கனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்!

சிலர் நல்ல செய்தியைக் கூட தன் முகபாவனையாலும் சொல்லும் விதத்தினாலும் குதூகலமில்லாமல் செய்துவிடுவர்; சிலரோ கெட்ட செய்தியைக் கூட கேட்பவரை அதிகம் பாதிக்காதவண்ணம் கூறிச் செல்வர். சொல்லும் விதத்தில் இருக்கும் சூட்சுமம் பற்றி சத்குரு சொன்ன ஒரு குட்டிக் கதை இங்கே!
 
 

ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்தது. அவர் பல் எல்லாம் கொட்டிவிட்டதாகக் கனவு. ‘ஐயோ, இப்படியொரு கனவு வந்துவிட்டதே என்ன நடக்கப் போகிறதோ என்கிற பயத்தில், ஜோசியர்களை அழைத்தார்.

உன் குடும்பம், உன் மனைவி, பிள்ளைகள் எல்லோரது ஆயுளையும் கடந்து, நீ நீடுழி வாழ்வாய்

முதல் ஜோசியர், பழங்காலத்து ஓலைச்சுவடி எல்லாம் பார்த்தபின், “மன்னா, நீ நீடுழி வாழ்க. கணிப்புப்படி உன் சொந்தங்கள் எல்லாம் இறக்கப் போகின்றன. நீ இருக்கும்போதே உன் பந்தப் பாசங்கள் மரிக்கப் போகின்றன,” என்றார் வருத்தத்துடன்.

இதைக் கேட்ட ராஜனுக்கு கோபம் தலைக்கேறியது. “நான் இருக்கும்போதே என் குடும்பம் இறக்கும்,” என்கிறாயா முட்டாளே என்று கூறி சிறையில் அடைத்தார்.

அடுத்து வந்த பல ஜோசியர்களும், வெவ்வேறு வகைகளில் இதையே திரும்பச் சொல்ல, வரிசையாக அனைவரையும் சிறையில் அடைத்தார் ராஜா.

கடைசியாக, வந்த ஒரு ஜோசியர், “ராஜா... நீ நீடுழி வாழ்வாய். உன் குடும்பம், உன் மனைவி, பிள்ளைகள் எல்லோரது ஆயுளையும் கடந்து, நீ நீடுழி வாழ்வாய்,” என்றார். மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனான் ராஜன். பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்தான்.

அவர்கள் அனைவரும் சொல்லியது என்னவோ ஒரே விஷயத்தைத்தான். ஆனால், சொல்லிய விதத்தில் பலருக்கு கடும்தண்டனை, ஒருவருக்கு ராஜ உபசரணை.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1