கதை எழுதிய ஹோம் ஸ்கூல் மாணவர்கள்!
மாணவ பருவம்தான் ஒருவரின் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கிறது. அந்த வகையில் ஈஷா ஹோம்ஸ்கூல் மாணவர்களுக்கு பள்ளியே வாழ்க்கையாகி கற்றலை ஆனந்தமாக்குகிறது. ஹோம் ஸ்கூல் மாணவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி அதற்கு ஒரு சான்று! இங்கே அது பற்றி சில வார்த்தைகள்!
 
 

மாணவ பருவம்தான் ஒருவரின் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கிறது. அந்த வகையில் ஈஷா ஹோம்ஸ்கூல் மாணவர்களுக்கு பள்ளியே வாழ்க்கையாகி கற்றலை ஆனந்தமாக்குகிறது. ஹோம் ஸ்கூல் மாணவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி அதற்கு ஒரு சான்று! இங்கே அது பற்றி சில வார்த்தைகள்!

ஏப்ரல் 3ஆம் தேதி நண்பகல் பொழுதில் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தங்கள் பரிட்சைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் உற்சாகத்தில் இருக்க, அதோடு இன்னொரு உற்சாகமும் அவர்கள் மத்தியில் எகிறிக்கொண்டிருந்தது. ஆம்! அதற்கு 'ஹோம்க்ரவுன் டேல்ஸ்' (Homegrown Tales) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிதான் காரணம். மொத்தம் 28 சிறுகதைகள் அடங்கிய இந்த சிறுகதை தொகுப்பு நூலானது, ஹோம் ஸ்கூல் மாணவர்கள் 28 பேர்களால் ஒவ்வொருவரும் ஒரு கதை என எழுதியது குறிப்பிடத்தக்கது..

எழுத்தாளர்கள் சிந்திக்கும் நேரத்திற்கு இணையாக சுயத்தில் ஆழ்வது வேண்டும்

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள "தரானா" அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அற்புத வண்ணமிகு நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியாவின் முன்னணி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், நிர்வாக தலைவர்களின் பயிற்சிப் பட்டறைகளும் நிகழ்ந்தேறின.

அந்த 28 கதைகளையும் எழுதிய 28 எழுத்தாளர்களும் மேடைகளில் தோன்றி தங்கள் கதாபாத்திரங்களாக நடித்துக்காட்டி அசத்தினர். மாய நடனக்காரர்களாகவும், அச்சுறுத்தும் பேய்களாகவும், காயமடைந்த படை வீரராகவும், பாலிவுட் நடிகர் நடிகைகளாகவும் அவர்கள் உருமாறி தங்களின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை பிரதிபலித்துக் காட்டினர்; சுவாரஸ்ய திருப்பங்களும் பின்னல்களும் நிறைந்த தங்கள் கதையை வாசித்தும் காட்டி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர்.

மாணவி பாரதி செந்தில் குமார் (வயது 9), கிரீன் சியர் (Green Cheer) என்ற தனது கதையை எழுதிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது, எழுத்தாளர் ரோல்ட் தால் (Roald Dahl) அவர்களின் எழுத்தில் கவரப்பட்டு தனது எழுத்தார்வத்தை வளர்த்துக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் ஓவியா திருமாவளவன் (17), அமுல்யா சின்ட்டலரி (18), ஷ்ரேயா ஐயர் (16) ஆகியோர் தங்கள் எழுத்து அனுபவத்தை சுவைபட பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்களின் புத்தகத்தை வெளியிடும் புத்தக வெளியீட்டகமான குய்ல் கிளப்பின் (quill club) எழுத்தாளர் குழுவானது, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்காக கதை எழுதும் பயிற்சியை வழங்கி மாணவர்களுக்கு வழிகாட்டி உதவியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகம் விரைவில் அனைத்து புத்தக கடைகளிலும் ஃப்ளிப் கார்ட் இணையதளத்திலும் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை ஹோம் ஸ்கூல் மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சத்குரு நிகழ்ச்சியில் பேசுகையில், மனித வரலாற்றில் முதன்முதலாக வார்த்தை எழுதப்பட்ட நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவூட்டினார். ஆனால், எழுதப்படும் பதிவு காலப்போக்கில் அதன் உண்மைத் தன்மையிலிருந்து மாறி, மிகைப்படுத்தப்பட்டோ அல்லது திரித்தோ மாற்றப்படுவதற்கு வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், வார்த்தை உளவியல் விளையாட்டில் எழுத்தாளர் சிக்கிக்கொண்டு அதோடு கற்பனைத் திறனும் நீர்த்து போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். எழுத்தாளர்கள் சிந்திக்கும் நேரத்திற்கு இணையாக சுயத்தில் ஆழ்வது வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்திய சத்குரு அவர்கள், எழுத்தானது வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் மதிப்பு மிக்கதாக அமைய வேண்டும் என்பதை குறிப்பிட்டு, மாணவர்களை வாழ்த்தி விடைபெற்றார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1