கடவுளைக் கண்டாரா ராகவேந்திரா?!
கடவுளைத் தேடும் தன் பயணத்தில், ராகவேந்திரா கண்ட அனுபங்கள் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், அவரது நிலையை நினைத்துப் பார்க்கும்போது அவரின் உறுதி நம்மை வியக்க வைக்கிறது. கடவுளைத் தேடிப் போன அவருக்காகத் திறந்த நாடகக் கம்பெனியின் கதவுகள் மற்றும் துறவியின் செய்தித்தாள் விளம்பரம் எனப் பல சுவாரஸ்ய நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
 
 

கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 3

கடவுளைத் தேடும் தன் பயணத்தில், ராகவேந்திரா கண்ட அனுபவங்கள் நமக்கு படிப்பதற்கு சுவாரஸ்யமாக அமைந்தாலும், உண்மையில் அவரின் உறுதி நம்மை வியக்க வைக்கிறது. கடவுளைத் தேடிக் கிளம்பிய அவர் துவண்ட சமயத்தில், அவரை அரவணைத்த நாடகக் கம்பெனி, சில வருடம் கழித்து மீண்டும் வழிகாட்டியாக அமைந்த ஒரு துறவியின் செய்தித்தாள் விளம்பரம் என அவரின் பருவக் கால வாழ்க்கை இவ்வாரம் தொடர்கிறது!

அவனுடைய இளவயதில் அவன் அறியாமலே அவனுக்கு ஆன்மீக அனுபவங்கள் கிடைத்திருந்தாலும், பின்னர் விவரம் அறிந்து அவன் அப்பாதையை மேற்கொள்ள நினைத்தபோது, அவனுக்குகப் பெரிதாக உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. நம்பிக்கைக் கீற்றாக, ஹுப்ளியில் ஆசிரமம் அமைத்து வசித்து வந்த சித்தருத்தி ஸ்வாமிகள் பற்றி கேள்விப்பட்டு, அவரால் தனக்கு கடவுளைக் காண்பிக்க முடியும் என்று நம்ப ஆரம்பித்தான்.

ஹுப்ளி... அதிகத் தூரம். கையில் காசும் இல்லை. பள்ளி முடிந்தவுடன் நேராகப் பேருந்தில் ஏறினான். இவனுடைய விருப்பத்தைக் கேட்ட பேருந்து ஓட்டுனர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்ததுடன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஓரிரு நாட்கள் தங்கவைத்தார். இப்படி மிகவும் பகீரதப் பிரயத்தனம் செய்து, இளம் ராகவேந்திரன், அந்த ஸ்வாமியின் ஆசிரமத்தைச் சென்றடைந்தான். சிறுவனாக இருந்ததால், ஆசிரமத்தில் இருந்தவர்கள் அவரை ஸ்வாமியை சந்திக்கவிடவில்லை.

ஒரு நாள் காலையிலேயே ஆசிரமத்து வாசல் கதவு முன் சென்று நின்றுகொண்டான். ஆசிரமத்தில் இருந்து ஸ்வாமிஜி காலை வெளியே வந்தவுடனேயே, அவருடைய காலில் விழுந்து, கடவுளைப் பார்க்க வேண்டும் என அழுதான். எரிச்சலும் கோபமும் அடைந்த ஸ்வாமிஜி ராகவேந்திரனைப் பார்த்துக் கோபமாகக் கத்தினார், “கடவுள் என்ன உங்க தாத்தாவா, நெனச்சவுடனே பார்க்கறதுக்கு? நீ அவ்வளவு உறுதியாயிருந்தா நீயே கஷ்டப்பட்டு முயற்சி செய்.”

ராகவேந்திரன் அவரது காலை விடாமல் மீண்டும் கெஞ்சியபோது, அந்த ஸ்வாமி அவனை உதைத்துத் தள்ளி தன் காலை விடுவித்துக்கொண்டார். அதிர்ச்சி அடைந்து நின்ற ராகவேந்திரனைப் பார்த்து அந்த ஸ்வாமி சொன்னார், “உன் குரு நான் இல்லை. அவன் வேறெங்கோ இருக்கான்”.

இப்போது ராகவேந்திரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வழிகாட்டவும் யாரும் இல்லை. கையில் பணமும் இல்லை. எனவே கிராமம் கிராமமாகச் சென்றுகொண்டு இருந்த ஒரு நாடகக் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தான்.

அந்த நாடக கம்பெனியில் எல்லா வேலைகளிலும் ஆர்வம் காண்பித்தார். வெகுவிரைவில் அங்கு எல்லோருடைய பிரியத்துக்கும் ஆளானார். அவருடைய ஆர்வத்தாலும் திறமையாலும் நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த கம்பெனி லாபம் பார்க்கத் தொடங்கியது. விரைவிலேயே நாடகத்தில் நடிக்கவும் தொடங்கினார். கம்பெனி முதலாளிக்கு ராகவேந்திரனை மிகவும் பிடித்துவிடடது. அவருக்கு குழந்தையும் இல்லை. எனவே ராகவேந்திரன்தான் தனக்கு வாரிசு என்றும் அவனிடம் நாடகக் கம்பெனியை விரைவில் ஒப்படைக்கப் போவதாகவும் சொல்ல ஆரம்பித்தார். இந்த நேரத்தில்தான் ராகவேந்திரன் வாழ்க்கையில் யோகா நுழைந்தது.

கர்நாடகாவில் கொப்பா என்ற கிராமத்தில் நாடக கம்பெனி முகாமிட்டு நாடகங்கள் நடத்திக் கொண்டு இருந்தது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு யோகி, யோகப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி முதலாளியைச் சம்மதிக்கவைத்து, கம்பெனியில் இருப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு காலை நேரத்தில் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தார். அவருடைய வழிகள் மிகவும் கடுமையாக இருந்தன. ஆனாலும் அவருடைய பயிற்சிமுறை ராகவேந்திரனை மிகவும் கவர்ந்தது. ஆசனப் பயிற்சிகளில் மிகவும் தீவிரம் காட்ட ஆரம்பித்தான். வகுப்பு முடிந்தவுடனும் அந்த யோகியுடன் தொடர்ந்து தொடர்புகொள்ள ஆரம்பித்தார். அன்று ஆரம்பித்த யோகப் பயிற்சி ராகவேந்திராவின் வாழ்க்கையில் ஒரு நாள் தவறாமல் இறுதி வரை நடந்து வந்தது.

ராகவேந்திரன் வாழ்க்கையில் எல்லாம் ஒரு ஒழுங்கில் போய்க்கொண்டு இருந்தபோது, கடவுளைப் பார்க்க வேண்டும் என்னும் தணியாத தாகம் மீண்டும் அதிகமாகிவிட்டது. ஒரு முறை, செய்தித்தாள் ஒன்றில், ஒரு ஸ்வாமிஜியின் புகைப்படம் போட்டு ஏதோ தகவல் வெளியிட்டிருந்தார்கள். அதைப் படித்த ராகவேந்திரனுக்கு, தன் ஆசையை இந்த ஸ்வாமிஜி நிச்சயம் தீர்த்துவைப்பார் என்னும் உறுதி அதிகமாகத் தொடங்கியது. அந்தத் துறவியின் பெயர் ஸ்வாமி சிவானந்தா (ரிஷிகேஷில் ஆசிரமம் வைத்திருந்த ஸ்வாமி சிவானந்தா அல்ல). நாட்டின் இளைஞர்கள் அனைவருக்கும் யோகப் பயிற்சிகள் கற்றுத்தர வேண்டும் என்னும் தீவிர ஆர்வத்துடன் இருந்த அந்தத் துறவி பூனாவில் ஆசிரமம் வைத்திருந்தார். அந்த செய்தித்தாளில் பெயர், ஊர் மட்டும் இருந்ததே தவிர, ஆசிரம விலாசம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

செய்தித்தாளில் அந்தத் துறவியைப்பற்றிப் படித்ததில் இருந்து ராகவேந்திரருக்கு இருப்புக் கொள்ளவில்லை. எனவே ஒரு நாள் அந்த நாடக கம்பெனியைவிட்டுக் கிளம்பிவிட்டார். தன் மீது மிகவும் பற்றுடனும் நட்புடனும் இருந்த, கம்பெனியில் இருந்தவர்களிடம்கூட சொல்லிக் கொள்ளவில்லை. அந்த அளவுக்குக் கடவுளின் தேடுதல் அவரிடம் மிகவும் தீவிரமாக இருந்தது.

மிகுந்த சிரமத்துக்கு இடையில் பூனாவைச் சென்றடைந்த ராகவேந்திரரால் ஸ்வாமி சிவானந்தாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்வாமி சிவானந்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோற்றுப்போன ராகவேந்திரர், மனம் வெறுத்து, ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள எண்ணி, ஓர் ஏரியை நோக்கிச் சென்றார். அந்த ஏரியின் முன்பிருந்த சாலையின் கடைசிப் பகுதியைக் கடக்கும் நேரத்தில், அங்கே ஒரு புத்தகக் கடையில் ஒரு ஸ்வாமி உட்கார்ந்திருந்ததைத் தற்செயலாகப் பார்த்தார்.

ராகவேந்திரருக்கு அவரை எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. அருகில் சென்று பார்த்தால், செய்தித்தாளில் போட்டோவில் பார்த்த, அதே ஸ்வாமி சிவானந்தா.

பிறகென்ன, ராகவேந்திரருக்குப் பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. கன்று, தாய்ப் பசுவை நோக்கி ஓடுவதுபோல் அவரை நோக்கி ஓடினார்!அடுத்த வாரம்...

ஸ்வாமி சிவானந்தா, ராகவேந்திராவை தன் சீடராக ஏற்றுக்கொண்டாரா? சிகிச்சைக்கு வந்திருந்த சிறுவனைப் பார்க்காமலேயே 'ஷப்த பேதி' எனப்படும் கலையை பயன்படுத்தி அவனைப் பற்றிக் கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மானிக் ராவிடமிருந்து ராகவேந்திராவ் அந்தக் கலை கற்றுக்கொண்டாரா? - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வருகிறது அடுத்தவாரப் பதிவு.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

can me get answer to my qustn....?