கடவுளைக் காண்பித்த சிவானந்தா !
கடவுளைக் காணும் தீவிர ஆர்வத்தில் இருக்கும் ராகவேந்திரா, தன் குருவான சிவானந்தா கூறியதால் மானிக் ராவிடம் சென்று அவருடன் தங்குகிறார். சில காலங்களுக்குப் பின்னர் மீண்டும் சிவானந்தாவிடம் வரும்போது, அவர் ராகவேந்திராவை அழைத்துக் கொண்டு தெருவிற்கு கூட்டி வந்து அங்கே கடவுளைக் காண்பிக்கிறார். தெருவில் ராகவேந்திரா பார்த்தது என்ன? இந்த வாரப் பதிவில் படியுங்கள்!
 
 

கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 4

கடவுளைக் காணும் தீவிர ஆர்வத்தில் இருக்கும் ராகவேந்திரா, தன் குருவான சிவானந்தா கூறியதால் மானிக் ராவிடம் சென்று அவருடன் தங்குகிறார். சில காலங்களுக்குப் பின்னர் மீண்டும் சிவானந்தாவிடம் வரும்போது, அவர் ராகவேந்திராவை அழைத்துக் கொண்டு தெருவிற்கு கூட்டி வந்து அங்கே கடவுளைக் காண்பிக்கிறார். தெருவில் ராகவேந்திரா பார்த்தது என்ன? இந்த வாரப் பதிவில் படியுங்கள்!

ஸ்வாமி சிவானந்தா தன்னைத் தேடி வந்த ராகவேந்திரரை மிகவும் அன்பாக வரவேற்றாலும் உடனடியாக அவரைத் தனது சீடராக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், ஸ்வாமி சிவானந்தாவே ஆசிரமம் ஏதுமின்றி ஒரு நாடோடி போல வாழ்ந்து வந்தார். தான் தங்கும் இடங்களில் தனது சீடர்களையும் தங்கவைத்து தன்னை உபசரிப்பவர்களுக்குத் தொந்தரவு தர அவர் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, இயல்பாகவே சிவானந்தர் ஒரு கண்டிப்பான குரு. எனவே தனது கண்டிப்பான பயிற்சிமுறைகளை ராகவேந்திரர் தாக்குப்பிடிப்பாரா என்பதில் சந்தேகப்பட்டார். சிவானந்தா தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் தன்னையே மாய்த்துக்கொள்ளப் போவதாக ராகவேந்திரர் கூறினார். அவரது உறுதியைப் பார்த்த பிறகே, ராகவேந்திரரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார்.

சிவானந்தா தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் தன்னையே மாய்த்துக்கொள்ளப் போவதாக ராகவேந்திரர் கூறினார்.

சிவானந்தா, ராகவேந்திரருக்கு ஹடயோகாவை கற்றுக்கொடுத்தார். சிவானந்தாவின் கண்காணிப்பில் ராகவேந்திரர் தொடர்ந்து வளர்ந்து வந்தார். ராகவேந்திரரின் ஆர்வத்தையும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையையும் கண்ட ஸ்வாமி சிவானந்தா, ராகவேந்திரரை பரோடாவில் உள்ள தன் குருவான பேராசிரியர் மானிக் ராவ் அவர்களிடம் அனுப்பினார். மானிக் ராவ் உடற்கலை மற்றும் இந்திய போர்க் கலைகளில் மிகவும் தேர்ந்தவர்.

மானிக் ராவ் அவர்களிடம் ராகவேந்திரர் பலவித உடற்பயிற்சிகளைக் கற்றுவந்தார். மேலும் லத்தி, தலவார், கயிறேறுதல், இந்திய வீர விளையாட்டுக்கள், பாரம்பரிய இந்தியத் தாக்குதல் கருவிகளைப் பயன்படுத்துதல், மேற்கத்தியக் கலைகளான சிங்கிள் பார், டபுள் பார், ரோமன் ரிங்ஸ், பளு தூக்குதல் போன்றவற்றிலும் கற்றுத் தேர்ந்தார். ஒவ்வொரு நாளும் காலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை அயராது பயிற்சியில் ஈடுபடுவார். மிக விரைவிலேயே ராகவேந்திரர், மானிக் ராவின் மனதை மிகவும் கவர்ந்து விட்டார்.

மானிக் ராவ் பண்டைய இந்திய போர்க்கருவிகளை உபயோகிப்பதில் மிகவும் நிபுணர். இந்த போர்க் கருவிகள் ஒரு பெரிய கூடத்தையே ஆக்கிரமித்திருந்தன. ஆண்டுக்கு ஒருமுறை அந்த போர்க் கருவிகளை வைத்து பயிற்சி விளக்கங்களும் செய்வார். இவ்வளவு வகையான போர்க் கருவிகளையும் தனது தளவாட அறையில் வைத்துக்கொள்ள பரோடா ராஜாவே மிகவும் விரும்பினார். ஆனால், மானிக் ராவ் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஒருமுறை ராகவேந்திரர், மானிக் ராவின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டு இருந்தார். கீழ் தளத்தில் ஒரு சிறுவனும் அவனது பெற்றோரும் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அந்தச் சிறுவன் வலியால் துடித்துக் கொண்டு இருந்தான். மானிக் ராவ், ராகவேந்திரரிடம், “போ, அந்தப் பையனுக்கு 10 வயது இருக்கும், அவனின் வலது தொடை எலும்பு முறிந்துள்ளது. உடனே எலும்பைச் சேர்த்துவைத்து களிம்பு தடவிவிட்டு ஓய்வெடுக்க வை” என்று கூறினார். ராகவேந்திரர் கீழே போய்ப் பார்த்தார். மானிக் ராவ் சொன்னது அப்படியே உண்மையாக இருந்தது. அவர் சொன்னபடியே சிகிச்சையளித்து ஓய்வெடுக்க வைத்துவிட்டு வந்து ராகவேந்திரர் அதைப்பற்றி மானிக் ராவிடம் கேட்டார். ‘இது ஒன்றும் அதிசயம் இல்லை, இந்தக் கலைக்குப் பெயர் 'ஷப்த பேதி' என்று பதிலளித்தவர், பிறகு அந்தக் கலையிலும் ராகவேந்திரருக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.

இவர்கள்தான் கடவுள்கள். உன்னுடைய கடவுளை இவர்களுக்குள் பார், இவர்களின் கண்ணீரைத் துடைக்க நீ முதலில் முயற்சி செய்

இவ்வாறு மூன்று வருடப் பயிற்சிக்குப் பின்பு ராகவேந்திரர், தன் குரு ஸ்வாமி சிவானந்தாவிடம் திரும்பினார். இனியாவது மீதி நாட்களை குருவுடன் கழிக்கலாம் என்ற ஆசையோடு பல திட்டங்களுடன் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் இவருக்காக சிவானந்தா வேறு பல திட்டங்கள் வைத்துக்கொண்டு காத்திருந்தார். ராகவேந்திரரால் இதைத் தாங்க முடியவில்லை. சிவானந்தாவிடம் கண்ணீர் மல்க, “நான் உங்களுடன் இருப்பதே கடவுளைப் பார்ப்பதற்காகத்தான். ஆனால் நீங்கள் இதில் எனக்காக ஏதும் செய்யவே இல்லை, உங்கள் ஆசியுடன் நான் எப்போதாவது கடவுளைப் பார்க்க முடியுமா?’’ என்று கதறினார். அவரை சிவானந்தா கையைப் பிடித்துத் தெருவிற்கு வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றார்.

தெருவில் நடமாடிக்கொண்டு இருந்த ஏழை மக்களைக் காண்பித்து, “இதோ பார், நமது தியானம் எப்போதும் சூழ்நிலையின்படிதான் இருக்க வேண்டும். உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறாயா? இந்தப் புனித நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சரியான மருத்துவ வசதியின்றி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களைக் கவனிக்க யாருமில்லையா என்று வருந்தித் தவிக்கிறார்கள், இதெல்லாம் உனக்குத் தெரியவில்லையா? உன் சொந்தச் சகோதரர்கள் கவனிப்பாரற்று இருப்பதைப் பார்த்து உன்னால் பரிதாபப்பட முடியவில்லையா? உணவும் மருத்துவமும்கூட கிடைக்கவில்லை என்று இவர்கள் தவிக்கிறார்கள், ஆனால் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று நீ தவிக்கிறாய், கண்ணீர் விடுகிறாய். இவர்கள்தான் கடவுள்கள். உன்னுடைய கடவுளை இவர்களுக்குள் பார், இவர்களின் கண்ணீரைத் துடைக்க நீ முதலில் முயற்சி செய்’’ என்றார்.

இதையெல்லாம் கேட்ட ராகவேந்திரர் முற்றிலும் மாறினார். பிறகு சிவானந்தாவின் கால்களைத் தொட்டு வணங்கி அவருடைய அறிவுரைப்படியே நடப்பதாக உறுதி கூறினார்.அடுத்த வாரம்...

குரு சிவானந்தாவின் கட்டளைப்படி பாபா லட்சுமணதாஸிடம் சென்று ஆயுர்வேதம் கற்றது; அவரைக் குருவாக ஏற்க மனமில்லாமல் சிவானந்தாவிடம் மீண்டும் திரும்பியது பல திருப்பங்கள் நிறைந்த ராகவேந்திராவின் வாழ்வில் இன்னும் ஒரு அதிர்ச்சி அவர் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார்.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

Yes u r right but those days govt ruled by King of the Kings now a days it is with us ( general Public ) if u r the real seeker and if u r not earning money get this classes in village in tamilnadu thru isha dont blame without verifying anybody.