மானசரோவர் பற்றியும் கைலாயம் பற்றியும் பல கதைகள் கேட்டிருப்போம். இங்கே கைலாய மலை உருவான பின்னணியை சத்குரு கதைக் கொண்டு விளக்குகிறார்...

கைலாஷ் யாத்ரா - பகுதி 3

டாக்டர்.ராதா மாதவி:

கைலாஷ் மானசரோவரை பயணம் நெருங்க நெருங்க, சத்குரு எங்களை பலவாறாகத் தயார்படுத்தினார்.

குருவின் கை பிடித்து ஈசனின் இருப்பிடம் போகப் போகிறோம் என்ற உணர்வு உயிரில் கலந்து எங்களைப் பரவசப்படுத்தியது. புகைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து அதிசயித்த அதே பிரம்மாண்டம் உள்ளே உயிர்த்தெழுந்தது.

சீதோஷ்ண நிலைக்கேற்ப உடலைப் பராமரிப்பது குறித்தும், மாமலையின் மகத்துவத்தையும், மலையாய் விரிந்திருந்த அந்த இறைமையின் தன்மைக்குள் எங்களை இணைத்துக்கொள்வது குறித்தும் சத்குரு விரிவாய் பேசினார்.

கைலாஷ் மலையைப் பார்த்தால் அது இந்த மலைப்பகுதியின் தொடர்ச்சியாய்த் தெரியவில்லை.

“புத்த மதத்தினர் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக கைலாஷ் மலையைப் பார்க்கிறார்கள். படைப்புகளுக்கு எல்லாம் அடிப்படையான சக்தி என்பதாக இதனைச் சொல்கிறார்கள். யோக வழியில் முதுகுத் தண்டை பிரபஞ்சத்தின் மையமாக வர்ணிக்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கைலாஷ் மானசரோவர் பற்றி நிறையக் கதைகள் உண்டு. யாராவது அங்கே சென்றால், திரும்பி வர மாட்டார்கள் என்று பேசப்படுவதுண்டு. ஆமாம் அப்படி நடந்திருப்பது உண்மைதான். ஆனாலும் பத்தாயிரம் வருடங்களாக மனிதர்கள் அங்கே போய் வருகிறார்கள் என்பதும் உண்மை. ஒருவர், இருவர் அல்ல, கோடிக்கணக்கானவர்கள் போய் வருகிறார்கள்.

எல்லா இடங்களிலும் ஒரு சிலர் இறக்கத்தான் செய்கிறார்கள். சில இடங்களில் வாழ்க்கை, மரணம் இரண்டுக்கும் இடையிலான எல்லைக்கோட்டின் அளவு சிறிது குறைந்துள்ளது. ஆன்மீகரீதியாக அது நல்லதுதான். ஏனென்றால், ஒருவர் தன் மரணம் குறித்து தீவிர விழிப்பு கொள்ளும் போதுதான், பொருள் நிலை இல்லாத ஒன்றைக் குறித்து விழிப்படைகிறார்.

எனவே கைலாஷ் மலை ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. சீதோஷ்ணம் மற்றும் வேறுபல அம்சங்கள் கொண்ட இடங்களுக்குச் செல்வதால், வாழ்க்கை - மரணம் இடையே உள்ள எல்லைக்கோடு குறைகிறது. ஆனால் விவேகத்துடன் நடையிட்டால், நடப்பதற்காகப் போதுமான அளவு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். முட்டாள்தனமாய் நடந்துகொண்டால் எங்கே போனாலும் நமது உயிர் பறிக்கப்பட்டுவிடும் இல்லையா?

எனவே, ‘என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ?’ என நடுங்குவது முட்டாள்தனம். பிரம்மாண்டமாய் சக்தியூட்டப்பட்ட இடத்துக்கு, ஆன்மீகம் தீவிரமாய் நிரம்பியுள்ள இடத்துக்குச் செல்லும்போது‘ நான்
பிழைப்பேனா, மாட்டேனா’ என்று எண்ணத்தை ஓட்டாமல் இருங்கள். அது முறையல்ல!

உங்களைப்பற்றி முக்கியத்துவம் இல்லாமல் செல்ல வேண்டும். உங்களை முக்கியப்படுத்தும் போதெல்லாம் வாழ்வின் மற்ற அம்சங்கள் சிக்கலாகின்றன. கைலாஷ், ஈசனின் இருப்பிடம். அங்கே நீங்களா முக்கியம்?

ஆழ்ந்த பக்தி உணர்வோடும், மரியாதையுடனும், இந்த புனித மண்ணின்மீது அழுக்கேறிய பூட்ஸ் காலுடன் நடக்கிறோமே என்ற ஆழமான மனவலியுடனும் செல்லுங்கள். அப்படி இருந்தால் உங்களுக்குள் இருப்பது உயிர்ப்பாய் இருக்கும். உச்சபட்ச உண்மை நெருங்கி வரும். உங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தால், உச்சபட்ச உண்மைக்கு வெகுதொலைவில்தான் இருப்பீர்கள்.

நான் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக உங்களோடு இருக்கவில்லை. வேறு சில சாத்தியங்களை நம்மால் உருவாக்க முடியும் என்பதால் இங்கே இருக்கிறோம். சாதாரண சீதோஷ்ணத்தில் நீங்கள் உருக மாட்டேன் என்கிறீர்கள். அதனால்தான் இப்படிப்பட்ட இடத்துக்கு கூட்டி வந்து உருகவைக்க நினைத்தேன்.

ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிற கதைகளை ஆழமாகப் பார்த்தால், அவை இந்த இடத்தில் நிரப்பப்பட்டுள்ள சக்தியைப் பற்றியும் அதன் தன்மையைப் பற்றியதாகவும் இருக்கும். இவையெல்லாம் பக்தர்களால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு மிகைப்படுத்திப் பார்க்கவோ, பேசவோ தயக்கமே இருப்பதில்லை.

அதை விரும்புபவர்கள் அவர்கள். எனவே எல்லாமே ஒரு எல்லைக்கு மேல்தான் இருக்கும். பரவாயில்லை, அப்படியே விடுங்கள். எல்லாவற்றையும் உங்கள் தர்க்க அறிவில் போட்டு அரைத்துப் பார்த்து கொன்று போட வேண்டாம். கதைக்கு வருவோம். காஷ்மீர சைவ வழியில் சொல்லப்பட்ட ஒரு கதை மிகவும் பிரபலம்.

ஒரு நாள் சிவா தன் நண்பர்களுடன் வெளியே சென்றார். நண்பர்கள் யாரென்று தெரியும் அல்லவா? துர்தேவதைகள், பேய்கள், பிசாசுகள் எல்லாம் அவர் நண்பர்கள். சிவா தன் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டதால், குளிப்பதற்காக மானசரோவர் செல்லலாம் என்று பார்வதி நினைத்தாள்.

கீழே வந்து மானசரோவரில் மூழ்கிக் குளித்து எழுந்தாள். அன்று சூரியனும் தலைகாட்டியதால் உடலை உலர்த்த, ஆடைகள் அணியாமல் அங்கேயே படுத்துக் கொண்டாள். மது அருந்தியிருந்த சிவா, அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார். அங்கே படுத்திருந்தது பார்வதி என்பதை அறியவில்லை. அவளது மார்பகத்தைப் பார்த்தவர், அதை ஒரு லிங்கமெனக் கருதி வழிபடத் தொடங்கினார். சிவனின் பார்வையில் லிங்கமாய் தெரிந்த பார்வதியின் ஒருபுற மார்பகம், அவரது வழிபாட்டால் கைலாஷ் மலையாய் உயர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

அது உண்மைதான். கைலாஷ் மலையைப் பார்த்தால் அது இந்த மலைப்பகுதியின் தொடர்ச்சியாய்த் தெரியவில்லை. இப்படி ஒரு கதை சொல்லப்பட்டது ஏன் தெரியுமா? காஷ்மீர சைவ வழியினர் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்து பெண்மை சார்ந்த விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்.

தாந்த்ரீக வழியில் இருந்த இவர்கள் பெண் தெய்வங்களைச் சார்ந்த ஆன்மீக வழிக்கு உரியவர்கள். கைலாஷ் மலையில் பெரும் ஆன்மீகப் பணியினை இவர்கள் செய்திருக்கிறார்கள். அதுதான் என்னை இங்கே வரத் தூண்டியது. பெண்மைச்சக்தி நிரம்பிய இடம் இது. புத்த மதத்தினர்கூட இதனை ‘தாயின் கருணை’ என்றே அழைக்கிறார்கள்.

எனவே நாம் செல்லும்போது, அந்த பரிமாணத்தை உணர்கிற தன்மையில் செல்லலாம். ஈஷாவிலும் நாம் இப்படிப்பட்ட பெண்மைச் சக்தியை பெருக்கெடுக்கச் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த ஒரு அம்சத்தை நாம் மக்களிடம் இன்னும் பெரிதாய் வெளிப்படுத்தவில்லை. அதைப் பெறுகிற நிலைக்கு ஒருவர் தயாராக வேண்டும். கைலாஷை நெருங்க நெருங்க நாம் அதை ஆழப்படுத்துவோம்!’’

பயணம் தொடரும்...