கர்மயோகிகள் ஏன் தேவை?!

இன்றைய சமூகத்தில் நிலவும் பல்வேறு சீர்கேடுகளைப் பற்றி எடுத்துரைக்கும் நம்மாழ்வார் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் கர்மயோகிகளாக மாற வேண்டிய அவசியத்தையும் இங்கே கூறுகிறார்.
 

நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 21

இன்றைய சமூகத்தில் நிலவும் பல்வேறு சீர்கேடுகளைப் பற்றி எடுத்துரைக்கும் நம்மாழ்வார் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் கர்மயோகிகளாக மாற வேண்டிய அவசியத்தையும் இங்கே கூறுகிறார்.

நம்மாழ்வார்:

அரிசியை மட்டுமே மானிய விலையில் கொடுப்பதால் பசியை ஒழிக்க முடியும். ஆனால் சத்துணவு பற்றாக்குறையை ஒழிக்க முடியாது. கிராமப்புறத்தில் இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தாத காரணத்தால் மக்கள் நகரங்களை நோக்கி நகர்கிறார்கள். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பும், வருவாயும் குறைகிறது. ஆதலால் கிராமப்புற மக்கள் சத்துணவு பற்றாக்குறைக்கு உள்ளாகிறார்கள். அரசாங்கத்தின் வளர்ச்சித்திட்டம் அனைத்தும் மக்களை நிலத்தை விட்டு வெளியேற்றுவதாக இருக்கிறது.

ஏட்டுக் கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது.

இந்தியாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளில் 51% முதல் 74% (57 கோடி 17 இலட்சம் முதல் 82 கோடியே 88 லட்சம்) மக்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 47% மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவாலும், வளர்ச்சி குன்றியதாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களது உணவில் புரதம் பற்றாக்குறையாக உள்ளது என்று அந்த ஆய்வு சொல்கிறது.

இந்தியா சுதந்திரம் வாங்கும்போது இருந்த மக்கள் தொகை 30 கோடி. அன்றிருந்த மக்களைவிட 12 கோடி கூடுதலான மக்கள் இன்று வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள். அதாவது பசியோடு படுக்கைக்கு செல்கிறார்கள்.

உலகத்தின் பெரும் பணக்காரர்களில் 37 பேர் இந்தியாவில் உள்ளார்கள். ஆனால் சராசரி இந்தியனின் வருவாய் ஒரு நாளைக்கு இருபது ரூபாயாக உள்ளது என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

உலகத்தில் உள்ளவர் அனைவரும் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளார்கள். அந்த விளையாட்டுத் திடலை உருவாக்குவதில் பள்ளி செல்ல வேண்டிய பருவத்து பிஞ்சுகள் கல் சுமந்தார்கள், சாந்துசட்டி சுமந்தார்கள் என்று கூறி ஒரு எழுத்தாளர் நெருப்பை உமிழுகிறார்.

சத்குருவின் வழிகாட்டு நெறிகள் ஒரு ஏற்றத்தாழ்வற்ற கிராமப்புற புத்துணர்வு இயக்கத்தை வழிநடத்துகிறது.

ஏட்டுக் கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இதன் விளைவாக படித்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளப்படுகிறார்கள். கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் எம்.அனந்தகிருஷ்ணன் கீழ்கண்ட தகவல்களை தருகிறார்.

தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் 1 இலட்சத்தின் 93 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் 30 ஆயிரம் பேர் மட்டுமே வேலைக்கு அமருகிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகள் மட்டுமே ஆண்டுதோறும் 1 இலட்சத்தின் 50 ஆயிரம் வேலையற்றோரை உருவாக்குகிறது.

கல்வி என்பது மக்கள் வாழ்க்கையோடு ஒன்றியதாக இருந்தாலொழிய மக்களின் சிக்கல்களுக்கு தீர்வு தரமுடியாது. கிராமப்புறத்தின் இளைஞர்களை கிராம வாழ்க்கை சாராத தொழில்கள் கற்க வைப்பதால் வேலையில்லா பட்டாளம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பட்டணச்சேரிகளில் 86 இலட்சம் மக்கள் புழுவாக நெளிகிறார்கள். இளைஞர்கள் ஒரு மாபெரும் சக்தி. ஆனால் அவர்கள் வேலையில்லாத படையாக உரு எடுப்பது சமுதாயத்திற்கு பெரும் தீங்கு என்று ஐ.நா சபை பொதுச் செயலாளர் கூறுகிறார்.

இந்த உலகம் ஒரு கர்ம பூமி. அதாவது செயல் இல்லாமல் இந்த உலகம் கிடையாது. வெற்றியடையும் ஒவ்வொருவரும் கர்மயோகியாக இருந்தாக வேண்டும். அத்தகைய யோகிகளை உருவாக்குவதற்குத்தான் ஈஷா யோகா மையம் தொடர்ந்து பாடுபடுகிறது. சத்குருவின் வழிகாட்டு நெறிகள் ஒரு ஏற்றத்தாழ்வற்ற கிராமப்புற புத்துணர்வு இயக்கத்தை வழிநடத்துகிறது. சத்குருவின் திட்டங்களை சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல யாராலாவது முடிந்தால் அது இந்த தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

தொடர்ந்து விதைப்போம்...


nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1