பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 34

இரசாயன விவசாயம் செய்து கடன்பட்டு துன்பப்படுவது ஏழை விவசாயிகள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள விவசாயிகளும்தான்! இரசாயன விவசாயம் எனும் மாயப் பிடியிலிருந்து பலரும் தப்புவதில்லை! இரசாயன விவசாயத்தால் கடன்பட்ட சூழலிலிருந்து மீண்டுவந்த ஒரு காப்பி விவசாயி அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்...

மலைப்பகுதியில் இயற்கை விவசாயம் சாத்தியமில்லை எனக்கூறிவரும் விவசாயிகளுக்கு நடுவே, கொடைக்கானலிலும் இயற்கை விவசாயம் சாத்தியமே என நிரூபித்திருக்கிறார் கானல்காடு-காமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயி திரு.மகேஷ் நாராயணன் அவர்கள், ஈஷா விவசாயக் குழுவினருக்கு அவர் அளித்த மனம் திறந்த பேட்டி...

நீங்கள் எவ்வளவு நாளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறீர்கள்?

கடந்த 30 வருஷமா காப்பி விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்து இரசாயன விவசாயம்தான் செய்து வந்தேன், கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளேன்.

இயற்கை விவசாயத்திற்கு நீங்கள் மாறியதற்கு காரணம் என்ன?

என் 30 வருட அனுபவத்தில் நான் தெளிவாகத் தெரிந்து கொண்டது, விவசாயம் செய்வதில் லாபம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த இருபது வருடத்திற்கு முன்பு இருந்த லாபம் தற்போது இல்லை, இதற்கு விளைச்சல் குறைவு, உரச்செலவு அதிகரிப்பு, இயற்கை இடர்பாடுகள் அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன.

ஏக்கருக்கு வேலையாள் கூலி, ஸ்பிரே செய்ய டீசல், மற்ற சில செலவுகள் எல்லாம் சேர்த்து தற்போது 15 ஆயிரம் மட்டும்தான் செலவாகிறது, எனக்கு 20 ஆயிரம் செலவு குறைந்துள்ளது, இது லாபம்தானே!

இப்படி தொடர்ந்து லாபம் குறையும்போது, நல்ல மகசூலுக்காக எவ்வளவு உரம் போட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலை ஏற்பட்டுவிடுகிறது, ஒரு ஏக்கருக்கு ஒரு டன் காப்பிக் கொட்டை அறுவடை செய்ய வேண்டும் என்று நினைப்பேன், இரசாயன உரத்தையும் ஆர்கானிக் உரத்தையும் கொட்டி சராசரியாக 700 முதல் 800 கிலோ வரை மகசூல் எடுத்திருக்கிறேன்.

இப்படி மகசூலை நோக்கி விவசாயம் செய்யும்போது இரசாயன உரங்கள், ஆர்கானிக் உரங்கள், விதைகள் போன்றவற்றிகான செலவு மற்றும் இந்த பொருட்களையெல்லாம் கீழிருந்து மேலே கொண்டுவருவதற்கான செலவு, வேலையாட்களுக்கான சம்பளம் போன்ற பல செலவுகளை செய்தபின்தான் இந்த மகசூலும் நமக்கு கிடைக்கிறது.

ஒரு வருஷம் இப்படி எதிர்பார்த்தபடி மகசூல் வந்து விட்டால், அதையே அடுத்த வருடமும் செய்ய முயற்சிக்கும்போது எதிர்பார்த்த மகசூல் கிடைப்பதில்லை! சரி, அதற்கடுத்த வருடமாவது கிடைக்கும் என்று நினைத்தால் ஏதோ ஒரு காரணத்தால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

நான் கடைசியாக புரிந்து கொண்டது ஒன்றுதான் "மகசூல் என்ற நோக்கத்திற்கு அதிமாகச் செலவழித்து விவசாயம் செய்யாமல், லாபம் வருகிறதா என்பதை கவனித்து விவசாயம் செய்ய வேண்டும்" என்பதே.

கடன் இன்றி காப்பி விவசாயம்... அசத்தும் கொடைக்கானல் விவசாயி!, kadan indri coffee vivasayam - asathum kodaikkanal vivasayi

வருடா வருடம் இப்படி செய்த செலவுகளினால் வங்கிகளில் கடன் பாக்கி, உரக்கடை வியாபாரியிடம் கடன், ஆட்களுக்கு கூலி கொடுக்க சிரமம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்தேன். ஒரு கால கட்டத்தில் சிறிது நிலத்தை விற்று கடன் அடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது, சிறிது நிலத்தை விற்று கடனையும் அடைத்து விட்டேன், ஆனால் இதேபோன்ற பிரச்சினை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருமே? இதற்கு என்ன தீர்வு என்று தெரியாமல் இருந்தேன்.

அந்த நேரத்தில் மதுரையில் நடந்த பாலேக்கர் ஐயாவின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, எனது தோழி ஸ்ரீபிரியாதான் என்னைக் கட்டாயப்படுத்தி வகுப்புக்கு வரவழைத்தார். அந்த இயற்கை விவசாயப் பயிற்சியின் முடிவில், என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.

பயிற்சியை முடித்தபின் இரசாயன உரங்கள் போடுவதை உடனடியாக நிறுத்தினேன், களையெடுப்பதையும் நிறுத்தினேன், ஆர்கானிக் உரங்கள் பயன்படுத்துவதையும் நிறுத்தினேன், தோட்டத்திற்காக எந்த செலவும் செய்யாமல் சும்மா இருந்தேன்.

அந்தக் காலகட்டத்தில் நான் கவனித்த விஷங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எந்த இரசாயன உரமும் கொடுக்காமலும் தோட்டம் நன்றாகவே இருந்தது. எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதுவரை "உரங்களால்தான் பயிர்கள் செழிப்பாக இருக்கின்றன" என்ற எனது கருத்தை நான் மாற்றிக் கொண்ட தருணம் அது, அப்போது முதல் இரசாயனத்தை முற்றிலும் தவிர்த்தேன். விவசாயிகள் தப்பிப்பிழைக்க வேண்டும் என்றால் இயற்கை விவசாயம்தான் சரியான மார்கம் என்பது தெளிவாகப் புரிந்தது.

காப்பி போர்டு சொல்கிறது, விவசாய விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், வயதான விவசாயிகள் சொல்கிறார்கள் என்று இரசாயனத்தைக் கொட்டியது எவ்வளவு பெரிய தவறு என்பது எனக்கு தெளிவாகப் புரிந்தது, தொடர்ந்து படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறத்தொடங்கினேன், இப்படி இரசாயன விவசாயச் சங்கிலியில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடையாணி மாட்டியிருந்தா கடவுள கும்பிட வேணாமுன்னு என்ற ஊர்ல சொல்லுவாங்கோ! வண்டிய எடுக்கும்போது கடையாணியெல்லாம் செரியா மாட்டியிருக்கான்னு பாத்துக்கோணுமில்லீங்க! அதைய பாக்காம கடவுளே வண்டி நல்லா போகோணும்னு கும்பிட்டு என்ன பிரயோசனமுங்க! அதுமாறி நாம இயற்கைய கவனிச்சு பாக்காம, கடன் சுமை ஆன பொறவு கடவுள நொந்து என்ன பிரயோசனமுங்க! நம்ம கொடைக்கானல் கார அண்ணா இதைய நல்லா புரிஞ்சுகிட்டாருங்க!

ஜீரோ பட்ஜெட் வகுப்பில் தாங்கள் புரிந்து கொண்ட முக்கிய விஷயங்கள் என்ன?

அதே ஆண்டு ஈஷா விவசாய இயக்கம் ஒருங்கிணைத்த 8 நாள் சேனாதிபதி பயிற்சிக்கும் சென்றேன், அதில் இயற்கை விவசாயம் பற்றி மேலும் பல நுணுக்கமான விஷயங்களை பாலேக்கர் ஐயா அவர்கள் விரிவாக கற்றுக்கொடுத்தார்.

முக்கியமாக இரசாயன உரங்களைக் கொட்டினால் மட்டுமே ஹைபிரிட் ரகங்கள் அதிக மகசூலைத் தருகின்றன என்பது புரிந்தது.

சத்துக்களை எடுத்துக்கொள்வதிலும் நீரை எடுத்துக்கொள்வதிலும் அருகருகே உள்ள செடிகள் எந்தப் போட்டியும் இன்றி வளர்கிறது என்பதும், உண்மையில் அருகருகே உள்ள தாவரங்கள் ஒன்றிற்கொன்று உதவுகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன், மலைப்பயிர்கள் சாகுபடிக்கு இந்தக் கருத்து மிகவும் பொருந்துகிறது.

நாட்டு விதைய நட்டு வச்சு நாலு போகம் எடுக்கலாம்னு என்ற பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! அதிக மகசூல் எடுக்கலாம்னு நினைச்சு ஹைபிரிட் விதைய விதைச்சு ரொம்ப பேரும் இப்படித்தான் ஏமாந்துபோறாங்கோ! நாட்டு விதை தானுங்க நம்ம மண்ணுக்கு ஏத்தது? இதைய கூட மறந்து போற அளவுக்கு நம்மள மாத்தி வச்சிருக்காங்கோ! நாமதானுங்க புரிஞ்சு நடந்துக்கோணும்!

இயற்கை விவசாயத்திற்கு மாறியபின் தோட்டத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்தீர்கள்? நிலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது?

முன்பெல்லாம் சாணி, கோமியத்தைப் பார்த்தால் ஒரு அலர்ஜி, ஆனால் தற்போது நானே சாணியை சுத்தப்படுத்துகிறேன், கோமியம் பிடித்துக் கொள்கிறேன், அதனுடய பலன்களைப் பார்த்தபின் இதைச் செய்ய நான் கூச்சப்படவில்லை.

பூச்சிக்கொல்லிகளை முழுவதுமாக நிறுத்தியதால் நார்த்தையில் மட்டும் பூச்சி தாக்குதல் இருந்தது. முன்னேற்பாடாக பூச்சி விரட்டிக் கரைசல்களை தயார் செய்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம் என்பதை அப்போது கற்றுக் கொண்டேன்.

தொடர்ந்து களை மேலாண்மையில் பல மாற்றங்களைச் செய்தேன். பணியாளர்களிடம் களைகளை வெட்டச்சொல்லாமல், அந்தக் களைகளை அப்படியே மிதித்துவிடச் சொன்னேன். மிதித்து விட்ட களைகளின் மீது காப்பி மரத்தின் கிளைகள், இலைதழைகளை போடச்சொன்னேன், இப்படித் தொடர்ந்து மூடாக்கு இட்டதினால், அந்த மூடாக்கு சில மாதங்களில் நன்கு மக்கி நிலத்திற்கு நல்ல உரமானது.

மண்ணில் நைட்ரஜனை கூட்டுவதற்கும் தழைகளுக்காகவும் உரக்கொன்றை என்ற கிளைரிசிடியா மரக்குச்சிகளை பல வரிசைகளில் நடவு செய்தேன். ஆரம்பத்தில் கிடைத்த குச்சிகளில் ஒரு சிறு குச்சியைக்கூட வீணாக்காமல் அனைத்து குச்சிகளையும் நடவு செய்து மரமாக்கினேன்.

தோட்டங்களில் ஊடுபயிர்களைப் பயிரிட்டு நிலத்தின் மீது சூரிய ஒளிபடாமல் காக்க வேண்டும் அல்லது உயிர் மூடாக்காக செடிகளை வளர்க்க வேண்டும், அதுவும் முடியவில்லை என்றால் இலை தழைகள் மற்றும் செத்தைகளைக் கொண்டு மூடவேண்டும், குறைந்த பட்சம் களைகளையாவது அடியோடு அகற்றாமல் இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் மலைப்பகுதிகளில் நீர் பிடிப்பு அதிகரிக்கும், மண் அரிப்பும் தடுக்கப்படும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

மலைப்பகுதியில் மண் அரிப்பைத் தடுப்பதில் மூடாக்கு இடுவது எந்தெந்த வகையில் உதவுகிறது?

எனது எஸ்டேட்டில் களைகளையெல்லாம் அடியோடு வெட்டிவிடுவதுதான் வழக்கம் (Clean weeding). அப்போது மழை பெய்தால், மேல்மண் அடித்துச் செல்வதையும், செம்மண் கலந்ததினால் மழைநீர் செந்நீராக ஓடியதையும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

தற்போது, அதே நிலத்தில் நான் செய்த சீர்திருத்தங்களால் எவ்வளவு மழை பெய்தாலும் செம்மண் அடித்துச் செல்வதில்லை, நல்ல சரிவான நிலத்தில் கூட மழை நீர் முழுவதும் உள்ளே சென்று விடுகிறது.

ஊடுபயிர், உயிர் மூடாக்கு, களைகள், மூடாக்கு இவையெல்லாம் மழைநீரின் வேகத்தைக் குறைத்து, கடைசியில் மழை ஒரு பூ போல மண்ணில் விழுகிறது, அதன் பின் மண்ணரிப்பு எப்படி ஏற்படும்?

மனசுல களையிருந்தா வெட்டலாமுங்க, மண்ணுல களையிருந்தா என்ன தப்புங்க... அட நல்லதுதானுங்களே?! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி மனசுல எப்பவுமே களையிருக்காதுங்க! ஆனா மண்ணுல களையிருந்தா அதைய வெட்டுறது இல்லீங்கோ! அண்ணா சொன்ன மாறி நானும் அந்த வெகரத்த புரிஞ்சுகிட்டேணுங்க!

மூடாக்கு மண்அரிப்பை மட்டும்தான் தடுக்கிறதா? பயிர்களுக்கு மூடாக்கு எந்தெந்த வகையில் உதவுகிறது?

பொதுவாக மிளகில் ஏற்படக்கூடிய வாடல் நோயினால் (Quick wilt) கொடி உடனடியாக இறந்து விடும். இந்த வாடல் நோய் மழைக்காலங்களில் நீர் தேங்குவதினால் ஏற்படக்கூடியது. மூடாக்கு இடுவதினால் மண் பொலபொலப்பு தன்மை ஏற்பட்டு காற்றோட்டம் அதிகரித்துள்ளதால் நோய் தாக்குதல் பெரும்பாலும் குறைந்துள்ளது.

மேலும் மழைநீர், மண்ணில் விழுந்து தெரிக்கும்போது, மழைநீருடன் மண்ணும், மண்ணில் உள்ள பூஞ்சனங்களும் சேர்ந்தே தெரிக்கும், இந்தப் பூஞ்சனங்களே வாடல் நோயை ஏற்படுத்தக் கூடியவை. மூடாக்கு இடுவதினால் மண் மூடப்படுகிறது, மழைநீரும் அதிகமாகத் தெரிப்பதில்லை, வாடல்நோயும் குறைந்துள்ளது.

கடன் இன்றி காப்பி விவசாயம்... அசத்தும் கொடைக்கானல் விவசாயி!, kadan indri coffee vivasayam - asathum kodaikkanal vivasayi

இரசாயனத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறியபின்பு மிளகு மகசூல் அதிகரித்துள்ளதா?

இயற்கை விவசாயத்தில் சில ஆண்டுகள்தான் அனுபவம் என்றாலும் மிளகுப் பயிர் இயற்கை விவசாயத்திற்கு மிகவும் உகந்த பயிர் என்பதைத் தெரிந்து கொண்டேன், அந்த அளவுக்கு மகசூல் அதிகரித்துள்ளது.

இரசாயன விவசாயம் செய்யும்போது ஒரு கொடிக்கு சுமார் 2 கிலோ மகசூல் கிடைக்கும். தற்போது ஒரு கொடிக்கு 3 கிலோ வரை கிடைக்கிறது. 2000 மிளகுக்கொடிக்கு மூன்று முதல் மூன்றேகால் டன் வரை மகசூல் கிடைக்கிறது.

மலைபயிர்களில் காப்பி ஒரு முக்கியமான பயிர், இயற்கை விவசாயத்தில் காப்பி எப்படி இருக்கிறது?

எங்கள் பண்ணையில் காப்பியா அராபிக்கா ரகத்தைத்தான் பயிர் செய்துள்ளேன், இந்த ரகம் ரொபஸ்டா ரகத்தை விட சுவையானது, ஆனால் இதில் துரு நோய் (Rust disease) தாக்குதல் இருக்கும். இந்த நோயை இயற்கை முறையில் ஓரளவுதான் கட்டுப்படுத்த முடிகிறது, மற்றபடி காப்பி இயற்கை விவசாயத்தில் நன்றாகவே இருக்கிறது.

துரு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா?

எனது தோட்டத்தில் துரு நோய் தாக்காத காப்பி செடிகளும் இருக்கிறது, அந்தச் செடிகளில் இருந்து விதைகளை சேகரித்து தனியாக நாற்றுகளை உற்பத்தி செய்யவிருக்கிறேன், அந்த நாற்றுகள் நோய் எதிர்ப்புத் திறன் உடையதாக இருக்கும். எனினும், இதை நடைமுறைப்படுத்த பல வருடங்கள் ஆகும்.

இரசாயனத்தில் இருந்து இயற்கைக்கு மாறிய பின் வருமானம் உயர்ந்திருக்கிறதா?

லாபம் அதிகரிக்க வில்லை, ஆனால் செலவு குறைந்திருக்கிறது, இதனால் மொத்த வருமானம் அதிகரித்திருக்கிறது. முதலில் ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் வரை செலவு செய்து வந்தேன். உரம், பூச்சிக்கொல்லி, களையெடுப்பு போன்றவற்றிற்கு செய்த செலவுகள் தற்போது மிச்சமாகியிருக்கிறது. ஏக்கருக்கு வேலையாள் கூலி, ஸ்பிரே செய்ய டீசல், மற்ற சில செலவுகள் எல்லாம் சேர்த்து தற்போது 15 ஆயிரம் மட்டும்தான் செலவாகிறது, எனக்கு 20 ஆயிரம் செலவு குறைந்துள்ளது, இது லாபம்தானே!

ஜீவாமிர்தம் தயாரிக்க கோமியம், சாணத்திற்கு என்ன செய்கிறீர்கள்?

வத்தலகுண்டில் உள்ள எனது வீட்டிலேயே நான்கு நாட்டு மாடுகளை வைத்திருக்கிறேன், ஜீவாமிர்ததுக்கு தேவையான சாணி மற்றும் கோமியத்தை இங்கு கொண்டு வருவது எனக்கு சுகமான சுமையாக இருக்கிறது. முன்பெல்லாம் சாணி, கோமியத்தைப் பார்த்தால் ஒரு அலர்ஜி, ஆனால் தற்போது நானே சாணியை சுத்தப்படுத்துகிறேன், கோமியம் பிடித்துக் கொள்கிறேன், அதனுடய பலன்களைப் பார்த்தபின் இதைச் செய்ய நான் கூச்சப்படவில்லை.

தூக்குறது தங்கமா இருந்தா ஏழுமலை ஏறுனாலும் சுமை தெரியாதுன்னு என்ற அப்பாரு அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! இங்க நம்ம அண்ணா சாணத்தையும் கோமியத்தையும் தங்கமா நினைச்சிருக்காருன்னு நல்லா புரியுதுங்கோ!

மிளகு மற்றும் காப்பியை தவிர வேறு என்னென்ன பயிர் செய்து வருகிறீர்கள்?

காப்பி மரத்திற்கு நிழல் மரங்களாக பலா, மகோகனி, சில்வர்ஓக், வேம்பு, நாட்டு வாகை, சேலை போன்ற மரங்களை வைத்திருக்கிறேன். மிளகுக் கொடிகளை இந்த மரங்களில்தான் ஏற்றிவிட்டுள்ளேன்.

இவை தவிர்த்து நார்த்தங்காய், விருப்பாச்சி மலைவாழை, சர்வசுகந்தி (All Spices), வெண்ணைப்பழம் (Butter Fruit), ஆரஞ்சு, லவங்கப்பட்டை, லிச்சி போன்றவற்றையும் பயிர் செய்துள்ளேன்.

சர்வ சுகந்தி என்பது வாசனையுள்ள காய்களைத் தரக்கூடியது, இந்தக் காய் கிராம்பு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை போன்ற மூன்று நறுமணங்களையும் கொண்டிருக்கும், நம்நாட்டில் அதிகம் பயன்படுத்துவதில்லை, பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறு தக்காளி, காந்தாரி மிளகாய், காட்டு சுண்டை போன்ற களைச்செடிகளின் மூலமும் தற்போது வருமானம் பெற்று வருகிறேன்.

மலைவாழை நல்ல உயரமான பயிர், இலைகளைக்கூட கழிப்பதில்லை, குலைகளை மட்டும் தொரட்டியால் அறுத்து வெட்டிய மரத்தை அப்படியே விட்டுவிடுகிறேன்.

இறுதியாக அவர் கூறிய விஷயங்கள் ஒவ்வொரு விவசாயிக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது...

இரசாயன விவசாயம் செய்யும்போது எப்போதும் ஒரு மனஉளைச்சல் இருக்கும், உரக்கடைக்குக் காசு கொடுக்க வேண்டும், வங்கிக்கு வட்டி கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும், அது ஒரு பாதிப்பாகவே எனக்கு இருந்தது. இயற்கை விவசாயத்திற்கு மாறியபின் இவ்வகையான பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறேன், தற்போது உரத்துக்காக எந்த கடனும் வாங்க வேண்டியதில்லை, உரக்கடைகளுக்கு அலைய வேண்டிய அவசியமுமில்லை.

இயற்கையில் வளர்வோம், இயற்கையை வளர்ப்போம்

பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது தோழிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், வகுப்புக்குப் பிறகும் ஈஷாவின் தொடர்ந்த வழிகாட்டுதல் எனக்கு பக்க பலமாக இருக்கிறது. தற்போது எனது பணியாளர்களுக்கு Nurture by Nature என்ற வாசகத்தைதான் சொல்லி வருகிறேன், என்று மன நெகிழ்ச்சியுடன் விவரித்த திரு. மகேஷ் நாராயணன் அவர்களுக்கு ஈஷா விவசாயக் குழுவினர் நன்றி கூறி விடைபெற்றனர்.

தொடர்புக்கு:
திரு. மகேஷ் நாராயணன்: 94892 68656, 98421 99516

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம்: 83000 93777