கடுகு இருந்தால் நோயை விரட்டலாம்!
கடுகு நாம சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுறதுக்கு உதவுது. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை இதுக்கு இருக்குது. ஆனா... அதிகம் சாப்பிட்டா வாந்திய உண்டுபண்ணும்!
 
கடுகு இருந்தால் நோயை விரட்டலாம்!, Kadugu irunthal noyai virattalam
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 31

ஏ.டி.எம் வாசலில் நீண்ட வரிசையில் நின்று, ஒருவழியாக உள்ளே சென்று என் கார்டை செருகியதும் மெஷின் ஜேம் ஆகிவிட்டதாக திரையில் காண்பித்தது! ‘நல்லவங்கள இறைவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்!’ அப்படினு ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகத்துக்கு வந்தது! ஆமாம்... எனக்கு அவசரமா ஒரு ஐநூறு ரூபாய் தேவை! நம்ம உமையாள் பாட்டிகிட்ட போய் கைமாத்தா கேட்டா, இந்த செல்ல பேரனுக்கு தராமலா போயிருவாங்க?

“கடுகு நாம சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுறதுக்கு உதவுது. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை இதுக்கு இருக்குது. ஆனா... அதிகம் சாப்பிட்டா வாந்திய உண்டுபண்ணும்!”

பைக்கை உமையாள் பாட்டியின் வீட்டிற்கு முடுக்கினேன். பாட்டி ஏதோ சமையல் வேலையில் மும்முரமாக இருப்பதாகத் தெரிந்தது.

“இந்த கடுகு டப்பாவ எங்க வச்சேன்னு தெரியலயே?” முனங்கியபடியே அடுக்கறை டப்பாக்களுக்கிடையே தேடிக்கொண்டிருந்தாள் பாட்டி.

பாட்டி சமையலுக்கு கடுகு டப்பாவை தேடுவது எனக்கு நல்ல வாய்ப்பாகப் போனது. பாட்டி சேமித்து வைக்கும் சிறுவாடுப் பணம் கடுகு டப்பாவில்தான் வைக்கப்படும்.

“பாட்டி...! நான் உங்களுக்கு தேடி எடுத்து தர்றேன்.” சீக்கிரம் கடுகு டப்பா கிடைத்தால்தான் எனக்கும் பணம் கிடைக்கும் என்ற முனைப்பில் பாட்டியிடம் சொன்னேன்.

“வேண்டாம்ப்பா, நான் வச்ச இடம் எனக்குதான் தெரியும்!”

“ஆமா... கடுகு டப்பால எதுக்கு பாட்டி பணத்த போட்டு வைக்குறாங்க?”

“ம்... அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா! சமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு வேண்ணா எனக்கு தெரியும்!”

“ஓ... இப்படி ஒரு விஷயம் இருக்கோ...?! சரி பாட்டி, தேடிக்கிட்டே அதை கொஞ்சம் சொல்லுங்களேன்”

“கடுகுல வெண்கடுகு-கருங்கடுகு’னு ரெண்டு வகை இருக்கு. நம்ம சமையல்ல பயன்படுத்துற கடுகு கருங்கடுகு. அதுல வெண்கடுக விட காரம் அதிகமா இருக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு சொல்வாங்க கேட்டிருக்கியா?”

“ஓ கேட்டிருக்கேன் பாட்டி... என்னப் போலவே கடுகும் சின்னதா இருந்தாலும் காரசாரமா இருக்கும்னு எனக்கு தெரியும் பாட்டி!”

நான் சொல்லிக்கொண்டே கடுகு டப்பாவை தேடிக்கொண்டிருக்க, நான் சொன்ன பதிலில் கடுப்பாகி செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைத்தாள் பாட்டி!

“சாரி பாட்டி, நீங்க சொல்லுங்க கடுக பத்தி...!”

“கடுகு நாம சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுறதுக்கு உதவுது. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை இதுக்கு இருக்குது. ஆனா... அதிகம் சாப்பிட்டா வாந்திய உண்டுபண்ணும்!”

பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடுகு டப்பா கிடைத்துவிட்டது! நானும் பாட்டியிடம் பணம் வாங்கிக்கொண்டு செல்ல ஆர்வமானேன். ஆனால், அந்த வெண்கடுகு பத்தி தெரிஞ்சுக்காம எப்படி போவது? பாட்டியிடம் கேட்டதும், வெண்கடுகு பற்றி சொல்லத் துவங்கினாள் பாட்டி!

“வெண்கடுகை 2 கிராம் அளவு அரைச்சு தண்ணியில கலந்து விஷப்பொருள் சாப்பிட்டவங்களுக்கு கொடுத்தா, வாந்தி ஏற்பட்டு, அது மூலமா விஷம் வெளியேறும். வெண்கடுகுத் தூளோட அரிசி மாவு கொஞ்சம் சேத்து தேவையான தண்ணி கலந்து கிளறி, அத ஒரு துணியில தடவி எடுத்துக்கணும். வயிற்று வலி, குடைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அந்தந்த பகுதிகள்ல இந்த துணிய வச்சு பற்று போட்டா குணம் உண்டாகும். இருமல், இரைப்பு நோய் போன்ற பிரச்சனைகளுக்கு மார்பு மேல பற்று போடணும். தலைவலிக்கு பிடரி மேல போடணும். வாந்தி-பேதியில் வர்ற கால் கெண்டைச் சதை பிறழ்ச்சிக்கு கால் மேல பற்று போடணும்.

கை-கால்ல ஈரப்பதம் காரணமா சில்லிடல் (Chillness of hands & legs) உண்டாகும்போது, வெண்கடுக அரைச்சு கை-கால்கள்ல தடவி துணியை சுற்றி வச்சா, ஈரப்பதம் நீங்கி வெப்பம் உண்டாகும்.

அப்புறம்... வெண்கடுகுல இருந்து தயாரிக்குற எண்ணெய்தான் கடுகு எண்ணெய்!”

ஓ... அப்படியா பாட்டி! இது எதுக்கு பயன்படுது பாட்டி?”

“கட்டி-கழலை (Tumors & abcess) வந்த இடத்துல கடுகு எண்ணெய தடவி வந்தா நல்ல குணம் கிடைக்கும்!”

பாட்டி கடுகு பற்றிய மருத்துவ குணங்களை சொல்லி முடித்ததும் பாட்டியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

“நான் கைமாத்தா குடுத்த பணத்த சீக்கிரம் திருப்பி தந்திடுப்பா... இல்லேன்னா கடுகு வெடிக்குற மாதிரி இந்த பாட்டி வெடிப்பேன்!” பாட்டி பொய்யான கோபத்துடன் சொல்ல, நானும் பொய்யாக சரி என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1