ஈஷாவில் 5ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்...

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18 வரை) விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன.9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் கலைத்தாமரை நாட்டுப்புற கலைக் குழுவினர் அவர்களின் காவடி மற்றும் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

நாட்டுப்புற கலை வடிவங்களை வழங்கி சிறக்கச் செய்த குழுவினர்!

day5-navarathri2018-ishayogacenter-tamilblog-subimg-collage1

ஈஷாவில் நடைபெறும் ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தில், 5ஆம் நாள் திருவிழாவான நேற்று கன்னியாகுமரியைச் சேர்ந்த கலைத்தாமரை குழுவினரின் காவடி மற்றும் கரகாட்ட கலைநிகழ்ச்சி அரங்கேறியது. கலைக்குழுவின் தலைவர் முனைவர் திரு.பரந்தாமன் அவர்கள் தமிழகத்தின் இந்த பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவத்தை தன் வாழ்க்கையாக்கிக் கொண்டு போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்து வருகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடந்த இரண்டு வருடங்களாக ஈஷா நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்குபெறும் இந்த கலைதாமரைக் குழுவினர் மத்திய அரசின் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் தங்கள் கலைநிகழ்ச்சிகளை புதுமையான வழிகளில் மக்களிடம் கொண்டுசேர்த்து வருகின்றனர்.

day5-navarathri2018-ishayogacenter-tamilblog-subimg-collage2

இந்த நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சியானது நம் தமிழக பாரம்பரிய முறைப்படி மங்கள இசையுடன், நிகழ்ச்சியைக் காண வருகைதந்த பார்வையாளர்களுக்கு வந்தனம் செய்து நன்றி செலுத்தும் வகையில் 'வணக்க பாடல்' மூலம் துவங்கப்பட்டது.

கரகாட்டம், காவடியாட்டம், நந்தியாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற அரிய நாட்டுப்புறக் கலை வடிவங்களை நாட்டுப்புறக் கலை குழுவினர் பார்வையாளர்களுக்கு விருந்தாக்கி நிகழ்ச்சியை சிறக்கச் செய்தனர்.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிப்பாள்.

இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

இன்று…

ஆறாம் நாள் விழாவான இன்று (அக்டோபர் 15) ரமணா பாலசந்தர் அவர்களின் வீணை இசை நிகழ்ச்சி நிகழவுள்ளது.

நாளை...

ஏழாம் நாள் விழாவான நாளை (அக்டோபர் 16 ) ஸ்ரீமதி ரம்யா அவர்களின் நாட்டுப்புற இசைப்பாட்டு நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !