கண்பார்வை இழந்தநிலையில் உள்நிலை பார்வைபெற்றவரின் மகத்தான அனுபவம்!
7 நாட்கள் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்று, ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சைபெற்ற ஒரு பார்வையற்ற மனிதரின் அனுபவங்களை யோகா வகுப்பெடுத்த ஆசிரியர் விவரிக்கும் இந்த பதிவு, படிப்பவரை நெகிழச் செய்கிறது! மேலும், ஒருவரின் உள்நிலையில் ஷாம்பவியால் நிகழும் மகத்தான மாற்றங்களை உணர்த்துவதாகவும் உள்ளது!
 
 

"ஒருசில கணங்கள் எனக்கு கண் பார்வையைத் தரக்கூடாதா!"

இடம்: அம்பாசமுத்திரம், ஈஷா யோகா வகுப்பு நடந்துகொண்டிருக்கும் அறை...

கிருஷ்ணகுமார், ஈஷா யோக வகுப்பு ஆசிரியர்

படின்-க்கு (Batin) 40 வயது இருக்கும். கவனத்தை ஈர்க்கும்படி இருந்தது, அவரது உருவம். ஈஷா யோக வகுப்பிற்குள் நுழைந்தவரை அவருடைய நண்பர் எங்கு அமரவேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருந்தார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக தன் பார்வைத் திறனை இழந்து கொண்டிருக்கிறார் என்றும், வகுப்பிற்கு வந்த சமயம் அவருடைய பார்வை முழுவதுமாக பறிபோயிருந்தது என்றும் பின்னர் அறிந்துகொண்டேன். யோக வகுப்பில் எப்படி பங்கேற்பார், யோகப் பயிற்சிகளை எப்படிக் கற்றுக்கொள்வார் என்று எனக்கு வருத்தமாய் இருந்தது.

Participantஏனெனில், வகுப்பில் பயிற்சிகளை எப்படிச் செய்வது என்று செய்து காண்பிக்கப்படும், திருத்தங்கள் செய்து காண்பிக்கப்படும். ஆனால், என்னை வியப்பில் ஆழ்த்தும் வகையில், கேட்பதை அவர் அசாத்தியமாய்ப் புரிந்துகொண்டார். அவர் செய்த யோகப் பயிற்சிகளில் கிட்டத்தட்ட எந்த திருத்தங்களும் செய்யத் தேவை இருக்கவில்லை. இத்தனை வருடங்கள் யோக வகுப்புகள் எடுத்துள்ள என் அனுபவத்தில், இது கிட்டத்தட்ட நடந்தே இராத ஒரு அனுபவம். நாங்கள் கொடுத்த குறிப்புகளைக் கேட்டபடி அவர் அத்தனை பயிற்சிகளையும் மிகச் சரியாக, சிரமமின்றி செய்தார்.வெள்ளிக்கிழமை வந்தது. வகுப்பில் தனக்கு நடந்த சிலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். பார்வை பறிபோகத் துவங்கியதும் தன் குடும்பம் தன்னை விலக்கி வைக்கத் துவங்கியதால், குடும்பத்திலிருந்து பிரிந்துவிட்டதாக வகுப்பில் பகிர்ந்து கொண்டார். தன் நண்பருடன் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்.

ஈஷா யோக வகுப்பிற்கு வருவதற்கு முன், தன் குடும்பத்தைப் பற்றிய அந்த ஒரு நினைப்பே தனக்குள் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும் என்றும், தன்னை அவர்கள் ஏமாற்றியது தனக்குள் ஆழமான வலி ஏற்படுத்தியது என்றும் சொன்னார். சில நேரங்களில் அவரது குடும்பத்தினர் அவரைச் சந்திக்க முயற்சித்த போதும், இவர் அவர்களுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக சொன்னார்.

ஆனால், அன்று... யோக வகுப்பில் சேர்ந்தபின், எதேச்சையாக அவரது குடும்ப உறுப்பினர் அவரைச் சந்திக்க வந்தபோது, அவருடன் கோபமில்லாமல் யதார்த்தமாகப் பேச முடிந்ததாக சொன்னார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் உணராத சந்தோஷத்தை அன்று, அக்கணத்தில் தான் உணர்ந்ததாகவும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். வகுப்பில் அவர் இதனைப் பகிர்ந்துகொண்ட கணத்தில், அங்கு மயான அமைதி நிலவியது. மனதைப் பிழியும் இந்தப் பகிர்வினால், வகுப்பிலிருந்த அனைவரும் நெக்குருகிப் போயினர்.

மீண்டும்... திங்கட்கிழமை பங்கேற்பாளர்களுக்கு முன் பகிர்ந்துகொள்ள வந்தார்... “என்னால், என் பார்வையின்மையை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், கடவுளே... ஒரு சில கணங்கள் நீ எனக்குக் கண் பார்வையைத் தரக்கூடாதா! அந்தச் சில கணங்களில் நான் என் குருவினைப் பார்க்கக் கூடாதா! குறைந்தது, அவரது புகைப்படத்தையாவது காண்பேனா!” என்று உருக்கமாய் வேண்டுகோள் விடுத்தார். எனக்கும், அங்கிருந்த பங்கேற்பாளர்கள் பலருக்கும் எங்கள் கண்களில் பொங்கி வந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குருவின் கருணை அளப்பரியது. நாம் நினைத்துப் பார்க்கும் எல்லைகளுக்குள் பொருந்தாதது. உடல், மன எல்லைகளைத் தாண்டி ஒரு குருவின் சாம்ராஜ்யம் அனைத்தையும் அரவணைத்துக் கொள்வது. அதில், ஆண், பெண், ஜாதி, மத, எல்லைகள், பேதங்கள் இல்லை. அத்தருணத்தில், முழுமையாக என் குருவின் தாழ் பணிந்து நின்றேன்!

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1