உயர்த்தி மேட்டுப் பாத்தி போடலாம்.
  • வாய்க்கால் பாசனம் என்றால் மூன்று அடி அகலம், 10 அடி நீளம், முக்கால் அடி உயரம் வைத்து வரிசையா பாத்தி போடலாம். ஒரு பாத்திக்கும் இன்னொரு பாத்திக்கும் ஒரு மண்வெட்டி அளவு இடைவெளி விட வேண்டும். தோராயமாக 3 பாத்தியோட மொத்த அளவு 100 சதுர அடியாக இருக்கும்.
  • முதல் 100 சதுர அடியில் முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, செங்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரைகளின் விதைகளை, 20 கிராமில் இருந்து 200 கிராம் வரை தூவி விட வேண்டும். (மண்ணின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு ஊர்களில் இந்த அளவு சற்று மாறுபடும். அதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்)
  • 2-வது 100 சதுர அடியில் பாலக்கீரையின் விதைகளை 7 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டு 5 இன்ச்க்கு ஒரு குத்து வைக்க வேண்டும். அதேபோல், அடுத்தடுத்த வரிசைகளில் அதே அளவில் சுக்கான் கீரை விதைகளை 5 இன்ச்க்கு ஒரு குத்தும், புளிச்சக்கீரையை 3 இன்ச்க்கு ஒரு குத்தும் வைக்க வேண்டும்.
  • 3-வது 100 சதுர அடியில் புதினா, பொன்னாங்கண்ணி, சிவப்பு கீரை போன்ற கீரைகளை 14 கட்டு என்ற அளவில் எடுத்து 4 இன்ச்க்கு ஒன்று என அடர் நடவு முறையில் குத்து வைக்க வேண்டும். அதற்கு இடையே, கருவேப்பிலை, அகத்திக்கீரைகளை ஊடுப்பயிராக பயிரிடலாம்.
  • பிரண்டை, தூதுவளை, முடக்கத்தான், வல்லாரை, அகத்திக் கீரை போன்றவற்றை வரப்பு ஓரங்களில் நட்டால், அவை உயிர்வேலியாகவும் செயல்பட்டு பூச்சி தாக்குதல்களை குறைக்கும்.
  • ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கன ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் ஆகியவற்றை தேவைக்கேற்ப அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • கீரை நடும் முன்பாக உங்கள் ஊரில் எந்த வகையான கீரைகள் நன்கு வளர்கின்றன என்பதை தெரிந்து கொண்டு நடுவது அவசியம்.
divider

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

விதை விதைப்போம்...

நன்றி: தினத்தந்தி

குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1