காளான் வடை... ஒரு பாவ் பாஜி! - புதிய ரெசிபிகள்!
சுவைமிக்க இரண்டு ரெசிபிக்கள் உங்களுக்காக...
 
காளான் வடை... ஒரு பாவ் பாஜி! - புதிய ரெசிபிகள்!, Kalan vadai oru pav bhaji puthiya recipekal
 

ஈஷா ருசி

சுவைமிக்க இரண்டு ரெசிபிக்கள் உங்களுக்காக...

காளான் வடை

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 200 கிராம்
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவியது - 5 ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
பிரட் - 2 ஸ்லைஸ் (பிரட்டை உதிர்த்துக் கொள்ளவும்)
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய்- 250 மிலி

செய்முறை:

காளானை பொடிப்பொடியாக நறுக்கி, சோம்பு, தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, மைதா மாவு, கொத்தமல்லி நறுக்கியது, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொண்டு, கடைசியாக பிரட் தூள் சேர்த்து பிசைந்து வடைப்போல் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். காளானில் மிக அதிகமான புரதச் சத்து உள்ளதால் இது குழந்தைகளுக்கு உகந்த உணவு. சுவையிலும் இந்த வடை வித்தியாசமாக இருக்கும். இதனுடன் தக்காளி சாஸ் அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

ஸ்ப்ரவுட் பாவ் பாஜி

தேவையான பொருட்கள்:

பச்சை பயிறு (முளைக் கட்டியது) - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2
தக்காளி - 1 (பெரியது)
குடை மிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் மற்றும் எண்ணெய் - 3 ஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்துமல்லி தழை - பொடியாக நறுக்கியது
எலுமிச்சை சாறு - சுவைக்காக
கரம் மசாலா - 2 சிட்டிகை

செய்முறை:

முளைக் கட்டிய பயரை நன்கு கழுவி வேக வைக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். தக்காளி நைஸாக நறுக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் வெண்ணெய்யை ஊற்றி அது காய்ந்தவுடன் அதில் குடை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். அதிக தீயில் இரண்டு நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து மஞ்சள் தூள், பாவ்பாஜி மசாலா, உப்பு சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து திரண்டு வரும் வரை வதக்கவும். இப்போது உருளைக் கிழங்கையும், பயரையும் சேர்த்து. மூடியிட்டு இந்த கலவை மென்மையாகும் வரை சமைக்கவும். இதன் மேல் சிறிதளவு கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் கொத்துமல்லி தழைகள் தூவி இந்த மசாலா மீது சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும். பாவ் பிரட்டுடன் இதனை உண்ணலாம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1