காய்கறி-பழங்கள், இனி உங்கள் வீட்டிலேயே...!
உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை உருவாக்கிவிட்டால், தினசரி தேவைகளான காய்கறி-பழ வகைகளையும், சத்தான கீரை வகைகளையும் அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?! வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்தும் தோட்டத்தில் என்னென்ன விளைவிக்கலாம் என்பது பற்றியும் சில குறிப்புகள் இந்த வாரப் பதிவாக..!
 
 

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 6

உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை உருவாக்கிவிட்டால், தினசரி தேவைகளான காய்கறி-பழ வகைகளையும், சத்தான கீரை வகைகளையும் அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?! வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்தும் தோட்டத்தில் என்னென்ன விளைவிக்கலாம் என்பது பற்றியும் சில குறிப்புகள் இந்த வாரப் பதிவாக..!

வீட்டுத் தோட்டம்

உங்களுடைய காய்கறி மற்றும் பழத் தேவைகளை, உங்கள் வீட்டுப் பின்புறத் தோட்டங்களிலேயே அவற்றைப் பயிரிட்டு, உங்கள் சமையலறை மற்றும் குளியலறைக் கழிவு நீரைப் பாய்ச்சி விளைவிக்க முடியும். முருங்கை, பப்பாளி, நெல்லி, கொய்யா, கறிவேப்பிலை, அகத்தி போன்றவற்றை தோட்டத்தின் ஒரு பக்கத்தில் பயிரிடுவதன் மூலம், அவற்றின் நிழல் மற்ற செடிகளை மறைக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள முடியும். சுலபமாக வீட்டைச் சுற்றி வளர்க்கக் கூடிய சில மர வகைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

முருங்கை - புரோட்டின், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் நிரம்பியது. நச்சுமுறிவுத் தன்மை அதிகமுள்ளதால், உடலிலுள்ள செல்கள் பழுதடையாமல் காக்கிறது. மூட்டுவலி, இரத்த சோகை மற்றும் அல்சர்களை குணப்படுத்துகிறது.

பப்பாளி - இதிலும் நச்சுமுறிவுத் தன்மை அதிகமுள்ளது. வைட்டமின் ‘பி’ சத்து நிறைந்தது. ஜீரணசக்தியை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்கிறது.

நெல்லி - வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையோடு இருக்கச் செய்கிறது. அஜீரணக் கோளாறை கட்டுப்படுத்தி, கண்பார்வையை கூர்மையாக்கி, இதயத்துக்கு வலுவூட்டுகிறது.

கொய்யா - வைட்டமின் ‘சி’ அதிகமுள்ளது. தசைகளுக்கு மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கறிவேப்பிலை - பசியின்மையைப் போக்குகிறது, கர்ப்பிணிப் பெண்களின் மசக்கை பிரச்சனைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. முடி வளர்ச்சியை அதிகரித்து, இளமையிலேயே நரைமுடி உருவாவதைத் தடுக்கிறது.

அகத்தி - பித்தம் மற்றும் கபத்துக்கிடையே சமநிலையை உருவாக்குகிறது. விஷமுறிவு மருந்தாக செயல்படுகிறது.

வேப்பிலை - வறண்ட சருமத்தை மென்மையாக்கி, தோல் அரிப்பைப் போக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது ஒரு சிறந்த கிருமி நாசினி.

பிரண்டை - ஜீரணசக்திக்கு நல்லது, பெண்களுக்கு அவசியமான கால்சியம் சத்து நிறைந்தது.

வாழை - வாழையின் ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. வாழைத் தண்டு மிகுந்த நார்ச்சத்து உடைய, பொட்டாசியம் நிறைந்த உணவு. இது சிறுநீரகக் கற்களை அகற்ற உதவுகிறது.

தென்னை - ஊட்டச்சத்து மிகுந்தது. நார்ச்சத்து, தாதுச் சத்துக்கள் நிரம்பியது. அல்சர், சிறுநீர் குழாய் கிருமித் தொற்றுகளுக்கு சிறந்த நிவாரணி.

மாதுளை - இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நோய்த் தொற்றைத் தடுக்கிறது. பற்சிதைவைப் போக்குகிறது.

கீரைகள்

குறுகிய காலத்தில் விளையக் கூடிய கீரைகளை தோட்டத்தின் நடைபாதைக்கு அருகே பாத்தி கட்டி வளர்க்கலாம்.

முளைக் கீரை - மலச்சிக்கலைப் போக்கி, சொறி நோயை குணமாக்குகிறது.

மணத்தக்காளி கீரை - வாயுத் தொல்லை, அல்சர், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

சிறுகீரை - இரும்புச் சத்து நிறைந்தது, இரத்த சோகை, மூல நோய் போன்றவற்றை குணமாக்கக் கூடியது.

அரைக்கீரை - ஜுரம், வலிப்பு, வாயு மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

கரிசலாங்கண்ணி கீரை - வாய்ப்புண், வாய் துர்நாற்றம் மற்றும் கல்லீரல் நோய்களை குணமாக்குகிறது.

பொன்னாங்கண்ணி - கண் பார்வைக் கோளாறுகள், கண் வலி மற்றும் கண்ணீர் பெருக்கு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

கொத்துமல்லி - இரத்தத்தை சுத்திகரித்து, கண் பார்வையைக் கூர்மை யாக்குகிறது. தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு அணுக்களை அதிகரிக்கிறது.

பாலக்கீரை - முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்கள் நிரம்பியது. சிறுநீர்ப் பாதையில் உருவாகும் கல் பிரச்சனையைத் தீர்க்கிறது. கண் பார்வையை கூர்மையாக்குகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களுடைய எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

தவசி - இதில் பலவிதமான வைட்டமின்ங்கள் இருப்பதால் வைட்டமின் கீரை என்று அழைக்கப்படுகின்றது.

முடக்கத்தான் - இது வாத நோய்களுக்கு பயன்படுகின்றது.


அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்

அடுத்த வாரம்...

வீட்டில் உண்டாக்கப்படும் மூலிகைத் தோட்டத்தில் பயிரிடப்பட வேண்டிய மூலிகைகள் பற்றியும், அடிக்கடி நம்மைத் தாக்கும் சாதாரண நோய்களுக்கான தீர்வுகள் என்னென்ன என்பதைப் பற்றியும் குறிப்புகள் காத்திருக்கின்றன.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1